புதுடில்லி : லடாக் பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவத்தினர், பதாகைகளை ஏந்தியபடி தலாய் லாமாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த 1959ல் சீனாவின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை அடுத்து, திபெத்திய தலைவர் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதன் பின், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார். இவரது 86வது பிறந்த நாள், கடந்த 6ம் தேதி கொண்டாடப் பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தலாய் லாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

'கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின், தலாய் லாமாவை பிரதமர் மோடி நேரில் சந்திப்பார்' என, கூறப்படுகிறது.இதையடுத்து, 'திபெத் தொடர்பான கொள்கையில் மத்திய அரசின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையே பிரதமரின் வாழ்த்து உணர்த்துகிறது' என, பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள டெம்சுக் பகுதியில் உள்ள கிராமத்தினர், தலாய் லாமாவின் பிறந்த நாளை 6ம் தேதி கொண்டாடினர். அப்போது, சீன எல்லைப் பகுதியில் இருந்து அந்நாட்டு ராணுவத்தினரும், பொது மக்களும், லடாக் பகுதியில் உள்ள சிந்து நதியின் மறுபுறம் குவிந்தனர். கையில் பதாகைகள் மற்றும் சீன கொடியை ஏந்தியபடி, தலாய் லாமாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE