புதுடில்லி:கட்சியை வலுப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகத்தில் சில அதிரடி மாற்றங்களை செய்ய, கட்சிதலைமை முடிவு செய்து உள்ளது. சச்சின் பைலட், கார்கே உள்ளிட்டோருக்கு முக்கிய பதவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் காங்., கட்சி, படுதோல்வி அடைந்தது. இதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று, அப்போதைய காங்., தலைவர் ராகுல் பதவி விலகினார். தற்காலிக தலைவராக சோனியா மீண்டும் பொறுப்பேற்றார். கடந்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களிலும், காங்., தோல்விகளை சந்தித்தது.
இதற்கிடையே காங்., ஆளும் மாநிலங்களில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டிற்கு இடையே பனிப்போர் நிலவுகிறது.குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்., மூத்த தலைவர்கள் 23 பேர், கட்சி தலைமைக்கு எதிராக கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கட்சியை வலுப்படுத்தும் வகையில், நிர்வாக ரீதியில் சில மாற்றங்களை செய்ய கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாபில் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன. அதற்குள், இந்த அதிரடி மாற்றங்களை செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி மாநில காங்., தலைவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது.
சோனியா, பிரியங்கா உள்ளிட்டோர் தற்போதைய பதவிகளில் நீடிப்பர் எனக் கூறப்படுகிறது. மூத்த தலைவர்களான சச்சின் பைலட், மல்லிகார்ஜுன கார்கே, டி.எஸ்.சிங் தியோ உள்ளிட்டோரை, தேசிய அரசியலுக்குள் நுழைத்து கட்சியை வழிநடத்தும் வகையில் அவர்களுக்கு பல முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன.கட்சி தலைமைக்கு எதிராக குரல் கொடுத்த 23 தலைவர்களும் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துஉள்ளன.