பொள்ளாச்சி: கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் சூழலில், கூட்டம் சேர்த்து விழாக்கள் நடத்துவதால், மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், விழாக்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா தொற்று வேகமாக பரவியது. முதல் அலையை விட, இரண்டாம் அலையில், பாதிப்பு அதிகரித்ததுடன், உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழப்பும் அதிகரித்தது.மருத்துவமனைகளில் இடம் பிடிக்க, சிபாரிசு பிடிக்குமளவுக்கு, சொல்ல முடியாத அளவுக்கு மக்கள் வேதனையில் ஆழ்ந்தனர். இந்த சூழலில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகளவு வெளியில் வரத்துவங்கியதால், இயல்பு வாழ்க்கை திரும்பியது.
பொள்ளாச்சி பகுதியிலும் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. வாகன இயக்கம், பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பொதுமக்களிடம், சமூக விலகல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசுத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், அரசு விழாக்கள் நடத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பொள்ளாச்சி பகுதியில், கொரோனா பரவல் கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில், அரசு விழாக்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்கள் என நடத்தப்படுவதால், மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சமீபத்தில், சமத்துாரில் நடந்த விழாவில் அமைச்சர் பங்கேற்பதால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகளவு வந்ததுடன், பயனாளிகளும் வந்தனர். இதனால், அங்கு சமூக இடைவெளி பின்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.
இதுபோன்று, விழாக்கள் நடத்துவதால், கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொரோனா மூன்றாவது அலை வரும் என, மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, அரசும், அமைச்சர்களும் கவனம் செலுத்தி சில மாதங்களுக்கு விழாக்கள் நடத்துவது; பயனாளிகளை கூட்டமாக சேர்த்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்.பொதுமக்களுக்கு அறிவுரை கூறுவதோடு, அரசும் அதை கடைபிடித்தால் தொற்று பரவலை தவிர்க்க முடியும். ஊருக்கு உபதேசம் செய்யும் அரசும், அமைச்சர்களும், அந்த அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE