வருகிறது பொது சிவில் சட்டம்! என்ன சொல்கின்றனர் இஸ்லாமியர்கள்?

Updated : ஜூலை 11, 2021 | Added : ஜூலை 11, 2021 | கருத்துகள் (42) | |
Advertisement
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம்.சிங், மத்திய அரசுக்கு பரிந்துரைத்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.இதையடுத்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆக., 5ல், அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலை உள்ளது. இப்படி தகவல் பரவியதுமே, பொது சிவில் சட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும்

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம்.சிங், மத்திய அரசுக்கு பரிந்துரைத்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.latest tamil news


இதையடுத்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆக., 5ல், அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலை உள்ளது. இப்படி தகவல் பரவியதுமே, பொது சிவில் சட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்து மோதல்கள் துவங்கி இருக்கின்றன. இரு தரப்பு கருத்துக்கள் வருமாறு:


பேராசிரியர் ஹாஜா கனி, பொதுச்செயலர் - பொறுப்பு, தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்:

'யூனிபார்ம் சிவில் கோடு' என்று சொன்னால், பொது சிவில் சட்டம் என, மொழி பெயர்த்து சொல்கின்றனர். அது தவறு. ஒரே மாதிரியான குடிமை சட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.இந்திய அரசியல் சட்டத்திலேயே, ஒரே மாதிரியான குடிமை சட்டம் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது என்பர். அதே இந்திய அரசியல் சட்டத்தின், வழிகாட்டு நெறிமுறைகளில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்று, பார்க்க வேண்டும். மேலும், 14 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு, கட்டாய கல்வி கொடுக்க வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்; அதை செய்து விட்டோம் என, மோடி அரசால் சொல்ல முடியுமா? அதேபோல, பூரண மதுவிலக்கை, மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்றும், அதே வழிகாட்டு நெறிமுறைகளில் சொல்லப்பட்டிருக்கிறது. நடைமுறையில் சாத்தியமாகி இருக்கிறதா?அரசியல் சட்டத்தின் படி, அதில் கூறப்பட்டிருக்கும் விஷயத்தைத் தான் செய்கிறோம் என்று சொன்னால், மேற்சொன்னவற்றையும் செய்திருக்க வேண்டுமா இல்லையா?

இப்படி செய்யப்படாத விஷயங்கள், எத்தனையோ உள்ளன. அதையெல்லாம் விட்டு விட்டு, எப்போதெல்லாம் மத்திய அரசுக்கு சிக்கல்கள் வருகிறதோ, உடனே, அதை திசை திருப்புவதற்காக, இப்படிப்பட்ட பிரச்னைகளை கையில் எடுக்கின்றனர்.'தன் ஆட்சி அதிகாரத்துக்குள் வாழும் சிறுபான்மையின மக்களை பீதிக்குள்ளாக்கும் அரசை, மன நலம் குன்றிய அரசாகத்தான் கூறுவேன்' என, இந்திய அரசியல் சட்ட மேதை அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். அப்படி பார்க்கையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக, மோடி அரசு சொல்லுமானால், அம்பேத்கர் கூற்றுப்படி, மோடி அரசு மனம் நலம் குன்றிய அரசு தான். தண்டனைமுஸ்லிம்களை குறிவைத்து தான், இந்த சட்டத்தையே அமல்படுத்த நினைக்கின்றனர்.

திருமணம், மணவிலக்கு, பாகப் பிரிவினை, வக்பு சொத்துக்கள் நிர்வாகம் உள்ளிட்ட, நான்கு பிரதான விஷயங்களில் மட்டுமே, முஸ்லிம்களுக்கு தனித்த சுதந்திரம் இருக்கிறது. இவை எல்லாமே, முஸ்லிம் மதத்துக்குள்ளேயே பேசி முடிக்கக் கூடியவை. வேற்று மதத்தவர், இந்த சம்பிரதாய, சடங்குக்குள் வரவே மாட்டார்கள். அதனால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அப்படி இருக்கும் போது, முஸ்லிம்களுக்கு மட்டும், இந்த நாட்டில் தனித்த உரிமைகளும், அதிகாரமும் இருப்பது போலவும், அதை எப்படியாவது பறித்துவிட வேண்டும் என, நினைப்பதே தவறு. மற்றபடி, இந்திய தண்டனைவியல் சட்டத்தின் படி, முஸ்லிம்களுக்கு ஒரு தண்டனையோ, பிற மதத்ததவர்களுக்கு கூடுதல் தண்டனையோ இல்லை. வாடகைதாரர் சட்டம், வங்கி பணபரிவர்த்தனை தொடர்பான பிரச்னைகள் என, எல்லாமே மற்ற மதத்தவருக்கு என்ன விதிகளோ, சட்டமோ, அதே தான் முஸ்லிம்களுக்கும்.

மோடி அரசு, தேவைஇல்லாமல் முஸ்லிம்களை சட்டத்தின் துணை கொண்டு நசுக்க, பல்வேறு முயற்சிகளை ஏழு ஆண்டுகளாக எடுக்கிறது.இப்படித்தான், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் என்று, ஒன்றைக் கொண்டு வந்து, முஸ்லிம்களை அழிக்க நினைத்தனர். ஆனால், என்ன நடந்தது? உலகம் முழுதும் இதை மக்கள் கண்டித்தனர். இந்தியாவிலும் மக்கள் விழித்துக் கொண்டு, பெரும் போராட்டம் நடத்தினர். இப்ப என்னாச்சு? அப்படித்தான், பொது சிவில் சட்ட அறிவிப்பும் இருக்கும். மக்கள் முன்னர் போல் இல்லை. எல்லாரும் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். கெட்ட எண்ணத்தோடு மோடி அரசு, எந்த அறிவிப்பை வெளியிட்டாலும், அது கிடப்புக்குத் தான் போகும்.


பாத்திமா அலி, மாநில தலைவர், முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச்:

மத்திய அரசின் முயற்சியை வரவேற்கிறேன். ஒரே நாட்டில், ஆளுக்கொரு சட்டம் இருக்க முடியாது. அதனால் தான், மத்திய அரசு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கிறது. அதைத் தான், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியும் சொல்லியிருக்கிறார்.அரசியல் சட்டமும், மதச் சட்டங்களும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், பொது சிவில் சட்டம் தேவையில்லை. ஆனால், வேறு வேறாக இருப்பதால் தான், பொது சிவில் சட்டம் தேவைப்படுகிறது. இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை, இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றுகின்றனர். அதில் உள்ள சில ஷரத்துக்களை மட்டும், இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் பின்பற்றுகின்றனர். இஸ்லாமிய நாடுகளில் திருடினால் கையை வெட்டுகின்றனர்; பெண்களை வன்புணர்வு செய்தாலோ, சீண்டினாலோ மரண தண்டனை கொடுக்கின்றனர்; ஆண் உறுப்புகளை வெட்டுகின்றனர். அதெல்லாமே ஷரியத் சட்டப்படி தான் நடக்கிறது. ஷரியத் சட்டத்தை பின்பற்றுகிறோம் என கூறும், இந்திய வாழ் முஸ்லிம்கள் மட்டும், அதை மட்டும் ஏற்க மறுப்பது ஏன்?

ஒரு சில விஷயங்களுக்கு மட்டும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தை பின்பற்றுவராம். 'முத்தலாக்' போன்ற சிவில் பிரச்னைகளுக்கு, ஷரியத் சட்டத்தை கையாளுவராம். அதிலும் நீதி கிடைத்தால், எல்லாரும் ஏற்கத்தான் செய்வர். அங்கே நீதி கிடைக்கவில்லை என்றதும், நியாயம் தேடி முஸ்லிம் பெண்கள், பொது வெளிக்கு வருகின்றனர். போலீஸ், நீதிமன்றங்களுக்கு செல்கின்றனர். ஆக, ஷரியத் சட்டம் தோல்வி தானே. அதனால் தான், எல்லாருக்கும் பொதுவான சட்டம் கொண்டு வரப்படுகிறது. ஷரியத் சட்டத்தின் கீழ் நியாயம் கிடைத்திருந்தால், சாய்ரா பானு, ஷாபானு போன்றவர்கள், ஏன் நியாயம் கேட்டு கோர்ட்டுக்கு வர வேண்டும்? எப்போது ஒரு விஷயம் பொது வெளிக்கு வருகிறதோ, அப்போது, அரசு தலையிட்டுத் தானே ஆக வேண்டும். அப்படித் தான், முத்தலாக் தடை சட்டமே கொண்டு வரப்பட்டது.எதிர்ப்பு'எங்களுக்குள் பிரச்னையை தீர்த்துக் கொள்கிறோம்; இதனால், மாற்று மதத்தவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை' என்ற, வாதம் முன்வைக்கப்படுகிறது.


