சண்டிகர்: தன்னையும் தன் மகனையும் முஸ்லிம் மதத்துக்கு மாறும்படி மனைவி மாமனார் மாமியார் ஆகியோர் கட்டாயப்படுத்துவதாக கூறி சண்டிகர் நீதிமன்றத்தில் சீக்கிய கணவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
யூனியன் பிரதேசமான சண்டிகர் நீதிமன்றத்தில் சீக்கியர் ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:சண்டிகரில் 2008ல் ஒரு நகைக் கடையில் மேலாளராக வேலை பார்த்தேன். அப்போது அந்த கடையில் பணிபுரிந்த பெண்ணுடன் எனக்கு காதல் ஏற்பட்டது. அவர் முஸ்லிம் என்பதால் திருமணத்துக்கு மறுத்தேன்.ஆனால் அந்த பெண், உங்களின் மத நம்பிக்கையில் ஒரு போதும் குறுக்கிடமாட்டேன் எனஉறுதியளித்தார்.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.ஆனால் திருமணமான நாளில் இருந்தே மனைவியும் அவரது பெற்றோரும் என்னை முஸ்லிமாக மதம் மாற கட்டாயப்படுத்தி வருகின்றனர். எனக்கு 2012ல் மகன் பிறந்தான். அவனை சீக்கியராக வளர்க்க விரும்புகிறேன். ஆனால் அவனையும் மதம் மாற்ற கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் எனக்கும் என் மனைவிக்கும் தினமும் தகராறு ஏற்படுகிறது. மதம் மாற மறுப்பதால் என்னை என் மாமனார் மாமியார் மிகவும் அவமானப்படுத்துகின்றனர்.என்னை கட்டாயமாக மதம் மாற்ற முயற்சிக்கும் மனைவி மாமனார் மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் அவர் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ரஸ்வீன் கவுர் இது தொடர்பாக மனுதாரரின் மனைவி மாமனார் மாமியாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.