புதுடில்லி: மஹாத்மா காந்தி கோகலே போன்ற சுதந்திர போராட்டத் தலைவர்களை அடக்கி வைக்க பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்ட தேச துரோக சட்டம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னும் தொடர வேண்டுமா பல பழைய சட்டங்களை நீக்கியுள்ள மத்திய அரசு இந்த சட்டத்தை ஏன் அகற்றவில்லை என உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.இது குறித்து மத்திய அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.
அரசுக்கும் நாட்டுக்கும் எதிராக கருத்து தெரிவிப்போர் மீது ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டத்தின் 124ஏ பிரிவான தேச விரோத சட்டம் பயன்படுத்தப்படுகிறது. கருத்து தெரிவிக்கும் தனிமனித உரிமையை பறிக்கும் வகையில் இந்த சட்டம் பயன்படுத்தப்படுவதாகவும் அது செல்லாது என அறிவிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுஉள்ளது.
மோசமான விளைவு
எடிட்டர்ஸ் கில்டு எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான எஸ்.ஜி. வோம்பாத்கரே தாக்கல் செய்துள்ள இந்த மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா ரிஷிகேஷ் ராய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.மனுவில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வோம்பாத்கரே கூறியுள்ளதாவது:அடிப்படை உரிமையான கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்துக்கு கடும் கட்டுப்பாட்டை விதிக்கும் வகையில் மிகவும் மோசமான விளைவு ஏற்படுத்தும் வகையில் இந்தச் சட்டம் உள்ளது. அதனால் இந்தச் சட்டப் பிரிவை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது செல்லாது என அறிவிக்க வேண்டும்.இந்த சட்டத்தின்கீழ் குற்றமாக அறிவிப்பதற்கு கூறப்படும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையில் இந்த சட்டப் பிரிவு உள்ளது. தற்போதைய காலத்துக்கு ஏற்றதாக இந்த சட்டம் இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டப் பிரிவு செல்லாது என அறிவிக்கக் கோரியும் தவறாக பயன்படுத்துவதை தடுக்க உரிய வழிமுறைகளை ஏற்படுத்தக் கோரியும் ஏற்கனவே நாங்கள் செய்துள்ள மனுவையும் இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என எடிட்டர்ஸ் கில்டு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் வாதிட்டார்.இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும்படி, மத்திய அரசின் சார்பில் ஆஜராகும் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம், அமர்வு கேட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவை நீக்கத் தேவையில்லை. அது தொடர்ந்து இருக்க வேண்டும். அதே நேரத்தில் தவறாக பயன்படுத்துவதை தடுக்க தேவையான வழிமுறைகளை நீதிமன்றம் நிர்ணயிக்கலாம் என வேணுகோபால் குறிப்பிட்டார்.
தேச துரோக சட்டம்
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: சுதந்திர போராட்டத்தின்போது மஹாத்மா காந்தி கோகலே போன்ற தலைவர்களை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டிஷ் அரசால் அறிமுகம் செய்யப்பட்டது இந்த சட்டம். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னும் இந்த சட்டம் தேவையா? பேச்சு சுதந்திரத்தை முடக்குவதற்கான இந்த காலனி ஆட்சி கால சட்டம் தற்போது தேவையா. பல பழைய மற்றும் தேவையில்லாத சட்டங்களை, மத்திய அரசு நீக்கியுள்ளது. ஆனால் இந்த சட்டத்தை நீக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாங்கள் எந்த மாநிலத்தையும், அரசையும் குறை கூறவில்லை.
அதே நேரத்தில் பல இடங்களில் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66ஏ பிரிவு நீக்கப்பட்ட பிறகும் அது தவறாக பயன்படுத்துவது குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்தோம்.அதுபோலத் தான் இந்த சட்டமும்; ஒரு மரத்தை துண்டாக்க, ஒருவரிடம் கொடுக்கப்பட்ட ரம்பத்தால் ஒரு காட்டையே அழிப்பது போன்று தான் இந்த தேச துரோக சட்டம் உள்ளது.யாரையாவது பிடிக்காவிட்டால் அல்லது யார் புகார் கூறினாலும் எந்த கேள்வியும் இல்லாமல் இந்த சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியும். ஏதோ ஒரு சிறிய கிராமத்தில் உள்ள சாதாரண நபரை அவரைப் பிடிக்காவிட்டால் அங்குள்ள போலீசார் இந்த சட்டத்தில் வழக்கு தொடர முடியும். எங்கள் முக்கியமான அச்சம் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து தான். இந்த சட்டத்தை ஏன் நீக்கக் கூடாது என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில் பத்திரிகையாளர்களான மணிப்பூரைச் சேர்ந்த கிஷோர் சந்திரா வாங்க்கெம்பா சத்தீஸ்கரைச் சேர்ந்த கன்னையா லால் சுக்லா ஆகியோர் இது தொடர்பாக ஏற்கனவே தொடர்ந்த வழக்குகள் வேறு அமர்வின் விசாரணையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிப்பதாக தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் வரவேற்பு
தேச விரோத சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதற்கு, காங்., முன்னாள் தலைவர் ராகுல் உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.'சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னும் இந்தச் சட்டம் தேவையா என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதை வரவேற்கிறேன்' என, சமூக வலைதளத்தில் ராகுல் பதிவிட்டு உள்ளார்.
''மத்திய அரசால் துஷ்பிரயோகம் செய்யப்படும் இந்த கொடூர சட்டம் விரைவில் துாக்கி எறியப்படும் என எதிர்பார்க்கிறேன்'' என, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்.,கின், எம்.பி.,யான மஹுவா மொய்த்ரா பதிவிட்டுள்ளார்.சுவராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ், வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரஷாந்த் பூஷண், சிவசேனாவில் இணைந்துள்ள பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சட்டப் பிரிவு என்ன?
இந்திய தண்டனைச் சட்டம், 124 ஏ பிரிவின்படி தேச துரோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுபவர் மீது குறைந்தபட்சம் மூன்றாண்டு முதல் அதிகபட்சம் ஆயுள் சிறை தண்டனை வரை விதிக்க முடியும். மேலும் அபராதமும் விதிக்க முடியும்.எது குற்றம்? எந்த ஒரு நபரும், தன் பேச்சு அல்லது எழுத்து மூலமாக குறிப்பிடும் வார்த்தைகள் அல்லது சைகைகள் அல்லது மற்றவர் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்துவது அல்லது மற்ற வழியில் செயல்படுவது... அதன் வாயிலாக இந்திய சட்டங்களால் நிறுவப் பட்டுள்ள அரசுக்கு எதிராக வெறுப்புணர்வு அல்லது அவமதிப்பை ஏற்படுத்துவது அல்லது ஏற்படுத்த முயற்சிப்பது தேசப்பற்றை குலைப்பது அல்லது குலைக்க முயற்சிப்பது தேச விரோத செயலாகும்.
100 பேர் மீது வழக்கு
மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., அரசைச் சேர்ந்த அமைச்சர்கள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித் தலைவர்கள் மீதும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.சட்டசபை துணை சபா நாயகர் ரன்பீர் காங்க்வா சென்ற காரின் மீது சிர்சாவில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக 100 விவசாயிகள் மீது தேசவிரோத சட்டத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதற்கு ஹரியானா விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE