புதுடில்லி: தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'மிஷன் 2024' எனப்படும் அடுத்த பார்லிமென்ட் தேர்தலை ஒட்டிய திட்டமிடலுக்காக, அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோரை சந்தித்தார். பா.ஜ.,வை எதிர்த்து 2024 பார்லிமென்ட் தேர்தலில் வலிமையுடன் போராட எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைப்பது பற்றியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், டில்லியில் நேற்று (ஜூலை 13) காங்., எம்.பி., ராகுல், பொதுச்செயலர் பிரியங்கா ஆகியோரையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது கே.சி.வேணுகோபால், ஹரிஷ் ராவத் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்தத் தலைவர்களும் உடனிருந்து உள்ளனர். அடுத்தாண்டு உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இச்சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப் காங்., முதல்வரான அமரீந்தர் சிங்குக்கு தேர்தல் பணியாற்ற பிரசாந்த் கிஷோர் ஒப்புக்கொண்டிருப்பதால், ராகுல், பிரியங்கா உடனான சந்திப்பு, பஞ்சாப், உ.பி., மாநில தேர்தல் தொடர்பானது என்ற தகவலும் வெளியானது.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு மாநில தேர்தல் விவகாரம் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியை வலிமையாக்கவும், 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு அக்கட்சியை பா.ஜ.,வுக்கு எதிராக வலிமை கொண்ட எதிர்க்கட்சியாக மாற்றவும் பிரசாந்த் கிஷோர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை. பிரசாந்த் கிஷோர், ஏற்கனவே ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் சேர்ந்து, பின்னர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE