பிடிவாதத்தின் எல்லைகளை உடைத்துவிடுங்கள்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

பிடிவாதத்தின் எல்லைகளை உடைத்துவிடுங்கள்

Added : ஜூலை 13, 2021 | கருத்துகள் (2)
Share
நாம் மலர்வதற்கு ஒரு தடையை உருவாக்கக் கூடிய, நெகிழ்ந்து கொடுக்காத கடினத் தன்மையை நாம் எவ்வாறு பல நிலைகளில் நமக்குள் வளர்த்துக் கொள்கிறோம் என்பதைப் பற்றி சத்குரு பேசுகிறார்.சாதகர்: சத்குரு, நீங்கள் எனக்கு வழங்கும் போதனைகளும், பயிற்சிகளும் என் பிடிவாதத்தை உடைத்து என்னில் நான் மலர உதவுமா?சத்குரு: உங்கள் உள்நிலை மலர்வதைத் தடுப்பது உங்கள் பிடிவாதம்தான் என்பதை நீங்கள்
பிடிவாதத்தின் எல்லைகளை உடைத்துவிடுங்கள்

நாம் மலர்வதற்கு ஒரு தடையை உருவாக்கக் கூடிய, நெகிழ்ந்து கொடுக்காத கடினத் தன்மையை நாம் எவ்வாறு பல நிலைகளில் நமக்குள் வளர்த்துக் கொள்கிறோம் என்பதைப் பற்றி சத்குரு பேசுகிறார்.

சாதகர்: சத்குரு, நீங்கள் எனக்கு வழங்கும் போதனைகளும், பயிற்சிகளும் என் பிடிவாதத்தை உடைத்து என்னில் நான் மலர உதவுமா?

சத்குரு: உங்கள் உள்நிலை மலர்வதைத் தடுப்பது உங்கள் பிடிவாதம்தான் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. பலவிதங்களில் நீங்கள் பிடிவாதமானவர்தான். உங்கள் உடல் எவ்வளவு பிடிவாதமாக இருக்கிறது என்பதை யோகாசனப் பயிற்சியின் போது புரிந்துகொள்ள முடியும். உங்கள் மனம் சார்ந்தும், உடல் சார்ந்தும், உணர்வுகள் சார்ந்தும் இருக்கிற பிடிவாதங்களை உணர்ந்துகொள்ள மேலும் விழிப்புணர்வு உங்களுக்குத் தேவைப்படலாம். மனநிலையிலும், உணர்வுநிலையிலும் பிடிவாதமாக உள்ள ஒரு மனிதர், தான் சரியாக இருப்பதாகவே கருதுவார், நம்புவார். ஏனெனில் அவருக்கு வேறுவிதமான பார்வையோ, எண்ணங்களோ, உணர்வுகளோ இருக்காது. அவரைப் பார்க்கிற பொழுது இவர் ஆணவமானவர் என்று உங்களுக்கு எண்ணத் தோன்றும். ஆனால் அவர் தன்னை மிகச் சரியானவராக கருதிக்கொண்டிருப்பார். அதேபோல உங்கள் சக்திநிலையிலேயும், சில பிடிவாதங்கள் இருக்கலாம். சிலருக்கு சக்திநிலை நீர்மையானதாக இருக்கும். மிக எளிய யோகக் கிரியைகளை பயில்கிறபோது, முதல் நாளே அவருடைய சக்திநிலை மேல்நோக்கி நகரத் தொடங்கி மலர்ச்சிகளை ஏற்படுத்தத் தொடங்கலாம். ஆனால் இன்னொரு மனிதருக்கோ அந்தப் பயிற்சிகளை நீண்ட நாள் மேற்கொண்டாலும் கூட ஏதும் நிகழாது. உங்கள் சக்திநிலை எவ்வளவு தூரம் வளைந்து கொடுக்கிறது என்பதைப் பொருத்ததுதான் இது. பலவிதமாய் இருப்பது போல் தெரிந்தாலும் இந்த பிடிவாதங்கள் தனித்தனியானவை அல்ல. அவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஒரு கோணத்தில் இருக்கிற பிடிவாதம் தன்னை பல்வேறு விதங்களிலும் வெளிப்படுத்திக்கொள்கிறது.

