தஞ்சாவூர் : திருமணமான 15 நாட்களில் கணவன் வீட்டில் இருந்து 10 பவுன் நகை 2 லட்சம் ரூபாய் மொய் பணத்தோடு புதுப்பெண் காதலனுடன் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே தொந்துபுளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் 26. துபாயில் வேலை பார்த்து வந்த இவருக்கும் சின்ன தெற்குகாட்டைச் சேர்ந்த கற்பகவள்ளி 19, என்பவருக்கும் ஜூன் 26ல் திருமணம் நடந்தது.
நேற்று முன்தினம் அதிகாலை விக்னேஷ் துாங்கி எழுந்தபோது கற்பகவள்ளியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விக்னேஷ் வீட்டிற்கு வந்த கற்பகவள்ளியின் பெற்றோர் தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மகளுக்கும் மணிகண்டன் 25, என்பவருக்கும் பழக்கம் இருந்ததாக தெரிவித்தனர்.
மேலும் 'கற்பகவள்ளி திருமணத்தில் எந்த பிரச்னையும் செய்ய மாட்டேன்' என திருமணத்திற்கு ஒரு வாரத்துக்கு முன் ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் மணிகண்டன் எழுதிக் கொடுத்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து விக்னேஷின் தந்தை முருகேசன் பேராவூரணி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையில் வீட்டில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் மொய் பணம், 10 பவுன் நகை விக்னேஷின் விலை உயர்ந்த அலைபேசி, புடவைகளை எடுத்துக் கொண்டு கற்பகவள்ளி மணிகண்டனுடன் ஓடியது தெரிந்தது.இது தொடர்பாக மணிகண்டனின் பெற்றோர் சகோதரர் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE