கட்சியும் வேண்டாம்; கொடியும் வேண்டாம் !:அரசியலுக்கு அடியோடு ரஜினி முழுக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கட்சியும் வேண்டாம்; கொடியும் வேண்டாம் !:அரசியலுக்கு அடியோடு ரஜினி முழுக்கு

Updated : ஜூலை 13, 2021 | Added : ஜூலை 12, 2021 | கருத்துகள் (157)
Share
சென்னை :'எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன். மக்கள் மன்றம் கலைக்கப்படுகிறது. முன்னர் போல நற்பணி மன்றமாக மட்டுமே செயல்படும்' என, நடிகர் ரஜினி அறிவித்துள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினி, கடைசி நேரத்தில் கொரோனா மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி பின்வாங்கினார். இதனால், அவர் துவக்கிய மக்கள் மன்றத்தில் இருந்து
Rajinikanth, Political Entry, RMM, ரஜினி, ரஜினிகாந்த், மக்கள் மன்றம், கலைப்பு, அரசியல்

சென்னை :'எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன். மக்கள் மன்றம் கலைக்கப்படுகிறது. முன்னர் போல நற்பணி மன்றமாக மட்டுமே செயல்படும்' என, நடிகர் ரஜினி அறிவித்துள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினி, கடைசி நேரத்தில் கொரோனா மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி பின்வாங்கினார். இதனால், அவர் துவக்கிய மக்கள் மன்றத்தில் இருந்து நிர்வாகிகள் சிலர் வெளியேறி, மற்ற கட்சிகளில் இணைந்தனர்.


ஆலோசனைஇதற்கிடையே, அண்ணாத்த படத்தில் நடித்து வந்த ரஜினி, அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். நேற்று, மன்ற மாவட்ட செயலர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.ஆலோசனைக்கு முன், சென்னை போயஸ் கார்டனில் நேற்று காலை நிருபர்களிடம் பேசிய ரஜினி, ''எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா, இல்லையா போன்ற பல கேள்விகள் உள்ளன. இதற்காக, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடக்கிறது; முடித்து விட்டு சொல்கிறேன்,'' என்றார்.ரஜினியின் இந்த அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியலுக்கு வரப்போகிறார் என, அவரது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் உற்சாகம் பிறந்தது.


latest tamil news
அதேவேளையில், 'மறுபடியும் முதல்ல இருந்தா...' என, சமூக வலைதளங்களில் 'மீம்ஸ்'கள் பறந்தன. அண்ணாத்த படத்திற்காகவும், அடுத்து நடிக்க உள்ள படத்திற்காகவும் விளம்பரம்
தேடுவதாக சிலர் குற்றஞ்சாட்டினர்.ஆனால், இந்த பரபரப்பு சில மணி நேரத்திலேயே அடங்கியது. ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தை முடித்து விட்டு, வெளியில் கூடியிருந்த ரசிகர்களை பார்த்து, கும்பிடு போட்டு விட்டு ரஜினி கிளம்பினார்.


அறிக்கை
சற்று நேரத்தில், ரஜினி தரப்பில் இருந்து அறிக்கை வெளியானது.அதில், அவர் கூறியுள்ளதாவது:நான் அரசியலுக்கு வர முடியவில்லை என சொன்ன பின், 'ரஜினி மக்கள் மன்றத்தின் பணி மற்றும் நிலை என்ன' என்று, மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது; அதை விளக்க வேண்டியது என் கடமை.நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட, ரசிகர் நற்பணி மன்றத்தை, மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும், பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.கால சூழலால், நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணமும் எனக்கில்லை.
அதனால், ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு மக்கள் மன்றத்தில் உள்ள செயலர்கள், இணை, துணை செயலர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன், மக்கள் நலப்பணிக்காக, முன்னர் போல ரஜினி
ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும்.இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

நாளை, அண்ணாத்த இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ரஜினி, மேற்கு வங்கம் செல்கிறார். நான்கு நாள் படப்பிடிப்பில் பங்கேற்கும் ரஜினி, அதை முடித்து விட்டு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், ஏ.ஜி.எஸ்., தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.


படை தலைவர் யார்?ரஜினியின் அறிவிப்பு குறித்து, நடிகை கஸ்துாரி 'டுவிட்டரில்' கூறியுள்ளதாவது:இன்றைய அறிவிப்பில், யாருக்கும் புதிதாக அதிர்ச்சியோ, பெரிய ஏமாற்றமோ இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அண்ணாத்த வெளியீட்டுக்கு பின், இன்னொரு அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம். ரஜினி காட்டிய வழியில் ரசிகர்களும் சொந்த வேலையை கவனிக்க போகலாம். கெட்டுப்போன சிஸ்டத்தை சுத்தம் செய்ய, போர் வீரர்கள் தயார்; படைக்கு தலைவர் யார்?இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கிருஷ்ணகிரி மா.செ., விலகல்கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர் சீனிவாசன், நேற்று வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர் பதவி கொடுத்து, பல்வேறு மக்கள் பணிகள் செய்ய வாய்ப்பு வழங்கிய ரஜினிக்கு, என்
மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். மக்கள் மன்ற பணியில், தொடர்ந்து என்னால் கவனம் செலுத்த முடியாத காரணத்தால், கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இதுவரை எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், மன்ற காவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகிய சீனிவாசன், விரைவில் தி.மு.க.,வில் இணைவார் என, அவருடன் உள்ளோர் பேசி வருகின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X