சென்னை :'கல்விக்கு என தனியாக வானொலியை துவங்க வேண்டும்' என, கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை:மொபைல் போனிலேயே மாணவர்கள் அதிக நேரம் செலவிடுவதால், கண் பார்வை, செவி கேட்கும் திறனில் பிரசனை ஏற்படுகிறது என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தலைவலி, கண் எரிச்சல், கண்களை சுற்றி கருவட்டம், சரியான துாக்கமின்மை போன்ற, 'ஆன்லைன்' வகுப்புகளின் விளைவுகளை, எல்லா குடும்பங்களும் எதிர்கொள்கின்றன. இதற்கு வானொலியே சிறந்த மாற்றாக இருக்க முடியும். இதன் வாயிலாக, 'ஸ்க்ரீன் டைமை' கணிசமான அளவு குறைக்க முடியும்.
கல்வி தொலைக்காட்சி போல தமிழக அரசு, கல்விக்கென தனி வானொலி அல்லது பண்பலை வரிசை துவங்கலாம். திறன்பேசி, மடிக்கணினி, தடையற்ற இணையம் ஆகியவற்றுக்காக சிரமப்படும் மாணவர்களுக்கும், இது பயனளிக்கும்.கடலுார் மாவட்டம், புவனகிரிக்கு அருகே உள்ள, கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆசிரியர் கார்த்திக்ராஜா, மாணவர்கள் மீதான தனிப்பட்ட அக்கறையால், www.kalviradio.com என்ற, ஒரு இணைய ரேடியோவை உருவாக்கியுள்ளார்.
'2 ஜி' இணைய வசதி மட்டுமே கொண்டிருக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களை மனதில் வைத்து, இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறார். இந்த கல்வி ரேடியோ தளம், இதுவரை, 3.20 லட்சம் முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்டு உள்ளதும், 14 ஆயிரத்து, 500 மணி நேரங்களுக்கு மேல் இயக்கப்பட்டு உள்ளதுமே, இதன் தேவைக்கான அத்தாட்சி.தனி முழுநேர வானொலி உருவாக்கப்படுமானால், ஏழை எளிய மாணவர்களுக்கு மிகப்பெரிய வசதியாக இருக்கும். இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE