''வைராக்கியம்னா இதுதான் மித்து' என்று, புதிருடன் பேச துவங்கினாள், சித்ரா.மித்ரா, புரியாமல் விழித்தாள்.
''பாத்திர ஊர்ல, கூட்டுறவு சொசைட்டி தலைவரா, இலைக்கட்சி பிரமுகரு இருக்காரு... அவரோட அலுவலக அறைல, கருணாநிதி, ஸ்டாலின் படம் மாட்டியிருக்காங்க; இந்த படங்களை பார்க்க முடியாதபடி, அலுவலர்கள் இருக்கற பக்கமே இருக்கை போட்டு அமர்ந்திருக்கிறாராம், அவரு'' என்று, 'புதிரை' விடுவித்தாள் சித்ரா.
''அப்பேர்பட்ட கட்சி விசுவாசியா அவரு... மாநில அரசாங்கம், தர்ற சலுகைகளை இவரு வாங்காமலா இருப்பாரு... சொசைட்டி உறுப்பினர்களுக்கு, இவற்றை கொண்டு போய் சேர்க்காமலா இருப்பாரு...'' என கூறி சிரித்தாள் மித்ரா.
''நீ மட்டும் இதை சொல்லல மித்து... அலுவலக ஊழியர்களே, இதை ஜாடைமாடையா சொல்றாங்களாம்'' என்று, மித்ரா சொன்னதை நியாயப்படுத்தினாள், சித்ரா.'டிவி'யில் மென்மையாக,எஸ்.பி.'பாலசுப்ரமணியம்' பாடிய பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.
அலப்பறை
''மித்து... கட்சிக்காரங்க பண்ற அலப்பறை தாங்க முடியல. பல்லடத்துல இருக்கிற ஒரு ரேஷன் கடைல, கொரோனா நிவாரண நிதியா, அரசாங்கம் வழங்கின, ரெண்டாயிரம் ரூபாயை, மக்களுக்கு கொடுத்து திட்டத்தை துவக்கி வச்சிட்டு போயிருக்காரு ஆளுங்கட்சியோட மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்.
கொஞ்ச நேரம் கழிச்சு, அதே கடைக்கு வந்த யூனியன் சேர்மன், தானும் ரெண்டாயிரம் ரூபாய் கொடுத்து, துவக்கி வைச்ச மாதிரி, 'போட்டோ'வுக்கும் 'போஸ்' கொடுத்துட்டு போயிருக்காரு. கட்சிக்குள்ல கோஷ்டி பூசல் அதிகமாகிடுச்சுன்னு தலைமைக்கு புகார் போக, ரெண்டு பேரையுமே 'வாட்ச்' பண்ண ஆரம்பிச்சிருக்காங்களாம்'' என்று விவரித்தாள், சித்ரா.
''தேன்மொழி வீட்டுக்கு வேற போகணும்... சோமசுந்தரம் அண்ணனையும் அப்படியே பாத்துட்டு வரணும்... நேரமே கிடைக்கல'' என்று மித்ரா குறைபட்டுக்கொண்டாள்.''நமக்கு தான் பேசறதுக்கே நேரம் போதறதில்லையே'' என்று சித்ரா, 'காமெடி' செய்தாள்.
'தெளிந்த' போதை'
'தன் வினை தன்னை சுடும்னு சும்மாவா சொல்லீருக்காங்க,'' என, திடீரென தத்துவம் உதிர்த்த மித்ரா, ''பல்லடம் பக்கத்துல நடுரோட்டுல கவிழ்ந்த காரில், மதுபாட்டில்கள் இருந்துச்சு... அதை எடுத்து வந்த ரெண்டு போலீஸ்காரங்கள சஸ்பெண்ட் செஞ்சிட்டாங்க... அந்த கார்ல, பதினைஞ்சு பெட்டி நிறைய மது பாட்டில் இருந்துச்சாம். ஆனா, 50 பாட்டில் மட்டும் தான் கணக்கு காட்டீருக்காங்களாம்... மீதி பாட்டில் எங்க போச்சுனு தெரியலையாம்,'' என்று விசனப்பட்டாள் மித்ரா.
''அப்பாவியா இருக்கிறே... இந்த மாதிரி 'கணக்கு' காட்டறது, சகஜம், மித்து... மீதி பாட்டில் இப்ப காலியாயிருக்கும்... போதைகூட தெளிஞ்சிருக்கும்'' என்று சித்ரா கூறவும், மித்ராவிடம், 'கலகல' சிரிப்பு.
