சென்னை: தமிழக பா.ஜ.,வில் முருகன், அண்ணாமலை ஆகியோருக்கு ஒரே நேரத்தில் கிடைத்த பதவி உயர்வால், ஒட்டுமொத்த கட்சியினரும் உற்சாகம் அடைந்துள்ளனர். அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் சாதித்தால், பொதுத் துறை மற்றும் மத்திய அரசின் வாரியங்களில் முக்கிய பொறுப்புகள் வழங்கவும் டில்லி தலைமை உறுதி அளித்துள்ளது. இதற்காக,அ.தி.மு.க., அணியில் 25 சதவீத இடங்களை கேட்டு பெறவும், கட்சியில் இளைஞர்களை அதிகளவில் சேர்க்கவும், மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., - பா.ஜ., இடையே தொகுதி பங்கீடு பேச்சில் இழுபறி ஏற்பட்டது. இதனால், 'அ.தி.மு.க.,வை மிரட்டி, பா.ஜ., 60 தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கிறது' என, எதிர்க்கட்சிகள்தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டன.
அதிக கவனம்
தமிழக அரசியல் கள நிலவரத்தை நன்கு உணர்ந்திருந்த பா.ஜ., 20 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது. மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடந்ததால், பா.ஜ., தேசிய தலைவர்கள், அம்மாநிலங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காணும் பணியை, தேசிய தலைமை, தமிழக பா.ஜ.,வுக்கு வழங்கி விட்டது.பா.ஜ.,வினர் பெரிதும் எதிர்பார்த்த மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, ராசிபுரம், ராஜபாளையம் போன்ற தொகுதிகளை அ.தி.மு.க., ஒதுக்கவில்லை. இதனால், அக்கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும், அதை காட்டிக் கொள்ளாத பா.ஜ., தொண்டர்கள், தங்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகள் மட்டுமின்றி, அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரம் செய்தனர்.
இதன் பலனாக, திருநெல்வேலி, கோவை தெற்கு, மொடக்குறிச்சி, நாகர்கோவில் ஆகிய நான்கு தொகுதிகளில் பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற்று, 20 ஆண்டுகளுக்கு பின், தமிழக சட்டசபைக்குள் நுழைந்து உள்ளனர்.தேர்தல் தோல்வியை ஆராய்ந்த தேசிய தலைவர்கள், இளைஞர்களை அதிகம் சேர்த்து, கட்சியை பலப்படுத்துமாறு தமிழக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதுடன், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகள் வழங்க திட்டமிட்டனர்.
இதன்படி, தமிழக பா.ஜ., தலைவராக இருந்த முருகன், மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு ஒரு எம்.பி., கூட இல்லாத நிலையில், பா.ஜ., ஆளும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் இருந்து, முருகன் ராஜ்யசபாஎம்.பி.,யாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
'பூத்' கமிட்டி கூட்டம்
அவர் வகித்த தலைவர் பதவிக்கு, இளைஞரான முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களை தொடர்ந்து, மேலும் தீவிரமாக கட்சி பணியாற்றுவோருக்கு கட்சியில் முக்கிய பதவிகளை அளிக்கவும், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் இயக்குனர், வாரிய தலைவர் போன்ற பதவிகளை வழங்கவும் தேசிய தலைமை திட்டமிட்டு உள்ளது. எனவே, விரைவில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் சாதித்தால், தங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகள் கிடைக்கும் என பா.ஜ.,வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதனால், உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், மாநகராட்சி, நகராட்சி என, தேர்தல் நடக்கும் மொத்த இடங்களில் குறைந்தது, 25 சதவீத இடங்களை கேட்டு வாங்கி, வெற்றி பெற முடிவு செய்துஉள்ளனர்.
இதற்காக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவது, 'பூத்' கமிட்டி கூட்டம் நடத்துவது, வேட்பாளராக நிறுத்த, மக்களிடம் செல்வாக்கு உள்ள நிர்வாகிகளை அடையாளம் காண்பது என, தமிழக பா.ஜ.,வினர் படு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE