தமிழக கோவில்களின் சொத்துக்களில் முழுதும் ஒத்துப்போகும் இனங்களாக, 3.44 லட்சம் ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்நிலங்களின், 'அ' பதிவேடு, நகர நில அளவை பதிவேடு, சிட்டா போன்றவை, பொது மக்கள் பார்வையிடும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக, அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், இன்றளவில் ஒரு கோவிலின் நிலத்தைக் கூட, பார்வையிட முடியவில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புது வேலை
ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 36 ஆயிரத்து 615 கோவில்கள்; 56 மடங்கள்; 57 மடத்துடன் இணைந்த கோவில்கள்; 1,721 குறிப்பிட்ட அறக்கட்டளைகள்; 189 அறக்கட்டளைகள்; 17 சமணக் கோவில்கள் உள்ளன.அவற்றுக்கு சொந்தமாக நன்செய், புன்செய், மானாவாரி என, 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. கோவில்களுக்கு சொந்தமாக 22 ஆயிரத்து 600 கட்டடங்கள், 33 ஆயிரத்து 665 மனைகள் உள்ளன. 1.23 லட்சம் பேருக்கு விவசாய நிலங்கள், வாடகைக்கும் குத்தகைக்கும் விடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக சேகர்பாபு நியமிக்கப்பட்டார். அதனுடன் கமிஷனரும் மாற்றப்பட்டு, குமரகுருபரன் புதிய கமிஷனராக பொறுப்பேற்றார்.அதன்பின், அறநிலையத் துறை புது வேகம் பெற்று, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழக கோவில்களின் சொத்துக்கள் பொது மக்கள் பார்வையிடும் வகையில், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் திட்டத்தை அறிவித்தது.அறிநிலையத் துறை வட்டாரம் கூறியதாவது:அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களின் நில உரிமை ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகள், முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோவில் நிலங்களின் உரிமை ஆவணங்கள், வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 'தமிழ்நிலம்' மென்பொருளோடு ஒப்பீடு செய்யப்பட்டன.
இதில், முழுதும் ஒத்துப்போகும் இனங்கள்; பகுதியாக ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என, மூன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.கோவில்களுக்கு சொந்தமான அனைத்து நிலங்களின் தலைப்பு பத்திரங்களும், சம்பந்தப்பட்ட கோவில்களின் பெயரில் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.முதற்கட்டமாக 3.44 லட்சம் ஏக்கர் நிலங்கள், முழுதும் ஒத்துப்போகும் இனங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அந்நிலங்களின், 'அ' பதிவேடு, நகர நில அளவை பதிவேடு, சிட்டா போன்றவை, பொதுமக்கள் பார்வையிடும் வகையில், www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.இவ்வாறு, அந்த வட்டாரத்தில் கூறப்பட்டது.
'ரெக்கார்டு நாட் பவுண்ட்'
இதற்காக, அறநிலையத் துறை இணையதளத்தில், 'திருக்கோவில்கள் நிலங்கள் பட்டியல்' எனும் களம் உருவாக்கப்பட்டது.அதன் உள் நுழைந்தால், மாவட்டம், வட்டம், வருவாய் கிராமம், அஞ்சல் குறியீடு, இருப்பிடம், கோவில் எண், கோவில் பெயர் ஆகியவை கேட்கப்படுகின்றன. அதன்பின், அங்கீகார மதிப்பும் உள்ளது.ஆனால், இந்த களத்தில் சென்று பதிவிட்டால், 'ரெக்கார்டு நாட் பவுண்ட்' என்ற, பதிலே கிடைக்கிறது. சாதாரண மக்கள், பக்தர்கள் மட்டுமின்றி, விபரம் அறிந்தவர்களால் கூட, ஒரு கோவிலின் நிலத்தையும் பார்வையிட முடியவில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சந்தேகம்
ஆன்மிக நல விரும்பிகள் கூறியதாவது:அறநிலையத் துறை கோவில்களுக்கு, ௧985ம் ஆண்டு 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்துள்ளன. கடந்த 25 ஆண்டுகளில், 4.78 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளதாக தெரிவித்துள்ளது. 47 ஆயிரம் ஏக்கர் நிலம் எப்படி மாயமானது என தெரியவில்லை.தற்போது, முழுதும் ஒத்துப்போகும், 3.44 லட்சம் ஏக்கர் நிலங்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு கோவிலின் நிலத்தை கூட இன்று வரை பார்க்க முடியாவில்லை. எனவே, கோவில் நிலங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இது குறித்து, அறநிலையத் துறைதான் விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர்- -