சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது!

Updated : ஜூலை 11, 2021 | Added : ஜூலை 11, 2021
Share
Advertisement
'இவ்வளவு வயதாகியும், இந்த வீண் கவுரவம் இன்னும் இவருக்கு போகவில்லையே...' என, ராஜஸ்தான் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான அசோக் கெலாட்டை கிண்டலடிக்கின்றனர், சக அரசியல்வாதிகள். ராஜஸ்தான் காங்கிரசில் கடந்த சில மாதங்களாகவே கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் கெலாட்டும், சச்சின் பைலட்டுக்கும் எப்போதுமே ஆகாது. சில மாதங்களுக்கு முன், தன் ஆதரவாளர்களுடன்

'இவ்வளவு வயதாகியும், இந்த வீண் கவுரவம் இன்னும் இவருக்கு போகவில்லையே...' என, ராஜஸ்தான் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான அசோக் கெலாட்டை கிண்டலடிக்கின்றனர், சக அரசியல்வாதிகள்.

ராஜஸ்தான் காங்கிரசில் கடந்த சில மாதங்களாகவே கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் கெலாட்டும், சச்சின் பைலட்டுக்கும் எப்போதுமே ஆகாது. சில மாதங்களுக்கு முன், தன் ஆதரவாளர்களுடன் பா.ஜ.,வுக்கு தாவி, கெலாட் அரசை கவிழ்க்க திட்டமிட்டார் சச்சின் பைலட்.ராகுலும், பிரியங்காவும் சமாதானப்படுத்தியதால், அந்த திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து உள்ளார்.

இதற்கு பரிகாரமாக தன் ஆதரவாளர்களுக்கு ராஜஸ்தான் அமைச்சரவையில் இடம் ஒதுக்கும்படி சச்சின் பைலட் வலியுறுத்தி வந்தார். இதனால் கடும் கோபம் அடைந்த கெலாட், 'எனக்கு கொரோனா அறிகுறி உள்ளது. தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளேன். இன்னும் இரண்டு மாதங்களுக்கு யாரையும் சந்திக்க மாட்டேன்' என, கோபத்துடன் தெரிவித்தார்.

அதை பின்பற்றும் வகையில், 15 நாட்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தார். அதற்கு மேல் அவரால் முடியவில்லை. மீண்டும் தலைமைச் செயலகத்துக்கு வந்து, பணிகளைத் துவக்கியுள்ளார்.

இதைக் கேள்விப்பட்ட சச்சின் பைலட் ஆதரவாளர்கள், 'தேவையில்லாமல் எதற்கு பிடிவாதம் பிடிக்கிறார். எங்களுக்கு தேவை அமைச்சர் பதவி; அதைத் தரவில்லை என்றால் மீண்டும் விரட்டுவோம். இதற்கு பின், அவரால் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது' என, கேலி பேசுகின்றனர்.


பேசியது தவறா?


'பழைய பகையை இன்னும் மறக்கவில்லை. அந்த கோபம் தான், அவரது வார்த்தைகளில் எதிரொலிக்கிறது' என, கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச் சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமியைப் பற்றி கூறுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.

கர்நாடகாவின் மாண்டியா லோக்சபா தொகுதியில் 2019ல் நடந்த தேர்தலில், மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில், குமாரசாமியின் மகன் நிகில் கவுடா போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ., ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் நடிகை சுமலதா வெற்றி பெற்றார். இதனால் சுமலதா மீது குமாரசாமியும், அவரது குடும்பத்தினரும் கடும் கோபத்தில் உள்ளனர்.

இரண்டு ஆண்டுகள் முடிந்தாலும், அந்த பகையை குமாரசாமி இன்னும் மறக்கவில்லை. சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த சுமலதா, கிருஷ்ணராஜ சாகர் அணையில் கசிவு ஏற்படுவதாக கூறினார்.

தேவையில்லாமல் இந்த விஷயத்தில் மூக்கை நுழைத்த குமாரசாமி, 'அணையில் கசிவு ஏற்பட்டால், சுமலதாவே அதை சரி செய்யலாம்' என்றார். மேலும், 'தன் தொகுதியின் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாமல், தன் கணவரும், கன்னட நடிகருமான அம்பரீஷ் மறைவை கூறியே, சுமலதா, மக்களின் அனுதாபம் தேடுகிறார்' என்றார்.

குமாரசாமியின் இந்த பேச்சுக்கு, கட்சி வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும், அவரை பலரும் வறுத்தெடுக்கின்றனர்.

குமாரசாமியோ, 'நான் அப்படி என்ன தவறாக கூறி விட்டேன்' என, அப்பாவியாக கேட்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X