புதுடில்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை புனேவின் சீரம் நிறுவனம் வரும் செப்., மாதம் முதல் உற்பத்தி செய்ய உள்ளது.
இது தொடர்பாக ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில், ஆண்டுதோறும் 300 மில்லியன் டோஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். தொழில்நுட்ப பரிமாற்றம் ஏற்கனவே துவங்கிவிட்டது. முதல் பேட்ஜ் தடுப்பூசி, செப்., மாதம் உற்பத்தி செய்யப்படும் என நம்புகிறோம். செல் மற்றும் வெக்டார் மாதிரிகள் ஆகியவை சீரம் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து விட்டோம். அவர்கள் பெற்று கொண்டு விட்டனர். டிஜிசிஐ அனுமதியுடன், சீரம் நிறுவனம் உற்பத்தியை துவங்கிவிட்டது என தெரிவித்து உள்ளது.

சீரம் நிறுவனத்தின் தலைவர் அடார் பூனவாலா வெளியிட்ட அறிக்கையில், ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிப்பதில் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்புடன் கூட்டணி அமைத்ததில் பெருமை அளிக்கிறது. செப்., மாதத்தில் சோதனை முயற்சியாக உற்பத்தி துவங்கப்படும். தொடர்ந்து வரும் மாதங்களில் பல லட்சம் டோஸ் உற்பத்தி செய்யப்படும். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் மக்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி கிடைக்க செய்வோம் என தெரிவித்து உள்ளார்.