கார்ப்பரேஷன்ல கண்டமேனிக்கு திட்டு... : மாஜி சீக்கிரம் சூரியகட்சிக்கு ஜூட்டு!| Dinamalar

கார்ப்பரேஷன்ல கண்டமேனிக்கு திட்டு... : 'மாஜி' சீக்கிரம் சூரியகட்சிக்கு 'ஜூட்டு!'

Updated : ஜூலை 13, 2021 | Added : ஜூலை 13, 2021
Share
பணி நிமித்தமாக, கலெக்டர் அலுவலகம் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் எதிரிலுள்ள பேக்கரியில், தோழிக்காக காத்திருந்தனர்.பக்கத்து டேபிளில் இன்ஸ்., ஒருத்தர் பேசிக் கொண்டிருந்ததை கூர்ந்து கவனித்த சித்ரா, ''மித்து, சட்டம் - -ஒழுங்கு போலீஸ் துணைக் கமிஷனர் ஜெயச்சந்திரனை கண்டாலே, போலீஸ்காரங்க நடுங்குறாங்களாமே,'' என, பேச்சை
கார்ப்பரேஷன்ல   கண்டமேனிக்கு    திட்டு... : 'மாஜி' சீக்கிரம் சூரியகட்சிக்கு 'ஜூட்டு!'

பணி நிமித்தமாக, கலெக்டர் அலுவலகம் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் எதிரிலுள்ள பேக்கரியில், தோழிக்காக காத்திருந்தனர்.பக்கத்து டேபிளில் இன்ஸ்., ஒருத்தர் பேசிக் கொண்டிருந்ததை கூர்ந்து கவனித்த சித்ரா, ''மித்து, சட்டம் - -ஒழுங்கு போலீஸ் துணைக் கமிஷனர் ஜெயச்சந்திரனை கண்டாலே, போலீஸ்காரங்க நடுங்குறாங்களாமே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''ஆமாக்கா, உண்மை தான்! எந்தவொரு விஷயத்திலும் சமரசத்துக்கு இடம் கொடுக்கறதில்லையாம்.

எதுவா இருந்தாலும் அப்பவே விசாரிச்சு நடவடிக்கை எடுக்குறாராம். அவரோட ரூமை எப்பவும் திறந்தே வச்சிருக்காரு; ஒளிவு மறைவு கிடையாது. போலீஸ்காரங்களா இருந்தாலும் சரி; ஜனங்களா இருந்தாலும் சரி; யாரா இருந்தாலும் ஒன்னுதான் சொல்லிட்டாராம்,''''திடீருன்னு ஸ்டேஷனுக்கு 'விசிட்' அடிக்கிறாராம். அதனால, ஸ்டேஷன் போலீஸ்காரங்க மிரண்டு போயிருக்காங்க. மைக்கில் பேசினாலே, ஒவ்வொருத்தரும் 'அலர்ட்' ஆகிடுறாங்க,''எதிர்பார்த்து காத்திருந்த தோழி வந்ததும், இஞ்சி டீ, முந்திரி கேக் ஆர்டர் கொடுத்த சித்ரா, ''தி.மு.க.,காரங்க பணம் கேட்டுற மிரட்டுற ஆடியோ, சமூக வலைதளத்துல வைரலாகுதாமே,'' என, நோண்டினாள்.''ஆமாக்கா, மதுக்கரை பகுதியை சேர்ந்தவங்க, இல்லீகல் பிசினஸை ஜோரா நடத்திட்டு இருக்காங்க. மணல், செங்கல் கடத்துறவங்கள்ட்ட, தி.மு.க., லேடி நிர்வாகி, பணம் கேட்டு மிரட்டுற, ஆடியோ வெளியாகி இருக்கு,''டேபிளுக்கு வந்த முந்திரி கேக்கை சுவைத்த சித்ரா, ''கமல் கட்சியில இருந்து தாவுன மகேந்திரனுக்கு, அதிகமாகவே முக்கியத்துவம் கொடுக்குறாங்களே,'' என கேட்டாள்.'அக்கா, முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக், கட்சி பொறுப்புல இருக்காரு; கடந்த ஆட்சியில ஏகப்பட்ட போராட்டம் நடத்தியிருக்காரு; இருந்தாலும் தோத்துட்டாரு; அதுவும், 10 தொகுதியில அதிக ஓட்டு வித்தியாசத்துல தோத்தது இவருதான்.

இவரது தோல்விக்கு முக்கிய காரணமா இருந்தது மகேந்திரன்,''''அதிக ஓட்டு வாங்கி, சிட்டிங் எம்.எல்.ஏ.,வா இருந்தவரை தோற்கடிக்க வச்சிருக்காரு. அப்படீன்னா, அந்தளவுக்கு தொகுதிக்குள்ள மக்களுக்கு அதிருப்தி இருக்குன்னு அர்த்தம்னு, உளவுத்துறை ரிப்போர்ட் போயிருக்கு,''

''இனி, எதிர்கூடாரத்துல இருக்குற முக்கியமானவங்கள, கட்சிக்குள்ள ஐக்கியமாக்குற வேலைய படிப்படியா செய்யப் போறாங்களாம். அ.தி.மு.க.,வுல யாரை துாக்குறதா இருந்தாலும், கட்சியில இருக்கற செல்வாக்கு முக்கியம்னு சொல்லியிருக்காங்களாம்,

''முன்னாள் எம்.எல்.ஏ.,வா அல்லது முன்னாள் அமைச்சரான்னு பேசுறாங்க. தொழிற்சங்கத்தை வழி நடத்துனவரு சிக்குவாருன்னு சொல்றாங்க. அவரை துாக்குனா, போக்குவரத்து தொழிற்சங்கத்தை பலப்படுத்திடலாம்னு கணக்குப் போடுறாங்களாம்,'' என்றபடி, இஞ்சி டீயை உறிஞ்சினாள் மித்ரா.

பேசி முடித்து தோழி விடை பெற்றுச் சென்றதும், ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்த சித்ரா, ''இலைக்கட்சி எம்.எல்.ஏ.,வுக்கு வலதுகரமா இருந்தவரு, சூரியக்கட்சிக்கு தாவுனாரே... 'பசை'யான பொறுப்புக்கு ஆசைப்படுறாரா,'' என, நோண்டினாள்.

''தி.மு.க.,வுல அப்படியெல்லாம், யாரும் யாருக்கும் பதவி வாங்கிக் கொடுக்கற நிலைமையில இல்லையாம். பார் ஊழியர் வேலைக்கு நம்மூருக்கு வந்த அவரு, இலைக்கட்சி எம்.எல்.ஏ.,வுக்கு கலெக்சன் பண்ணிக்கொடுத்து, பெரிய மனுஷனா காட்டிக்கிட்டாராம்,''

''செல்வாக்கு பெருகியதும், ஏகப்பட்ட 'பார்' நடத்தி, கோடீஸ்வரனாகிட்டாரு. பத்து வருஷமா, 'அம்மன்' ஆசியில கல்லா கட்டுன அவரு, ஆட்சி மாறியதும் வருமானம் போயிடக் கூடாதுன்னு, சூரியக்கட்சியில ஐக்கியமாகி இருக்காராம்,''

''ஆனா, இவரை, உளவாளியா தி.மு.க.,வுக்குள் இலைக்கட்சிக்காரங்கஅனுப்பியிருக்கறதா, உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க,'' என்ற மித்ரா, தனது மொபைல் போனுக்கு வந்திருந்த குறுஞ்செய்தியை படித்து விட்டு, ''கலெக்சன் செஞ்ச பணத்தை, 'அண்டக்குடி'காரரு 'செட்டில்' செஞ்சிட்டாராம்,'' என்றாள்.

காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் முன், ஸ்கூட்டரை ஓரங்கட்டனர். சேலம் பஸ்சில் வந்த பார்சலை வாங்கிய மித்ரா, ''அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவங்களை, 'பெண்டு' நிமித்துறாங்களாமே,'' என, கிளறினாள்.

''அதுவா, தொழிற்சங்க செல்வாக்குல, சில பேரு, 10 வருஷமா, ஜாலியா பெஞ்ச் தேய்ச்சுக்கிட்டு இருந்தாங்களாம். பஸ் ஸ்டாண்ட் டூட்டி, அதிகாரிகள் ஜீப் டிரைவர் வேலைன்னு, 'ரிஸ்க்' இல்லாத வேலை செஞ்சாங்களாம். கொஞ்சப் பேரு, ஒடம்பு சரியில்லைன்னு சொல்லி, 'ஓபி' அடிச்சுக்கிட்டு இருந்தாங்களாம்,''

''அவுங்களை 'லிஸ்ட்' எடுத்து, மெக்கானிக்கல் பிரிவு, டிரைவர், கண்டக்டர் வேலைக்கு அனுப்புறாங்களாம். இதுக்கு பயந்து, நிறைய பேரு, தி.மு.க., சங்கத்துக்கு தாவுறதுக்கு முயற்சி பண்ணிட்டு இருக்காங்களாம்,''

''அதெல்லாம் இருக்கட்டும், மதுவிலக்கு, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ்காரங்களை 'டிரான்ஸ்பர்' செஞ்சும், மாமூல் மழை கொட்டுதாமே,''

''ஆமாப்பா, நானும் கேள்விப்பட்டேன். கடத்தல் பேர்வழிகளிடம் ஒன்னுக்குள்ள ஒன்னா இருந்ததால, வேறிடத்துக்கு மாத்தியிருக்காங்க. இருந்தாலும், பழைய தொடர்பு அப்படியே இருக்குதாம். 'ரெய்டு' வரப்போற தகவலை, முன்கூட்டியே சொல்லிடுறாங்களாம்.

''இன்பர்மேசன் சொல்றதுக்காக, கணிசமான தொகை கைமாறுதாம்; 'டூட்டி'யில இருக்கற போலீஸ்காரங்களும், உடந்தையா இருக்காங்களாம்,'' என்ற சித்ரா, மீண்டும் ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்தாள்.

கலெக்டரது கார், அவர்களை கடந்து சென்றதை கவனித்த மித்ரா, ''அக்கா, கட்டட வரைபட அனுமதி வழங்குறதுல ஏகப்பட்ட முறைகேடு நடந்ததுனால, பாப்பம்பட்டி ஊராட்சி செயலரை, 'சஸ்பெண்ட்' செஞ்சாங்கல்ல...அதனால உயரதிகாரிகள் பலரும் கலக்கத்துல இருக்காங்களாம்.மறுபடியும் நம்ம ஆட்சிதான்னு ஆட்டம் போட்ட, இலைக்கட்சிக்காரங்களோட கைகோர்த்து, முறைகேடுகளுக்கு துணைபோன அதிகாரிகள் பலரும் பீதியில் இருக்காங்களாம்,'' என்றாள்.

''அப்படித்தான் சொல்றாங்க. கார்ப்பரேஷன்ல ஏகப்பட்ட முறைகேடு நடக்குது. கரன்சி இல்லாம எந்த வேலையும் நடக்கறதில்லை. ஆனா, யார் மீதும் நடவடிக்கை எடுக்கறதில்லையே,''

''கொஞ்சம் பொறுமையா இருங்க. கார்ப்பரேஷன் அதிகாரிகளை, ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்கு 'டிரான்ஸ்பர்' போடனும்னு, ஸ்பெஷலா அரசாணை வெளியிடணுமாம். இப்படி, சட்டத்துல ஏகப்பட்ட சிக்கல் இருக்குதாம். அதை பயன்படுத்திதான், இத்தனை நாளா தப்பிச்சுக்கிட்டு இருந்திருக்காங்க,''

''நம்மூர்ல வேலை பார்த்த அதிகாரிகள் பலரும், இலைக்கட்சி வி.ஐ.பி.,க்கு விசுவாசமா இருந்ததால, இனி, ஒவ்வொரு அதிகாரியையும் வெவ்வேறு மாவட்டத்துக்கு மாத்தப் போறாங்களாம். உத்தரவுக்காக, 'வெயிட்டிங்'காம்,''

''கார்ப்பரேஷன் அதிகாரியை, கடுமையான வார்த்தையில, உயரதிகாரி திட்டுனதா, சொல்றாங்களே,''

''நானும் கேள்விப்பட்டேன்.எந்த அதிகாரியும், எந்த வேலையையும் உருப்படியா செய்றதில்லையாம். மூத்த அதிகாரிகளா இருந்தாலும், ஒருமையில திட்டுறதுனால, சங்கடத்துல நெளியுறாங்களாம். இன்ஜி., செக்சன் அதிகாரிகிட்ட கேட்ட கேள்விக்கு, சரியா பதில் சொல்லாததால, 'இடியட்'டுன்னு சொன்னாராம்,''

''அதிருக்கட்டும், ஊராட்சியில, அரிசி மூட்டை வாங்குன, லேடி அதிகாரியை மாத்திட்டாங்களாமே,''

''ஆமாப்பா, வாங்குனது உண்மையான்னு விசாரிச்சிருக்காங்க. உடன்பிறப்புகளுக்கு விசுவாசமா இருக்கறதுக்காக, அப்படி செஞ்சது தெரிய வந்திருக்கு. ஜால்ரா போடுற அதிகாரி தேவையில்லைன்னு, தர்மபுரிக்கு அனுப்பிட்டாங்களாம்,'' என்றபடி, உக்கடத்தை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X