திருச்செங்கோடு: திருச்செங்கோடு சார் - பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மூர்த்தி, ''சார் - பதிவாளர் உடனடியாக மாற்றப்படுவார்,'' என தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சார் - பதிவாளர் அலுவலகத்தில், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சார் - பதிவாளர் முருகானந்தம் மற்றும் அலுவலர்களிடம் 30 நிமிடங்கள் விசாரித்தார்.'தற்போது எந்த நம்பர் 'டோக்கன்' பத்திரப் பதிவு நடக்கிறது' என, அமைச்சர் கேள்வி எழுப்பினார். '20ம் நம்பர் டோக்கன் பத்திரப்பதிவு நடக்கிறது' என, சார் - பதிவாளர் பதிலளித்தார். ஆனால், எட்டாம் நம்பர் டோக்கனே பதிவு செய்யப்படவில்லை என தெரிந்தது.
பின், அமைச்சர் கூறியதாவது: ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என புகார் வந்ததை தொடர்ந்து, திருச்செங்கோடு சார் - பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. பத்திரப் பதிவு டோக்கன் எண் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும். இங்கு ஒலிப்பெருக்கியே அமைக்கப்படவில்லை. இடைத்தரகர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. திருச்செங்கோடு சார் - பதிவாளர் உடனடியாக மாற்றப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூரில் கண்டிப்பு
திருப்பூர், நெருப்பெரிச்சலில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி, நேற்று மதியம் திடீர் ஆய்வு நடத்தினார்.பதிவுத் துறை செயலர்ஜோதி நிர்மலா, தலைவர் சிவனருள் உடனிருந்தனர். ''கோவையில் நடந்த கூட்டத்தில் அறிவுறுத்தியும் கூட, அலுவலகத்தில் வெளி நபர்கள், இடைத்தரகர்கள் நடமாட்டம் உள்ளது. என்ன கண்காணிக்கிறீர்கள்; சொன்னதை மறந்து விட்டீர்களா?,'' என, அதிகாரிகளை அமைச்சர் கடிந்து கொண்டார்.
அலுவலகத்தில் நின்றிருந்தவர்களிடம் ஒவ்வொருவராக, 'நீங்க யாருங்க?' என, செயலர் ஜோதி நிர்மலா கேட்டார். மாவட்ட உதவி பதிவுத் துறை தலைவர் ராமசாமியிடம், ''நீங்க தானே வந்து, எல்லாரையும் அறிமுகப்படுத்தி வைத்திருக்க வேண்டும்,'' என, கடிந்து கொண்டார்.