latest tamil news


உங்களுக்குள் பிரச்னை சரியாக தீர்க்கப்படாததாலேயே தானே, பலரும் வெளியே வந்து, வழக்குப் போடுகின்றனர். அதை தவிர்க்கவே பொது சிவில் சட்டம்.இஸ்லாமிய நாடுகளில் வாழும் இந்தியர்கள், தங்களுக்கென தனி சட்டத்துடன் வாழ முடியாது. அந்த நாட்டு சட்டங்களை மதித்துத் தான் நடக்க வேண்டும். உலகம் முழுதும் இது தான் நிலை. அப்படி இருக்கும்போது, இந்தியாவுக்குள் இருக்கும் இந்திய முஸ்லிம்களுக்கு மட்டும், தனித்த சட்டம் தேவையில்லை. எதற்கெடுத்தாலும், ஷரியத் சட்டத்தின் கீழ், நாங்கள் தீர்த்துக் கொள்கிறோம் என சொல்கின்றனர். ஆனால், ஷரியத் சட்டம் சொல்லாத, ஒரு விஷயத்தை பின்பற்றித் தான், 'தலாக்' சொல்லி, மண முறிவு செய்கின்றனர். 'தலாக்... தலாக்... தலாக்...' என மூன்று முறைச் சொல்லி, மண முறிவு செய்கின்றனர்.

இப்படி முஸ்லிம் பெண்களுக்கு, இந்தியா முழுதும் அநீதி இழைத்தனர். அதனால் தான், மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது. அதற்கு, முஸ்லிம் பெண்கள் மத்தியில், அமோக வரவேற்பு இருக்கிறது. அப்படித்தான், பொது சிவில் சட்டத்திலும் இருக்கும் நிறைகளைப் பார்த்து, முஸ்லிம்கள் பலரும் ஆதரிக்க தயாராக இருக்கின்றனர். ஜமாத்தில் அமர்ந்து கொண்டு, முஸ்லிம் மக்களை தவறாக வழி நடத்தும் சிலர் தான், பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

-- நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
14-ஜூலை-202115:17:58 IST Report Abuse
INDIAN Kumar அனைவரும் சமம் அனைவருக்கும் ஒரே சட்டம் பொருந்தும். நல்ல மக்கள் இதை ஆதரிக்கத்தான் செய்வார்கள்.
Rate this:
Cancel
11-ஜூலை-202121:47:00 IST Report Abuse
theruvasagan ஒரு குடிமகனாக முதலில் நான் இந்தியன் என்று உணர்வு ஒருவனுக்கு வந்தால் சட்டத்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அந்த நினைவு இல்லாதவன்தான் இதைப் பார்த்து பயப்படணும்.
Rate this:
Cancel
11-ஜூலை-202118:20:43 IST Report Abuse
பேசும் தமிழன் ஷ்ரியத் சட்டம் வேண்டும்... இந்திய சட்டம் தேவை இல்லை என்று கூறும் யாரும்... நாங்கள் களவு செய்தால் எங்கள் கையை வெட்டுங்கள் என்றோ... கொலை செய்தால்.. பெண்கள் மீது வன் கொடுமை செய்தால் மரண தண்டனை கொடுங்கள் என்று ஏன் சொல்வது இல்லை.... அதனால் தான் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று சொல்கிறார்கள்.... ஒன்று வேண்டுமானால் செய்யலாம் ஷரியத் சட்டம் வேண்டும் என்பவர்கள் யார் தவறு செய்தாலும் அதே சட்டபடி தண்டனை வழங்கலாம்... இந்திய சட்டம் தேவை என்று சொல்பவர்கள் தவறு செய்தால் அந்த சட்டப்படி குறைந்த தண்டனை கொடுக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X