மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரான நிதின் கட்கரி, பல்வேறு சாலைகளில் ஓடும் வாகனங்களின் அதிகபட்ச வேகத்தை, 20 கி.மீ., உயர்த்த சொல்லி இருக்கிறார்.உதாரணமாக, தேசிய நெடுஞ்சாலைகளில் கார்கள் மணிக்கு 100 கி.மீ., வேகத்திலும் எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கி.மீ., வேகத்திலும் செல்வதற்கு சாலை போக்குவரத்து துறை அனுமதி கொடுத்துள்ளது.நாடெங்கும் தரமான புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நான்கு வழிப் பாதையாகவும், ஆறு வழிப் பாதையாகவும் சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், வாகனங்களின் வேகத்தை உயர்த்துவது அவசியம் என்று தெரிவித்துள்ளார் நிதின் கட்கரி.நெடுஞ்சாலைகளில் உள்ள மற்றொரு பிரச்னைக்கும் தீர்வு காணச் சொல்லியிருக்கிறார் மத்திய அமைச்சர். அதாவது, ஒரே நெடுஞ்சாலையில் ஒரு முனையில் வாகனங்களுக்கு ஒருவிதமான வேகக் கட்டுப்பாடும், இன்னொரு முனையில் வேறொரு வேகக் கட்டுப்பாடும் உள்ளது.வேகக் கட்டுப்பாடு என்பது மத்திய சாலைப் போக்குவரத்து துறையை மட்டுமே சார்ந்திருப்பதல்ல. அந்த சாலைகள் எந்த மாநிலத்தின் கீழ் வருகிறதோ, அங்கேயுள்ள காவல்துறை, பல்வேறு வேகக் கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்திவருகின்றன.
இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடவும் செய்யும்.இதனால், ஒரே சீரான வேகத்தில் வாகனங்களை செலுத்த முடியவில்லை. வேகத்தை அதிகப்படுத்தியும், குறைத்தும் ஓட்ட வேண்டியுள்ளது. இதனால், எரிபொருட்களின் அளவும், வாகனங்களின் தேய்மானமும்
அதிகமாகிறது. எந்த பகுதியில், எவ்வளவு வேகத்தில் போகவேண்டும் என்பதற்கான அறிவிப்பு பலகைகள் இல்லாதிருப்பதும் இன்னொரு பிரச்னையை ஏற்படுத்திஉள்ளது. இந்தப் பிரச்னைகளை கருத்தில் கொண்டு, நிதின் கட்கரி, 'ஒரே சீரான வேகக்கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதற்கான வழிமுறையை உருவாக்குங்கள்' என்று தமது துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமல்லாது, நகரங்களுக்கு இடையே உள்ள சாலைகளில், பல்வேறு வாகனங்களுக்கான வேகக்கட்டுப்பாடு வரையறைகள் உள்ளன. அவற்றையும் மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக, சாலை போக்குவரத்து துறை கருதுகிறது.வேகக் கட்டுப்பாட்டு வரையறைகளை மாற்றியமைப்பது தொடர்பாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம், போக்குவரத்து துறை கூடுதல் செயலர் அபய் டாம்லே தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
அது, ஆய்வுகளை மேற்கொண்டு, தமது அறிக்கையை அமைச்சரிடம் வழங்கியுள்ளது.அதை ஒட்டியே, நிதின் கட்கரி, வேகத்தை அதிகப்படுத்தும் கருத்தை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அதிவேகத்தால், சாலை விபத்துகளும், மரணங்களும் அதிகமாகின்றன என்ற தகவல் சொல்லப்பட்டாலும், சாலை வசதிகள் நவீனமாகியுள்ள நிலையில், குறிப்பிட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளிலும் வாகனங்களின் வேகம் அதிகப்படுத்தப்படலாம் என்று கருதுகின்றனர், இந்திய ஆட்டோமொபைல் சங்கத்தினர்.
-- நமது நிருபர் --
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE