செஞ்சி:செஞ்சி அருகே காணாமல் போன பள்ளி மாணவி, மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தார். இச்சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன் மகள் ரம்யா, 14; அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவரை கடந்த 11ம் தேதி முதல் காணவில்லை.
மகளிர் காவல் நிலையம்
இது குறித்து பச்சையப்பன், செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதில் மணியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மகளை கடத்திச் சென்றதாக கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று காலை 10:00 மணியளவில் கொங்கரப்பட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்பவரின் விவசாயக் கிணற்றில் ரம்யாவின் உடல் மிதந்து தெரிந்தது. ரம்யாவை கற்பழித்து கொலை செய்து கிணற்றில் வீசிஉள்ளனர். தீயணைப்பு வீரர்கள் மூலம் ரம்யா உடலை மீட்டனர்.
சாலை மறியல்
பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்ற போது, 200க்கும் மேற்பட்டார், சாலை மறியல் செய்தனர்.எஸ்.பி., ஸ்ரீநாதா சமாதானம் செய்தார். செஞ்சி போலீசார் மணியம்பட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவனையும், அவனது கூட்டாளிகள் மூவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா அடிமைகள்
மறியல் செய்த பொதுமக்கள் போலீசாரிடம் கூறுகையில், 'ரம்யாவை 4க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ஏரியில் வைத்து கற்பழித்து கிணற்றில் வீசியுள்ளனர். அருகில் உள்ள கிராமங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடப்பதால் இதற்கு அடிமையான சிறுவர்கள் குற்றச் செயலில் ஈடுபடுகின்றனர்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE