சென்னை: நீட் தேர்வின் தாக்கம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, தனது 165 பக்க அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது.
தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை, கடந்த ஜூன் 10ம் தேதி தமிழக அரசு அமைத்தது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்திருந்தது
அதன்படி, சுமார் 89,342 பேர் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த கருத்துகளை பரிசீலனை செய்த ஆய்வுக்குழு, பல கட்ட ஆலோசனைகளை நடத்தியது. இந்த குழுவுக்கு எதிராக பா.ஜ., தொடர்ந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் தங்களின் அறிக்கையை இன்று (ஜூலை 14) காலை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் அளித்தனர்.
அறிக்கை தாக்கல் செய்தப்பிறகு செய்தியாளர்களிடம் ஏ.கே.ராஜன் கூறியதாவது: 165 பக்கம் கொண்ட ஆய்வறிக்கை முதல்வரிடம் வழங்கப்பட்டு உள்ளது. பெரும்பான்மையானவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளனர். நீட் தேர்வின் தாக்கம் தொடர்பான முக்கிய அம்சங்கள் முதல்வரிடம் விளக்கப்பட்டுள்ளது. கருத்துக்கள் அடிப்படையிலான ஆய்வறிக்கையை வழங்குவது மட்டும் தான் எங்களுடைய பணி. அதனடிப்படையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை எங்களால் சொல்ல முடியாது. மற்றவைகள் எல்லாம் தமிழக அரசு தான் தெரிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE