சென்னை : மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வு விவகாரத்தில், தி.மு.க.,வின் நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், அரசு தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளது
. ''நீட் தேர்வுக்கான கல்வியை, மாணவர்கள் கற்றுக் கொள்வது, அவர்கள் டாக்டரான பின்னும் கைகொடுக்கும்,'' என, முதன்முறையாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியிருப்பதால், மாணவர்கள்உற்சாகம் அடைந்துள்ளனர்.
சென்னை, கிண்டி லேபர் காலனி லயன்ஸ் கிளப் பள்ளியில், அரிமா சங்கத்தின் சார்பில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமை, அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று பார்வையிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்துக்கு விலக்கு பெறுவதில் உறுதியாக இருக்கிறோம். அதற்காகவே, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை தயாராகி வருகிறது.இதற்கிடையே, நீட் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, அ.தி.மு.க., அரசு, சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதனால், தற்போது புதிதாக தீர்மானம் நிறைவேற்றும் போது, கூடுதல் பலத்துக்காக குழு அமைத்து, அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
கைகொடுக்கும்
நீட் தேர்வுக்கான கல்வியை மாணவர்கள் கற்றுக் கொள்வது, நீட் தேர்வுக்கு பின்னரும், டாக்டரான பின்னும், அவர்களுக்கு கைகொடுக்கும். நீட் தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது, மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும், மன உளைச்சல் ஏற்படாமல் இருக்கவே, நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.மத்திய அரசு வழங்கும் கொரோனா தடுப்பூசிகளை மட்டுமே, நம்பி இருக்க வேண்டி உள்ளது. தடுப்பூசிகள் வந்தவுடன், உடனே மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.
கொள்கை
நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் நோயிலிருந்து, குழந்தைகளை பாதுகாக்க, தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 'நிமோகாக்கல் கான்ஜுகேட்' தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி, பூந்தமல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று நடந்தது. அதை துவக்கி வைத்த பின், நிருபர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன், ''நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தான், தி.மு.க.,வின் பிரதான கொள்கை,'' என, மாற்றிப் பேசினார்
.அவர் கூறியதாவது:நீட் தேர்விற்கு மாணவர்கள் தயாராவது தவறானது அல்ல. நீட் தேர்வில் விலக்கு பெற்று தருவது, தி.மு.க.,வின் பிரதான கொள்கை.இதற்காக, பிரதமரை முதல்வர் நேரில் சந்தித்த போது வலியுறுத்தினார். ஆட்சி பொறுப்பேற்ற பின், நீட் தேர்வு விலக்கு கேட்டு, தமிழக அரசு போராடி வருகிறது.மாணவர்களுக்கு பக்க பலமாக, தமிழக அரசு இருக்கும். நீட் தேர்வு சட்டப் போராட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு, நீட் தேர்வு வந்து விட்டால், மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் சங்கடமாக அமைந்து விடும். அதனால், மாணவர்கள் நீட் தேர்விற்கு படித்துக் கொண்டு தான் இருப்பர். இவ்வாறு, அவர் கூறினார்.
இப்படி இவர் பேசினாலும், நீட் தேர்வின் பலனை, உள்ளது உள்ளபடி கூறி இருப்பது, மாணவர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 'நமக்கு முறையான பயிற்சி அளித்தால், நீட் தேர்வில் மிகச் சிறந்த சாதனை புரிவோம் என்பதை அமைச்சர் நன்கு புரிந்து வைத்துள்ளார். பின் எதற்கு தேவையில்லாத மாற்றுக் கருத்துகளும், ஆராய்ச்சிக் குழுவும்...' என, மாணவர்கள் வௌிப்படையாகக் கேட்கின்றனர்.
'விலக்கு பெறுவதே இலக்கு'
திருச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், நேற்று அளித்த பேட்டி: புதுச்சேரியில், 16ம் தேதி, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாமா என, கல்வித்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடந்தது. அதிகாரிகள் தரப்பில் தெரிவித்த கருத்துக்கள், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
'நீட்' வேண்டாம் என்பது தான், தமிழக அரசின் நிலைப்பாடு. தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளோம். முதல்வர் கூறியபடி, நீட் தேர்வில் விலக்கு பெறுவது தான் எங்கள் இலக்கு.செப்டம்பர், 9ம் தேதி முதல், ஆன்லைன் வாயிலாக நீட் தேர்வுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி, 4ம் தேதி முதல், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
முதுநிலை 'நீட்' தேர்வுசெப்., 11ல் நடக்கிறது
புதுடில்லி: இளநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, செப்டம்பர், ௧௨ல் நடக்கும் என, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், 'முதுநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, செப்., 11ல் நடக்கும்' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று அறிவித்தார். இந்தத் தேர்வை, ஏப்ரல், 18ல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
துப்பட்டாவை பிடுங்க வில்லன் நடிகர் எதிர்ப்பு
வில்லன் நடிகர் ஆனந்த்ராஜ் அளித்த பேட்டி:'நீட்' தேர்வை, 18 வயது நிரம்பாதவர்கள் எழுதுகின்றனர். தேர்வாளர்களை, மகாபாரத போர் வீரர்கள் போல முடியெல்லாம் விரித்து போட்டு, துப்பட்டாவை பிடுங்கி வைத்துக் கொண்டு எழுத வைக்கின்றனர். இது, கொடுமையான விஷயம். ஆடையை எடுத்து விட்டு எழுத வைப்பது ஏன்? இதனால், அவர்கள் தேர்வை கூட, சரியாக எழுத முடியாமல் தவிக்கின்றனர். அதற்கு பதில், தேவையான கண்காணிப்பு கருவிகளை வாங்குங்கள். இதுகுறித்து, சட்டப்படியான வழக்கு தொடர உள்ளேன். நீட் தேர்வை தாராளமாக நடத்தட்டும். ஆனால், ஆடை மீது கை வைக்காமல் எழுத வையுங்கள். இதை மாணவ - மாணவியரும் வலியுறுத்த வேண்டும். மீறினால், தேர்வு எழுத செல்லக்கூடாது.
'நீட்' தேர்வு குறித்து இவ்வாறு பேசிய ஆனந்த்ராஜ் கூறியதாவது:தற்போது, தமிழகத்தை பிரிக்க வேண்டும் என, வாதம் நடந்து வருகிறது. 'தமிழகத்தை பிரிக்க வேண்டும்' என, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் போன்ற, எந்த அரசியல்வாதி சொன்னாலும், அவர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் தேர்தலில் நின்று ஜெயிக்கட்டும். அப்போது அவர்களுக்கான ஆதரவு தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.