சென்னை : முதுகெலும்பு தசை செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை மித்ராவின், உயிர் காக்கும் மருந்திற்கு வரி விலக்கு அளிக்குமாறு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளார்.
'முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான, உயிர் காக்கும் மருந்துகளை, இறக்குமதி செய்யும் போது, வரிவிலக்கு அளிக்க வேண்டும்' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:முதுகெலும்பு தசை செயலிழப்பால் பாதிக்கப்பட்டோருக்கு, மரபணு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கான மருந்தின் விலை, 16 கோடி ரூபாயாக உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு, 90 முதல், 100 பேர் வரை, இந்நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மருந்தின் விலை அதிகமாக இருப்பதால், பலர் சிகிச்சை மேற்கொள்ள சிரமப்படுகின்றனர்.
இந்த மருந்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும்போது, சுங்க வரி மற்றும் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது. சமீபத்தில், ஒரு குழந்தைக்காக மருந்தை இறக்குமதி செய்தபோது, மத்திய அரசு வரி விலக்கு அளித்தது.எனவே, உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு, சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., வரி மற்றும் இதர வரிகளில் இருந்து விலக்கு அளிக்க, நிதித்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

அண்ணாமலை:
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தை சேர்ந்த, 2 வயது குழந்தை மித்ரா, முதுகெலும்பு தசை செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருந்தை இறக்குமதி செய்ய, 16 கோடி ரூபாய் செலவாகும். அதற்கு, இறக்குமதி வரி, ஜி.எஸ்.டி., வரியாக, 6 கோடி ரூபாய் வருகிறது.
குழந்தையின் தந்தை நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். எனவே, மனிதநேய அடிப்படையில், குழந்தையின் உயிரை காக்கும் மருந்திற்கு, வரி விலக்கு அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE