சென்னை :மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்ததில் குறுக்கிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் குழுவை, தமிழக அரசு நியமித்தது. இந்தக் குழு, பொது மக்களிடம் கருத்து கோரியது.இந்நிலையில், தமிழக அரசு குழு அமைத்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், தமிழக பா.ஜ., பொதுச் செயலர் கரு.நாகராஜன் வழக்குதொடர்ந்தார். மனுவில், 'தமிழக அரசு குழு நியமித்தது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது' என, கூறியிருந்தார்.
அதிகார வரம்பில்லை
இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், விசாரணைக்கு வந்தது. யூகத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யவும், குழு அமைத்து கருத்து கோர, அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், தமிழக அரசு பதில் மனுவில் தெரிவித்தது.மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், 'குழு அமைத்தது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது; நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அதிகார வரம்பில்லை; குழு அமைக்க முடியாது' என, கூறப்பட்டது.

இவ்வழக்கில், தங்கள் தரப்பையும் கேட்கக்கோரி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், மாணவியர் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ராகவாச்சாரி, மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் வாதாடினர்.தமிழக அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், தி.மு.க., சார்பில், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதகி, குழு அமைத்ததற்கு ஆதரவாக, மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், எஸ்.பிரபாகரன் மற்றும் வழக்கறிஞர் சந்திரமோகன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

அறிவிப்பாணை
இவ்வழக்கில், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை உற்று கவனித்தால், அரசுக்கு அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டது தெரிய வரும். குழு அமைத்தது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ, மாணவர் சேர்க்கை நடைமுறையில் குறுக்கிடுவதாகவோ கருத முடியாது.அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான பாதிப்பை ஆய்வு செய்வதற்காக, இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது. எனவே, குழு அமைத்ததை, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக கூற முடியாது.
குழு அளிக்கும் அறிக்கையை பயன்படுத்தி, மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்தலாம்; மற்ற மாணவர்களுடன் போட்டி போடும் வகையில், பள்ளி கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம்.தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவில், பொது மக்களிடம் கருத்து கோரும் முடிவில், நீதிமன்றம் தலையிட முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக, அறிவிப்பாணை இருந்தால், நீதிமன்றம் உடனடியாக தலையிடும். ஆனால்,
அவ்வாறு கருதுவதற்கு எதுவும் இல்லை.மாநில அரசின் அதிகார வரம்பை மீறியதாக அறிவிப்பாணை இல்லை. மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை நடைமுறையை, 'அப்செட்' செய்யும் விதமாக, மாநில அரசு எதுவும் செய்யாத வரை, அதில்
குறுக்கிட தேவையில்லை.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
நீதிபதி ராஜன் குழுஇன்று அறிக்கை?
'நீட்' தேர்வு பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்க, தமிழக அரசு அமைத்த உயர்நிலை குழு, இன்று அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது.தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கையில், 'நீட்' தேர்வின் தாக்கம் குறித்து, அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில், உயர்நிலை குழு அமைத்து, ஜூன், 5ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இக்குழு, பல்வேறு ஆய்வுகளை நடத்திய நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை அளிக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
நெத்தியடித் தீர்ப்பு: முதல்வர் வரவேற்பு
முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய, தமிழக அரசு குழு நியமித்ததை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், அரசுப் பள்ளி மாணவர்கள், பின்தங்கிய மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வு காரணமாக ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே, குழு அமைக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளனர்.
இதை தவிர, வேறு எதுவும் கூறவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ, மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகவோ இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.இரட்டை வேட பா.ஜ.,வுக்கும், பாதம் தாங்கும் அ.தி.மு.க.,வுக்கும், சென்னை உயர் நீதிமன்றம் நெத்தியடித் தீர்ப்பு அளித்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பு, தமிழக அரசின் உறுதிப்பாட்டிற்கும், முயற்சிகளுக்கும் துவக்கப் புள்ளியாக உள்ளது.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.
இந்த அறிக்கையில் கூட, நீட் தேர்வின் பாதிப்பு குறித்து தான் ஆராய்கிறோம் என முதல்வர் கூறியுள்ளது, நீட் தேர்வைஎதிர்க்கும் நிலைப்பாட்டிலிருந்து மாறி உள்ளதைச் சுட்டிக் காட்டுவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE