சென்னை, ஜூலை 12- மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வு காணக்கோரி, சட்டசபை கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.,க்களுடன் முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்று, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முறையிடுவது என, இன்று நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில், தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. அணை தொடர்பான வழக்குகளில் விரைந்து முடிவு எட்டும் வகையில், சுப்ரீம் கோர்ட்டில் சட்டப்போராட்டத்தை தொடர்வதிலும், அரசு உறுதியாக உள்ளது.
காவிரியின் குறுக்கே, ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளை, கர்நாடக அரசு கட்டிஉள்ளது. தற்போது, மேகதாது என்ற இடத்திலும், 9,000 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக அணை கட்ட தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த அணை வாயிலாக, இரண்டு நீர் மின் உற்பத்தி திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.
177.25 டி.எம்.சி., நீர்
இந்த அணை கட்டப்பட்டால், தமிழகத்தில் பாயும் காவிரியில் நீரோட்டம் பாதிக்கப்படும். பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு, கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பை மட்டுமே நம்பியிருக்க வேண்டி இருக்கும். கர்நாடக அணைகளில் இருந்து ஆண்டு தோறும், 177.25 டி.எம்.சி., நீரை திறக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை, கர்நாடகா அரசு முழுமையாக செயல்படுத்துவதில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், மாத ஒதுக்கீட்டு நீரை, கர்நாடகா அரசு முறைப்படி விடுவிப்பதும் இல்லை.எனவே, மேகதாது அணை கட்டுவதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கர்நாடகாவில், 2023 மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அதற்குள், கர்நாடக விவசாயிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில், மேகதாது அணையை கட்டி முடிக்க, அம்மாநில அரசு முயற்சிக்கிறது.
எடியூரப்பா பிடிவாதம்
அணையை கட்டுவதில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா உறுதியாக உள்ளார். அணை கட்டுவதற்கு, தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் சமீபத்தில் கடிதம் எழுதினார். அதற்கு பதில் கடிதம் எழுதிய ஸ்டாலின், 'மேகதாது அணை இரண்டு மாநில நல்லுறவை பாதிக்கும். இந்த திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
இதனிடையே, மேகதாது அணை பிரச்னை குறித்து, சமீபத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்து, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முறையிட்டார். 'தமிழக ஒப்புதல் இன்றி, அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்' என, மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாகவும் துரைமுருகன் கூறினார்.
அனைத்து கட்சி கூட்டம்
இதன் பிறகும், மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாகஉள்ளது. இது, தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இப்பிரச்னை குறித்து விவாதிக்க, சட்டசபையில் இடம் பெற்றுள்ள,அனைத்து கட்சிகளின் கூட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று கூட்டியுள்ளார். இந்த கூட்டம், தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை வளாகத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கவுள்ளது. இதில், சட்டசபையில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
அவர்களிடம், மேகதாது அணை கட்டாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து, கருத்து கேட்கப்பட உள்ளது. கட்சி தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அடிப்படையில், ஒருமித்த முடிவு எடுக்கப்படும்.
ஆலோசனை
மேகதாது அணை விவகாரம் குறித்து, தமிழக சட்டசபையில், ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக, சட்டசபை கட்சி தலைவர்கள், எம்.பி.,க்கள், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் டில்லி சென்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து முறையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடக அரசியல் கட்சிகளிடையே உள்ள ஒற்றுமையை போல, எதிர்ப்பு தெரிவிப்பதில் தமிழக அரசியல் கட்சி களின் ஒற்றுமையை நிரூபிக்க, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இன்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
அதே நேரத்தில், அணை கட்டுமானத்தை தடுப்பது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் வாயிலாக, சட்டப் போராட்டத்தை தொடர்வதிலும் அரசு உறுதியாக உள்ளது. இதற்காக சட்ட வல்லுனர்களுடன், தமிழக நீர்வளத் துறையினரும், காவிரி தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகளும், தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE