உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க., மெதுவாக தன் வேலையை காட்ட துவங்கியுள்ளதோ என்ற எண்ணம் மத்திய அரசுக்கு வந்துள்ளது. தி.மு.க.,வை உருவாக்கிய அண்ணாதுரையின், 'அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு' என்ற கோஷத்தை, ஒரு புதிய வடிவத்தில் கையில் எடுக்கிறதோ என்ற சந்தேகம் முளைத்துள்ளது.
ஆட்சி பொறுப்பேற்ற உடன் தமிழகத்தின் முன்னேற்றத்தை கவனிக்காமல், மத்திய அரசை சீண்டும் வேலையில் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது. இதுநாள் வரை வழக்கத்தில் இருந்த, 'மத்திய அரசு' எனும் வார்த்தைக்கு பதிலாக, 'ஒன்றிய அரசு' என அழைப்பராம். தமிழகம் இருக்கும் இன்றைய நிலையில், இது அவசியமான பிரச்னையா? 'ஒன்றிய அரசு' எனும் வார்த்தை பிரயோகம்; கவர்னர் உரையில், 'ஜெய்ஹிந்த்' விடுபட்டது போன்ற விவகாரங்கள், பிரிவினைக்கான துவக்கமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை காலத்திலேயே, 'திராவிட நாடு' கோரிக்கை காணாமல் போய்விட்டது. அதன்பின் வந்த கருணாநிதி, 'மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி' என்றார். பா.ஜ., பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததும், மத்தியில் கூட்டாட்சி எனும் முழக்கம் வலுவிழந்தது. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், மத்திய அரசுடன் மறைமுகமாக மோதல் போக்கை கடைப்பிடிக்க துவங்கி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த முருகன், மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றார். அவரது சுயவிபர குறிப்பில், 'கொங்கு நாடு' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தான் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது தமிழகத்தை இரண்டாக பிரித்து, 'கொங்கு நாடு' உருவாக்கவும், அதை யூனியன் பிரதேசமாக மாற்றவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது என, அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தையால் சீண்டிய தி.மு.க.,விற்கு பதிலடியாக, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு தன் ஆட்டத்தை துவக்கி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE