சென்னை:மத்திய தொல்லியல் துறையில் உள்ள கல்வெட்டு ஆய்வாளர்கள், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய தொல்லியல் துறையின் கீழ், பிராந்திய அலுவலகங்கள் உள்ளன. தென் மாநிலங்களுக்கு, கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பிராந்திய அலுவலகம், தலைமையிடமாக உள்ளது.
சென்னை உள்ளிட்ட இடங்களில், இதற்கு வட்டார அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், கல்வெட்டு ஆய்வுப் பிரிவு மிக முக்கியமானதாக உள்ளது. இந்த பிரிவு தான், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகத்தை, கல்வெட்டுகளின் வாயிலாக படித்து, வரலாறாக பதிவு செய்கிறது.
இந்நிலையில், மத்திய தொல்லியல் துறை, தோட்ட வேலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஆள் எடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால், கல்வெட்டு பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவோ, புதிய பணியிடங்களை உருவாக்கவோ, எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதை கண்டிக்கும் வகையில், சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள, மத்திய தொல்லியல் துறையின், வட்டார அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் உள்ள கல்வெட்டு துறையினர், அமைதியான முறையில், கையில் பதாகைகளை ஏந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.