ஆமதாபாத் : ''தன் பதவிக்காலத்துக்கு பின்னும் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடக்கும் வகையிலான திட்டங்களை செய்த முதல் தலைவர் நரேந்திர மோடி'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் 244 கோடி ரூபாயில் வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. தொகுதியின் எம்.பி.யும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:அரசியலில் பல்வேறு தலைவர்களை பார்த்துள்ளேன். சிலர் ரிப்பன் வெட்டும் பணியை மட்டுமே செய்வர். இன்னும் பலர் தங்கள் பதவிக்காலத்தில் மட்டும் மாநிலத்தின் வளர்ச்சிப் பணியை பற்றி யோசிப்பர்.ஆனால் தன் பதவிக்காலத்துக்கு பின்னும் வளர்ச்சிப் பணிகள் தொய்வின்றி நடக்கும்படி திட்டமிட்டு பணியாற்றியுள்ள முதல் தலைவர் மோடிதான்.

குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த காலத்தில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை தொலைநோக்கு பார்வையோடு செய்துள்ளார். நரேந்திர மோடி முதல்வராக இருந்த 14 ஆண்டு காலத்தில் குஜராத் மக்கள் ஏராளமான நன்மைகளை அனுபவித்துள்ளனர். அவரது பதவிக் காலம் முடிந்த பின்னும் குஜராத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடக்கும் விதமாக ஏற்பாடுகளை நரேந்திர மோடி செய்துள்ளார். இவ்வாறு பேசினார்.