யோகப் பாதையைச் சரியாகப் பயன்படுத்துவது எப்படி?
பதஞ்சலியின் பாதை என்பது நீங்கள் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்தாலும், எவ்வளவு தூரம் விழிப்புணர்வற்று இருந்தாலும், எவ்வளவு கடுமையான கர்மவினைகளின் கட்டுக்குள் நீங்கள் சிக்கிக் கொண்டிருந்தாலும், பதஞ்சலியின் யோகமுறை உங்களுக்கு ஒரு வாய்ப்பாகவே இருக்கிறது. உங்கள் உடலை ஓரளவு வளைப்பதற்கு இணக்கம் தெரிவித்தாலே, ஒரு வினையை நீங்கள் கடந்திருக்கிறீர்கள் என்று பொருள். உங்கள் நெற்றி, முழங்காலைத் தொட்டால், உடல் சார்ந்த கர்மவினை ஒன்றை நீங்கள் கடந்திருப்பதாக அர்த்தம். நான் விளையாட்டிற்குச் சொல்லவில்லை. இதை இதற்கு முன் செய்திராத மனிதருக்கு அதுவொரு பெரிய வெற்றிதான். இந்த சிறிய தடை காலப்போக்கில் உங்கள் மனதில் பெரிதாக வளர்ந்திருக்கிறது. இப்போது உங்களுக்கு இருக்கிற இந்த சிறிய வளைந்து கொடுக்கிற தன்மைகூட காலம் போகப் போக இறுகிவிடக்கூடும். ஒரு காலத்தில் நீங்கள் உடல் சார்ந்தும், மனம் சார்ந்தும் மிகவும் பிடிவாதமானவராக மாறிவிடக்கூடும்.

இது எல்லோருக்குமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்க்கையிலேயே பாருங்கள், பத்து, பன்னிரெண்டு வயதில் உடல் சார்ந்தும், மனம் சார்ந்தும் நீங்கள் எவ்வளவு வளைந்து கொடுத்தீர்கள், இருபது வயதில் அந்த தன்மை குறைந்தது, முப்பது வயதில் ஏறக்குறைய முழுவதுமே போய்விட்டது. உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலேயும் கூட பிடிவாதம் மிகக் கடுமையாக உங்கள் வளர்ச்சிப் பாதையில் வந்துகொண்டே இருக்கிறது. இது வளர்ச்சி அல்ல, பின்னடைவு. உண்மையில் பலருக்கும் வாழ்க்கை ஒரு பின்னடைவாக இருக்கிறது. அவர்கள் வளர்வதில்லை, பின்னோக்கிப் போகிறார்கள். எவ்வளவு குறைந்த அளவு தனித்தன்மையோடு அவர்கள் வந்திருந்தாலும் கூட வளர்வதில்லை. துரதிர்ஷ்டவசமாக பின்னோக்கிப் போகிறார்கள். உங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பல வாய்ப்புகளை நீங்கள் முன்னெடுத்துச் செல்லவில்லை, பின்னோக்கித்தான் போகிறீர்கள்.

பெரும்பாலானவர்களுக்கு வருகின்ற நல்ல வாய்ப்புகள் எல்லாம் ஒரு சாபமாகவே முடிந்து விடுகிறது. செல்வம், செல்வாக்கு, வசதி, அறிவு இவற்றையெல்லாம் பெரும்பாலானவர்கள் ஒரு சாபமாகத்தான் பயன்படுத்துகிறார்கள். உங்களுக்கு வரமாக வந்தவற்றை நீங்கள் சாபமாக மாற்றியிருக்கிறீர்கள். உங்கள் விழிப்புநிலையின் உயரத்தைத் தொடுவதற்கோ, அமைதியாகவும், அன்பாகவும் மாறுவதற்கோ உங்கள் அறிவை நீங்கள் பயன்படுத்தவில்லை. உங்கள் அறிவைக் கொண்டு உங்களை நீங்களே பைத்தியமாக்கிக் கொள்கிறீர்கள். உதாரணமாக, ஒரு விவசாயியாக இருப்பது மிக நல்லது என்று கருதுகிறீர்கள்.

விவசாயம் மிக எளிது என்று உங்களுக்குத் தோன்றுகிறது. அதன் மீது பெரிய ஆசை உங்களுக்கு பிறக்கிறது. ஆனால் உண்மையிலேயே நீங்கள் ஒரு விவசாயியானால் இந்த உலகத்தையே சபிப்பீர்கள். மூன்று நாட்கள் உங்களுக்கான உணவை நீங்களே சம்பாதித்துக்கொள்ள வேண்டும் என உங்களை அனுப்பினால் ஒவ்வொரு நாளும் இந்த உலகத்தை நீங்கள் சபிக்கிறீர்கள். ஒன்று கிடைக்கிற பொழுது இன்னொன்றைப் பற்றிக் கனவு காண்கிறீர்கள். இதை ஆசை என்று நீங்கள் கருதலாம். இது முட்டாள்தனம், இதனால் வாழ்க்கையே சீர்குலைகிறது.

நீங்கள் படைத்தவன் சார்பாகவா அல்லது எதிரியாக செயல்படப் போகிறீர்களா?
வாழ்க்கைக்கு எதிராகப் போகிற யாரும், வாழ்வின் மூலத்தோடு முரண்படுகிற யாரும், முட்டாள்தனம் செய்கிறவர்கள்தான். ஒரு விஷயத்தை கவனியுங்கள். நீங்கள் உலகைப் படைத்தவருக்கு சார்பாகப் போகிறீர்களா? எதிராகப் போகிறீர்களா? இதை வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் கவனியுங்கள். இதை நீங்கள் கவனித்தாலே வாழ்வின் எல்லா சிக்கல்களும் தீர்ந்துவிடும். உங்களால், உங்களைப் படைத்தவரைப் பற்றி நினைக்க முடியவில்லையா? என்னை நினையுங்கள். நீங்கள் செய்கிற எந்த செயலும் எனக்கு சார்பாகச் செய்கிறீர்களா, எனக்கு எதிராகச் செய்கிறீர்களா என்று சிந்தியுங்கள். இதைச் செய்தாலே எல்லா சிக்கல்களும் தீர்ந்துவிடும். இந்த சாதனையை நீங்கள் செய்தாலே உங்கள் மனம் அமைதி பெறும். இதற்கு அமைதி வேண்டும். இல்லையென்றால் எதுவும் நிகழப்போவதில்லை. ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு மூச்சிலும் இதைப் பாருங்கள். இதைப் பார்க்க முடிந்தால் இந்த சாதனையே உங்களுக்குப் போதும். இது உங்கள் மனதை முழுவதும் தூய்மைப்படுத்தும். நாளையே நீங்கள் சமாதிநிலைக்கு ஆயத்தமாக இருப்பீர்கள்

சாதகர்: கேட்பதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது சத்குரு. ஆனால் நடைமுறையில் இது இவ்வளவு எளிமையா என்ன?

சத்குரு: உண்மையில் இது மிக எளிது. ஆனால் உங்களால் இது பெரிய சிக்கலாகிவிட்டது, உங்கள் ஆளுமை காரணமாக, உங்கள் இயல்பு காரணமாக இந்தப் பாதை ஒன்றும் சிக்கலானதல்ல. இந்தப் பாதையில் ஒரு மனிதன் எதிர்கொள்கிற சிக்கல்கள், அந்தப் பாதை காரணமாக ஏற்படுபவை அல்ல. உங்கள் மனதிற்குள் இருக்கிற தடைதான் இந்த சிக்கல்கள் ஏற்படக் காரணம். இந்தப் பாதை மிக எளிமையானது. ஆனால் இந்தப் பாதையில் நீங்கள் இருப்பதால் அது சிக்கல் மிகுந்ததாக இருக்கிறது. உங்களுக்குள் எதுவுமே மாறுவதில்லை. மிக பிடிவாதத்தோடு இருக்கிறீர்கள். அந்த பிடிவாதத்தில் உறுதியாகவும் இருக்கிறீர்கள். உங்கள் மனதில் இருக்கிற குழப்பங்கள் அழிவதற்கு குருவின் அருள் உங்களுக்குத் தேவைப்படுகிறது. இதை நீங்கள் அனுமதித்தால் இந்தப் பாதை மிக எளிதானது. ஏனென்றால் பயணத்தின் இலக்கே இந்தப் பாதைதான். இங்கே நீங்கள் அமைதியாக அமர்ந்தால் எல்லாமே பிரபஞ்சத்தோடு இயல்பாக இணைந்து போகும். வேறுவிதமாக நிகழ வாய்ப்பே இல்லை. வேறுவிதமாய் நடந்துகொள்ள நீங்கள் முயன்றால்தான் அது வேறு வழியில் போகும். நீங்கள் வாழ்கிற பிரபஞ்சத்திலிருந்து எப்படி விலகிப் போகமுடியும்? அது எப்படி சாத்தியம்? எல்லா விதத்திலும் உள்ளேயும் வெளியேயும் அது உங்களை அரவணைத்துக் கொள்கிறது. அதனிடமிருந்து யாரும் விலகியிருக்க முடியாது. தெரிந்தோ, தெரியாமலோ அதனிடமிருந்து விலகி இருப்பதற்கான எல்லா வேலைகளையும் நீங்கள் செய்கிறீர்கள். அவற்றையெல்லாம் நிறுத்துங்கள், எல்லாம் நலமாகிவிடும். நீங்கள் செய்து கொண்டிருக்கிற எல்லா முட்டாள்தனத்திலிருந்தும் உங்களை விடுவிக்கத்தான், இந்த கிரியைகளை உங்களிடம் நாங்கள் தொடங்கியிருக்கிறோம்.

ஒருவகையில் பார்த்தால் இவையெல்லாம் தேவையேயில்லை. நீங்கள் ஜே. கேயிடம் போய் ஞானமடைவதற்கு எவ்வளவு நேரம் கும்பகப் பயிற்சி செய்ய வேண்டும் என்று கேட்டால், உங்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்றுவார். ஏனென்றால் அது அப்படிப்பட்டதல்ல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது இப்பொழுது தேவைப்படுகிறது. உங்கள் சக்திநிலையை நீங்கள் அந்த அளவிற்கு அடக்கியிருக்கிறீர்கள். வாழ்க்கையில் எதையும் நகரவிடாமல் உங்கள் மனம் ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது. உங்கள் அகந்தைக்கு எது தேவையோ, அதை மட்டும் செய்கிறீர்கள். உங்கள் சக்திநிலைகூட உங்கள் அகந்தைக்கு ஏற்ற அசைவுகளைத்தான் இதுவரை கண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் சக்தி நகர்ந்தால் உங்கள் அகங்காரம் வெடிக்கும். உங்களுக்குள் சக்திநிலை உயர்கிறபோது மற்றவையெல்லாம் கரைந்துவிடும். இது உங்கள் அகங்காரத்திற்குத் தெரியும்.

எனவே அது உங்கள் சக்திநிலைகளை அடக்கி வைக்கிறது. சக்தி சிறிதுகூட இல்லையென்றால் அகங்காரம் பலவீனம் அடையும். சக்தி முழுக்க முழுக்கத் தடைபட்டு விடுமேயானால், அதுவும் அதற்குப் பிடிக்காது. எனவே தனக்கு வேண்டிய அளவு சக்தியை மட்டும் எடுத்துக் கொள்கிறது. சக்திநிலை அதிகமானால் அகந்தை அடியோடு தகரும். குண்டலினி மேலெழும்பத் தொடங்குகிறபோது மற்றவையெல்லாம் தகர்ந்து போய்விடும், எதுவும் மிஞ்சாது. சூழ்ந்திருப்பவையோடு சங்கமிக்கிற சக்தியாக மட்டுமே நீங்கள் இருப்பீர்கள். உங்களுக்கென்று தனியான எண்ணம் ஏதும் இருக்காது. இந்தப் பிடிவாதத்தை சரணடையச் செய்ய உங்களுக்கு விருப்பம் இல்லை என்பதால், உங்கள் சக்திநிலையைத் தூண்டிவிட இந்த சாதனைகளை சொல்லித் தருகிறோம்.

படைப்பாற்றலையே தூண்டிவிடுகிறோம்:
ஆசனங்களும், கிரியைகளும் அதற்குத்தான். உங்களாலேயே செய்துகொள்ள முடியவில்லை என்பதால், உங்களுக்குள் இருக்கிற படைப்பாற்றலைத் தூண்டிவிடுகிறோம். அது நகரத் தொடங்கினால் அதுவே எல்லாவற்றையும் சரிசெய்கிறது. அது ஒரு வெள்ளம் போன்றது. வெள்ளத்திற்குப் பிறகு ஒரு பகுதியை சென்று நீங்கள் பார்வையிட்டிருக்கிறீர்களா? வெள்ளத்திற்கு முன்னும், பின்னும் அந்த இடத்தை நீங்கள் பார்த்தால் அந்த மாற்றம் மகத்தானது என்பதை அறியமுடியும். அது ஒரு சோகம் என்று மக்கள் கருதுகிறார்கள். ஆமாம், அது சோகம்தான். எதை விட்டுச் செல்கிறது, எதை எடுத்துச் செல்கிறது என்பதைப் பார்த்தால் அது சோகம்தான்.

உங்கள் இல்லங்களை, உங்கள் பயிர்களை, ஏன் உங்கள் நூற்றாண்டுகளையும், பழைய உலகங்களையும்கூட சிலமணி நேரங்களுக்குள் அது முற்றாகத் துடைத்துச் செல்கிறது. எனவே, உங்கள் ஆத்மசாதனைகள் உங்களை எங்கும் எடுத்துச் செல்வதற்காக அல்ல. ஒரு வெள்ளத்தை ஏற்படுத்தி, நீங்கள் படைத்திருக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் முற்றாகத் துடைத்துவிட்டு, உங்களை கடவுள் எப்படிப் படைக்க விரும்பினாரோ அப்படியே உங்களை விட்டு செல்வதுதான் அதன் நோக்கம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X