லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி பல மாவட்டங்களில் வன்முறை வெடித்துள்ள நிலையில், கவுன்சிலர் ஒருவரை ஆளுங்கட்சியினர் கடத்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அதனை படம்பிடித்ததற்காக டிவி நிருபர் ஒருவர் அங்கிருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியால் கடுமையாக தாக்கப்பட்டார்.
உத்தர பிரதேசத்தில் நேற்று (ஜூலை 10) நடைபெற்ற வட்டார பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் 17 மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக பா.ஜ., மற்றும் சமாஜ்வாதி கட்சி நிர்வாகிகள் கடுமையாக தாக்கிக் கொண்டனர். தங்களை வாக்களிக்க விடாமல் ஆளுங்கட்சியினர் தடுப்பதாக எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் பல இடங்களில் புகார் தெரிவித்தனர். பா.ஜ.,வினர் தாங்கள், பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றதாக கூறுகின்றனர். முதல்வர் யோகி ஆதித்யநாத், இதுவரை 635 இடங்களை வெற்றிருப்பதாக கூறினார். இந்த எண்ணிக்கை மேலும் கூடும் என்றார். முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பா.ஜ., மோசடியில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் உன்னாவ் மாவட்டத்தில் கவுன்சிலர் ஒருவரை வாக்களிக்க விடாமல் தடுக்க, அவரை கடத்தியுள்ளனர். அதற்கு உன்னாவ் தலைமை வளர்ச்சி அதிகாரி தியான்ஷு படேல் ஐ.ஏ.எஸ்., உதவியதாக கூறப்படுகிறது. இதனை தொலைக்காட்சி நிருபர் ஒருவர் அலைபேசியில் வீடியோ எடுப்பதை கண்ட அதிகாரி, அடியாள் போல துரத்திச் சென்று அவரை கடுமையாக தாக்கினார். அருகிலிருந்த சக நிருபர்கள் கூச்சலிட்ட போதும் விடவில்லை. இக்காட்சிகள் படமாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் கண்டனத்தை பெற்றது. அதன் பிறகு அவர் மன்னிப்பு கோரினார். அந்த அதிகாரிக்கு எதிராக நிருபரிடமிருந்து புகார் பெற்றுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உன்னாவ் கலெக்டர் ரவீந்திர குமார் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE