விருதுநகர் காங்., -- எம்.பி., மாணிக் தாகூர், தெலுங்கானா காங்., தலைவரை நியமிக்க, 50 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில், 2018ல் நடந்த சட்டசபை தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களிலும், மாநில காங்., தலைவராக இருந்த உத்தம்குமார் ரெட்டி சரியாக செயல்படவில்லை என, கட்சி தலைமைக்கு புகார் சென்றது.உடனே, காங்., மேலிடம், விருதுநகர் எம்.பி.,யும், தெலுங்கானா மாநில காங்., மேலிட பொறுப்பாளருமான மாணிக் தாகூரிடம் கருத்து கேட்டது.
![]()
|
இதையடுத்து, மாநில காங்., தலைவராக ரேவந்த் ரெட்டி என்பவர் நியமிக்கப்பட்டார். இதனால், முன்னாள் மாநில தலைவர் உத்தம்குமார் ரெட்டியும், அவரது சகோதரர் படிகவுசிக் ரெட்டியும், அதிருப்தியில் இருந்தனர். அத்துடன் படிகவுசிக் ரெட்டி, மாநில ஆளும்கட்சியான, டி.ஆர்.எஸ்., எனப்படும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார். மாநில சுகாதார துறை அமைச்சராக இருந்த, எடல ராஜேந்தர், நில அபகரிப்பு விவகாரத்தில் சிக்கி, சமீபத்தில் அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ., பதவியையும் இழந்தார்.
இதையடுத்து, ஹுசுராபாத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. பதவி இழந்த ராஜேந்தர், பா.ஜ.,வுக்கு சென்று விட்டதால், படிகவுசிக் ரெட்டி, ஆளும் டி.ஆர்.எஸ்., கட்சி சார்பில் போட்டியிட விரும்பினார். இந்நிலையில், தனக்கு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி சார்பில், இடைத்தேர்தலில் போட்டி யிட, காங்., மேலிடம், 'ஓகே' கூறி விட்டது என்று, படிகவுசிக் ரெட்டி, டி.ஆர்.எஸ்., கட்சி பிரமுகர் ஒருவ ருடன் பேசும், ஆடியோ பதிவு வெளியானது.
உடனே காங்கிரஸ் மேலிடம், படிகவுசிக் ரெட்டிக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பியது. கூடவே, அவரை கட்சியில் இருந்து நீக்கியது. இதற்கு, மாநில காங்., தலைவர் ரேவந்த் ரெட்டி, மேலிட பொறுப்பாளர் மாணிக் தாகூர் ஆகியோர் தான் காரணம் என நினைத்த, படி கவுசிக் ரெட்டி, மாநில காங்., தலைவர் பதவியை அடைய மாணிக் தாகூருக்கு, ரேவந்த் ரெட்டி, 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார் என்று, குற்றம் சாட்டினார். இதையடுத்து, தெலுங்கானா அரசியல் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.
'பொய் சொல்கிறார் கவுசிக்'
மாநில காங்., தலைவராக இருந்த உத்தம்குமார் ரெட்டி, சரியாக செயல்படவில்லை என்பதால், கட்சி தலைமை, அவரை நீக்கிவிட்டு, ரேவந்த் ரெட்டியை நியமித்துள்ளது. இதற்கும், அவரது சகோதரர் கவுசிக் ரெட்டி மீது, கட்சி தலைமை நடவடிக்கை எடுத்ததற்கும், நான் தான் காரணம் என, நினைக்கின்றனர்.
அதனால், என் மீது லஞ்சம் வாங்கியதாக, குற்றஞ்சாட்டுகின்றனர். கவுசிக் ரெட்டி அபாண்டமாக பொய் சொல்கிறார். இதற்காக, அவர் மீது, அவதூறு வழக்கு தொடுக்க, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளேன். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.-மாணிக் தாகூர், எம்.பி., விருதுநகர். - நமது நிருபர் --