அமைச்சரவை மாற்றத்தால் நிறைவேறுமா மோடி எண்ணம்

Updated : ஜூலை 13, 2021 | Added : ஜூலை 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின், இரண்டு ஆண்டுகள் கழித்து, சமீபத்தில் மத்திய அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது.மத்திய அமைச்சர்களாக இருந்த பா.ஜ., மூத்த தலைவர்களான ஹர்ஷ்வர்தன், பிரகாஷ் ஜாவடேகர், சதானந்த கவுடா, ரவிசங்கர் பிரசாத், ரமேஷ் பொக்ரியால் உட்பட 12 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு, புதிதாக 43 பேர்
 அமைச்சரவை மாற்றத்தால்  நிறைவேறுமா மோடி எண்ணம்

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின், இரண்டு ஆண்டுகள் கழித்து, சமீபத்தில் மத்திய அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது.

மத்திய அமைச்சர்களாக இருந்த பா.ஜ., மூத்த தலைவர்களான ஹர்ஷ்வர்தன், பிரகாஷ் ஜாவடேகர், சதானந்த கவுடா, ரவிசங்கர் பிரசாத், ரமேஷ் பொக்ரியால் உட்பட 12 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு, புதிதாக 43 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அவர்களில், ஏழு பேர் ஏற்கனவே இணை அமைச்சர்களாக இருந்து, தற்போது, கேபினட் அமைச்சர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மற்ற 36 பேரும் புதுமுகங்கள்.

இந்த மாற்றத்தின் வாயிலாக, தற்போது, மத்திய அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 12 பேர், பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த 27 பேர், பழங்குடியினத்தைச் சேர்ந்த எட்டு பேர், முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தவர் என சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் இடம் பெற்றுள்ளனர். அத்துடன், பெண் அமைச்சர்கள் எண்ணிக்கையும், 11 ஆக உயர்ந்துள்ளது; அவர்களில் இரண்டு பேர், கேபினட் அமைச்சர்கள். மேலும், மத்திய அமைச்சர்களில் நான்கு பேர், முன்னாள் முதல்வர்கள் என்பதுடன், 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று இரண்டாவது அலையின் போது, சிறப்பாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு ஆளானது. நீதித்துறையின் கடும் விமர்சனத்தையும் எதிர்கொண்டது. அதனால், சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த ஹர்ஷ்வர்தனின் பதவி பறிக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டது. அது, சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில் உண்மையாகி உள்ளது.

அது மட்டுமின்றி, அரசில் திறமையாக செயல்படாத நபர்களுக்கு இனி இடமில்லை என்ற செய்தி யும் பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் துறைக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும், இந்த துறைகளின் செயல்பாடுகள், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், உடல் நிலை காரணமாக பதவி விலகியதாக கூறப்பட்டாலும், சி.பி.எஸ்.இ., தேர்வு விவகாரம் உட்பட, பல விஷயங்களில் அவர் சரியாக செயல்படவில்லை. அதனால் தான் அவர் மாற்றப்பட்டுள்ளார் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், விவசாய சட்ட திருத்த மசோதாக்கள் விவகாரத்தில், மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையே பல மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வந்தாலும், அந்த துறையின் அமைச்சரான நரேந்திர சிங் தோமர் மாற்றப்படவில்லை. அதனால், விவசாய திருத்த சட்ட மசோதாக்கள் விவகாரத்தில், மத்திய அரசு பின்வாங்க விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.

மேலும், மத்திய பிரதேசத்தில், பா.ஜ., தலைமை யிலான அரசு மீண்டும் அமைய காரணமாக இருந்த, ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கும், தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வைச் சேர்ந்த நான்கு பேர் வெற்றி பெற காரணமாக இருந்த, எல்.முருகனுக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கியதன் வாயிலாக, அவர்களின் பணி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த மாநிலத்திற்கும், மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்கா கவும், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவை மாற்றத்தில் கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்திற்குப் பின், 35 முதல் 77 வயது உள்ளவர்கள் வரை, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். அதிலும், ஆறு கேபினட் அமைச்சர்கள் உட்பட 14 பேர், 50 வயதிற்கும் குறைவானவர்கள். இப்போதுள்ள அமைச்சர்களில் 13 பேர் வக்கீல்கள், ஆறு பேர் டாக்டர்கள், ஐந்து பேர் இன்ஜினியர்கள், ஏழு பேர் சிவில் சர்வீஸ் அதிகாரிகளாக இருந்தவர்கள். மொத்தத்தில்,68 பேர் பட்டதாரிகள்.

அடுத்த லோக்சபா தேர்தலை சந்திக்க இன்னும் மூன்று ஆண்டுகளே உள்ளன. அதற்குள் மத்திய அரசின் செயல்பாடுகளும், அறிவிக்கும் திட்டங்களும் நாடு முழுதும் உள்ள மக்களை திருப்திபடுத்தும் வகையில் அமைய வேண்டும். அதற்கேற்ற வகையில், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு துறைகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என, பிரதமர் மோடி விரும்புகிறார்.

மேலும், கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் ஊரடங்கால் ஏற்பட்ட இழப்புகளால், நாடு பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, பல்வேறு வகையிலும் கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது.அந்த சவால்களை வெற்றி கொள்ளும் வகையில், புதிய அமைச்சரவை சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்பதே, நாட்டு மக்களின் எண்ணம். அதை அவர்கள் செம்மையாக செய்வர் என நம்புவோம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-ஜூலை-202109:37:18 IST Report Abuse
Lion Drsekar எந்த ஒரு மாற்றமும் வரப்புவதே இல்லை, இதுதான் உண்மை, காரணம் இவர்களும் மனிதர்கள்தானே, இவர்களை இவர்களது குடும்ப உறுப்பினர்கள் கூட அவ்வளவு எளிதாக சந்திக்க முடியாது மன்னிக்கவும் இவர்கள் குடியாட்சி உறுப்பினர்கள், முடியாட்சி மன்னர்களாக இருந்தால் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே தொடர்பில் இருப்பார்கள், மேலும் மக்களின் குறைகளை யாருமே கேட்க தயாரா இல்லை, யாராலும் எதுவுமே செய்ய முடியாது, மேலும் சமூக விரோதிகளின் கைகளில் எல்லாமே இருப்பதால் அவர்கள் எந்த நல்லது நடந்தாலும் அதை செய்தியாக வெளிப்படுத்துவதில்லை, இவர்களும் அதைப்பற்றிய கவலையே இல்லாமல் இருப்பதால் வரும் வினைதான், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X