நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரிக்கை மத்திய அமைச்சரிடம் தமிழக மந்திரி மனு | Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வில் விலக்கு அளிக்க கோரிக்கை மத்திய அமைச்சரிடம் தமிழக மந்திரி மனு

Updated : ஜூலை 16, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (14)
Share
''நீட் தேர்வுக்கு விலக்கு குறித்து ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்தார்,'' என, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் டில்லியில் நேற்று தெரிவித்தார். மேலும், இந்தாண்டு நீட் தேர்வுக்காக தமிழகத்தில் கூடுதலாக நான்கு மையங்கள் அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட்  விலக்கு ,மத்திய அமைச்சரிடம் தமிழக மந்திரி மனு

''நீட் தேர்வுக்கு விலக்கு குறித்து ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்தார்,'' என, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் டில்லியில் நேற்று தெரிவித்தார். மேலும், இந்தாண்டு நீட் தேர்வுக்காக தமிழகத்தில் கூடுதலாக நான்கு மையங்கள் அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சந்திப்புதமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று முன்தினம் டில்லி வந்திருந்தார். நேற்று அதிகாலையில் பார்லிமென்ட் அருகே உள்ள சாலைகளில் நடைபயிற்சி மேற்கொண்ட அவர், மதியம் 1:00 மணிக்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்தார்.அப்போது தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதை வலியுறுத்தியும், இதில் உள்ள நியாயங்களை பட்டியலிட்டும் மனு அளித்தார்.

இதன்பின், மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து, தமிழகத்தின் தடுப்பூசி தேவை குறித்தும், சுகாதார கட்டமைப்பு மற்றும் புதிய மருத்துவ கல்லுாரிகள் ஆகியவை குறித்தும் கோரிக்கை மனுவை அளித்தார்.இதையடுத்து அமைச்சர் சுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது:'நீட்' தேர்வு குறித்து ஆய்வு செய்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையின் பரிந்துரைகள் பற்றிய தகவல்களை மத்திய கல்வி அமைச்சரிடம் விளக்கினேன். நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது குறித்து உரிய முறையில் பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.
சுகாதார துறை அமைச்சரை சந்தித்தபோது, தமிழகத்துக்கு 12 கோடி டோஸ் தடுப்பூசிகள் தேவை என்றும், இதுவரை, 1 கோடியே 70 லட்சத்து 38 ஆயிரத்து 460 தடுப்பூசிகளே வந்துள்ளது என்றும் எடுத்துக் கூறினேன்.

தடுப்பூசி போடும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது என்றும், அதை நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளதால் கூடுதல் தடுப்பூசி தர வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். அடுத்தடுத்த மாதங்களில் இந்த கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படுமென அமைச்சர் உறுதியளித்தார்.


நடவடிக்கைமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து வலியுறுத்தியபோது, இது குறித்த பேச்சு நடந்து வருவதால், மிக விரைவில் அங்கு கட்டுமானபணிகள் துவங்கப்படுமென்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லுாரிகளிலும், தலா 150 மாணவர்களை சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க, விரைவில் அதிகாரிகளை அனுப்பி வைக்கும்படி கேட்டதற்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது.கோவையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரி கட்டித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். மதுரைக்கும், கோவைக்கும் இடையிலான துாரம் குறித்து கேட்டார். 300 கி.மீ., என கூறியபோது அதுகுறித்தும் பரிசீலிப்பதாக கூறினார்.மருத்துவ படிப்புகளில் அகில இந்திய அளவிலான பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டதற்கு, அது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்தார்.

இரண்டாம் அலை பாதிப்பு மற்றும் மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக, 1,500 கோடி ரூபாய் ஒதுக்கும்படி கேட்டிருந்தோம். அதற்கு 800 கோடி ரூபாய் தருவதாகவும், இதை செலவழித்தபின், திட்ட மதிப்பீடுகளை ஆராய்ந்து மீதமுள்ள தொகையை தருவதாகவும் அமைச்சர் உறுதிஅளித்தார்.நீட் விலக்கில் உள்ள உண்மைகளை கல்வி அமைச்சர் உணர்ந்துள்ளார். அவரது சொந்த மாநிலத்தில் உள்ள பிரச்னைகளையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.நீட் தேர்வே வேண்டாம் என்பது தான் தமிழகத்தின் நிலை' என எங்கள் தரப்பில் கூறினோம். அது குறித்து, உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.


கூடுதல் மையங்கள் அறிவிப்புதமிழக சுகாதார அமைச்சர் சுப்பிரமணியத்துடனான சந்திப்பு முடிந்த அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:தமிழகத்தில் கூடுதலாக நான்கு நீட் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய ஊர்களில் இந்த மையங்கள் அமைக்கப்படும் என, தமிழக சுகாதார அமைச்சர் சுப்பிரமணியத்திடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நீட் விவகாரத்தை பொறுத்தவரை, சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவுகள் மற்றும் அதன் பின்னணி குறித்தும், விரிவாக அவரிடம் விளக்கப்பட்டும் விட்டது.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தமிழக அமைச்சரின் பேட்டியும், அதற்கு சுடச்சுட மத்திய அமைச்சர் அளித்த அறிவிப்பையும் வைத்துப் பார்க்கையில், சந்திப்பின்போது உண்மையில் என்ன நடந்தது என்பது புரியவில்லை.நீட் தேர்வு விலக்கு குறித்து பரிசீலிக்கப்படவுள்ளதாக, தமிழக அமைச்சர் கூறுகிறார். ஆனால், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானோ, உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுகளையும், அதன் பின்னணியையும் விளக்கிவிட்டதாக கூறுகிறார்.நீட் தேர்வு உண்டா, இல்லையா என, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்கனவே குழப்பம் நீடிக்கும்போது, தற்போது மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் தங்கள் பங்கிற்கு இன்னொரு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனரா என தெரியவில்லை. நீட் தேர்வில் விலக்கு வாங்குவதற்காக டில்லிக்கு வந்திருந்த தமிழக அமைச்சர் சுப்பிரமணியனுக்கு, கூடுதலாக நான்கு நீட் தேர்வு மையங்களை கொடுத்து, வழியனுப்பி வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. - நமது டில்லி நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X