''திருப்பூர் 'சிட்டி' போலீஸ்காரங்க ரெய்டு நடத்தினதுல, ஒரு இடத்துல பதுக்கி வச்சிருந்த, 200 கிலோ குட்காவை பறிமுதல் பண்ணாங்க. ஆனா, முக்கியப்புள்ளி 'எஸ்கேப்' ஆகிட்டாராம். விசுவாசத்தை காண்பிக்க தான், ரெய்டு போற விஷயத்தை முன்கூட்டியே அந்தப்புள்ளியோட காதுக்கு கொண்டு போய், சில 'கருப்பு ஆடு'ங்க, தப்பிக்க விட்டுட்டாங்கன்னு பேசிக்கிறாங்க. இந்த விஷயத்தை தெரிஞ்சுகிட்ட பெரிய அதிகாரி, 'என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ ... அந்த ஆளை பிடிக்கலைன்னா, உங்க மேல நடவடிக்கை எடுப்பேன்'னு கறாரா சொல்லீட்டாங்களாம். 'கருப்பு ஆடு'ங்க கலங்கிப்போய் இருக்காங்களாம்'' என்று, சுவாரசியத்துடன் தகவலை சொன்னாள் சித்ரா.
தெரியாத 'வரலாறு'
''உடுமலை சப்-டிவிஷன்ல நடக்கிற சட்ட விரோத செயல்களை கண்டுபிடிச்சு சொல்ற வேலைக்கு, ரெண்டு போலீஸ்காரங்கள ஸ்பெஷலா நியமிச்சிருக்காரு, பெரிய அதிகாரி. ஆனா, அவங்க ரெண்டு பேர் மேலேயும், கட்டப்பஞ்சாயத்து, வசூல் பண்றதுனு, ஏற்கனவே, பல புகார்கள் இருக்காம். இவங்களோட 'வரலாறு' தெரியாம, பெரிய அதிகாரி, பொறுப்பை ஒப்படைச்சிருக்காருன்னு, சப்-டிவிஷன்ல வேலை பாக்குறவங்களே சொல்றாங்க. ஆனா, அந்த ரெண்டு பேரும் 'இனி, எல்லாமே நாங்கதான்'னு சொல்லிட்டு நகரை வலம் வந்துட்டு இருக்காங்களாம்,'' என்று 'குண்டை' துாக்கிப்போட்டாள் மித்ரா.
''இப்படியெல்லாம் கூடவா நடக்கும்... 'செந்தில்' வேலவா, 'சிவ', சிவா…'' என கன்னத்தில் கை வைத்து ஆதங்கப்பட்டாள் சித்ரா.
''சிட்டிக்குள்ள இருக்கிற போலீஸ்காரங்க டென்ஷன் இல்லாம வேலை பாக்கணும்னுதான், பெரிய அதிகாரி, வார விடுமுறை அறிவிச்சாங்க. ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் சுழற்சி அடிப்படையில், போலீஸ்காரங்க வார விடுமுறை எடுத்துக்கலாம்னு சொல்லியும், ஸ்டேஷன் அதிகாரிங்க, தங்களுக்கு வேண்டியவங்களுக்கு மட்டும்தான் வார விடுமுறை தர்றாங்களாம்; இந்த விஷயத்தை எப்படி, பெரிய அதிகாரி கவனத்துக்கு கொண்டு போறதுன்னு தெரியாம தவிக்கிறாங்களாம்'' என்ற சித்ராவிடம் இரக்க தொனி.
''அந்த விஷயம் உனக்கே தெரிஞ்சிருக்குக்கா... பெரிய அதிகாரி கவனத்துக்கு, கண்டிப்பா போயிரும்க்கா...'' என்று மித்ரா சொன்னதும், சித்ரா வியப்பு கலந்தவளாய்ப் பார்க்கிறாள்.
'சிடுசிடு' ஊழியர்'
'இ-சேவை மையத்தில் சர்வர் பிரச்னைன்னு, சொன்னாங்க அக்கா,'' என, பேச்சை மாற்றினாள், மித்ரா.
'ஆமா மித்து. கொரோனால இறந்தவங்களுக்கு, வாரிசு சான்றிதழ் வாங்க, வடக்கு தாலுகா அலுவலகத்துல இருக்கிறஇ-சேவை மையத்துக்கு நிறைய பேரு போறாங்க. கூட்டம் அதிகமா வர்றதால டென்ஷனாகி, எங்களுக்கென்ன, ஏழு கையா இருக்கு; நாங்க வேலை பாக்குறதா, வேண்டாமானு, அங்க வேலை செய்ற பணியாளர் எரிஞ்சு விழறாங்களாம். பல நேரங்கள்ல அங்க வர்றவங்களை நீ, வா, போன்னு ஒருமைல வேற பேசறாங்களாம்'' என்று, கவலையுடன் பகிர்ந்தாள் சித்ரா.
''ஏற்கனவே, கொரோனால சொந்த பந்தங்களை இழந்து, துக்கம் தாங்காம வர்றவங்கள, இவங்களும் வேதனைப்படுத்தினா எப்படி?'' என ஆதங்கப்பட்டாள் மித்ரா.
'கமல்' போஸ்டர்கள்'
திருப்பூருக்கு கமல் வர்றதா கிளப்பி விட்டுட்டாங்களாமே'' என, அரசியல் பேசினாள் சித்ரா.
''ஆமா மித்து. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிச்சு, 'ம.நீ.ம., தலைவர் கமல்ஹாசன், மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம்; அனைவரும் வாரீர்' அப்படீங்கற ஒரு நோட்டீசை நகரம் முழுக்க ஒட்டிட்டாங்க. இதனால, ஆர்ப்பாட்டத்தில கலந்துக்க கமல் வர்றாருங்கற பேச்சு பல இடங்கள்ல அடிபடுச்சு. ஆனா, கூட்டம் சேர்க்கத்தான் இப்படியொரு நோட்டீசை அச்சடிச்சு, ஒட்டியிருக்காங்கற விஷயம், அப்புறமாதான் தெரிய வந்திருக்கு,'' என்றாள் மித்ரா.
''இதெல்லாம், அரசியல்ல சாதாரணமப்பா; 'அவர்' வருவாரானு, தேர்தலப்ப ஒரே பேச்சா இருந்துச்சு... கடைசீல வரலதானே'' எனக்கூறி சிரித்த சித்ரா, ''பல்லடம், அவிநாசின்னு பல இடங்கள்ல இருக்கற சில ரேஷன் கடைகள்ல தரம் இல்லாத அரிசி, பருப்பு தர்றாங்கன்னு புகார் வந்துட்டே இருக்கு. தரமான பொருட்களை தான் தர்றோம்னு அரசாங்கம் சொல்றப்போ,எப்படி, இந்த மாதிரி தரம் குறைஞ்ச அரிசி வருதுன்னு, மக்கள் சந்தேகம் கிளப்பறாங்களாம். இதனால, குடோனில் இருக்கிற அனைத்து பொருட்களையும் பரிசோதிச்சு பார்க்கணும்.அதை லோடு பண்ணி ரேஷன் கடைக்கு எடுத்துட்டு போற வாகனங்களை கூட கண்காணிக்கணும்னு, மக்கள் சொல்றாங்க,'' என்று, மக்கள் பிரச்னையை பேசினாள்.
''கம்பெனில்லாம் நல்லா 'ரன்' ஆகுதாக்கா'' என்று மித்ரா கேட்டாள்.''பார்த்தா இயல்புநிலைக்கு திரும்பிட்ட மாதிரி தான் தோணுது... வங்கிக்கடன் போன்றவை எளிதா கிடைக்க ஆரம்பிச்சுட்டா நல்லது...பனியன் தொழிலாளருக்கு குடியிருப்பு கட்டறது... அடிப்படை வசதிகள ஏற்படுத்தறதுனு, அரசாங்கம் இனி வளர்ச்சிப்பணிகள் மேல கவனம் செலுத்தியாகணும்'' என்ற சித்ரா, 'மித்து... ரொம்ப நேரம் சூடா பேசியாச்சு... சூடா ஒரு கப் காபி கிடைக்குமா?' என்று கேட்டாள்.
மித்ரா புன்னகைத்தவாறே, சமையலறைக்குள் நுழைந்தாள்
.''அந்த கார்ல, பதினைஞ்சு பெட்டி நிறைய மது பாட்டில் இருந்துச்சாம். ஆனா, 50 பாட்டில் மட்டும் தான் கணக்கு காட்டீருக்காங்களாம்... மீதி பாட்டில் எங்க போச்சுனு தெரியலையாம்''
''இ-சேவை மையத்துக்கு நிறைய பேரு போறாங்க. கூட்டம் அதிகமா வர்றதால டென்ஷனாகி, எங்களுக்கென்ன, ஏழு கையா இருக்கு; நாங்க வேலை பாக்குறதா, வேண்டாமானு, அங்க வேலை செய்ற பணியாளர் எரிஞ்சு விழறாங்களாம்''
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE