திருப்பூர்: ''எங்கள் வாழ்வின் உணர்வாகவும், உயிர்மூச்சாகவும், 'தினமலர்' நாளிதழ் விளங்குகிறது'' என்று, திருப்பூரைச் சேர்ந்த 'தினமலர்' வாசகர்கள் பெருமிதப்படுகின்றனர்.
சேவைக்கு தரும் உயரிய மதிப்பு

தொற்று பாதித்தோரை, ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, இன்முகத்துடன், சேவையாற்றினார், அவிநாசி, தேவராயம்பாளையத்தை சேர்ந்த, ஆட்டோ டிரைவர் சிராஜ்; 'தினமலர்', இவரது சேவையை ஊரறிய செய்தது.இவரது பொருளாதார சிக்கலை, எப்படியோ அறிந்துகொண்ட, அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கத்தினர், அவர், ஆட்டோவுக்காக, வாங்கியிருந்த கடன் தொகையான 48 ஆயிரம் ரூபாயை உவகையுடன் வழங்கி, கடனை அடைக்க உதவினர்.

''தொற்று பாதித்தோரை, இலவசமாக ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, திரும்ப அழைத்து வந்தேன். தற்போது, தொற்று பாதித்தோர் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், எனது சேவை, அவசியமானதாக இல்லை; இருப்பினும், மருத்துவமனை மற்றும் பிற தேவைகளுக்கு மக்கள் என்னை அழைக்கின்றனர். சேவையாளர்களைப் போற்றும் 'தினமலர்' இதழ், என் வாழ்வின் இணைபிரியா அங்கமாகியிருக்கிறது'' என்கிறார், சிராஜ்.
மக்கள் பிரச்னைகள்தீர்க்கும் 'அருமருந்து'
காதர்பேட்டையில், ஆடை வர்த்தகராக செயல்படும் ரங்கநாதன், 15 ஆண்டு காலமாக, 'தினமலர்' வாசகர். அவர் சொல்கிறார்:ஒரு நிகழ்வை மாறுபட்ட கோணத்தில் ஆராய்ந்து செய்தியாக விவரிப்பது; 'ஸ்டைலான' தலைப்பிடுவதெல்லாம், தினமலருக்கே உரித்தான தனித்துவம்.பெரிய தொழில் அமைப்புகள், தொழிலதிபர்கள் மட்டுமின்றி, குறு, சிறு வர்த்தகர்கள், சிறிய தொழில் அமைப்பினருக்கும், 'தினமலர்' எப்போதுமே முக்கியத்துவம் அளிக்கிறது.

பனியன் வர்த்தகம், எனது உயிர்மூச்சு. கொரோனாவால், என்னைப்போன்று பல ஆயிரம் சிறு, குறு வர்த்தகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்; ஊரடங்குக்கு பின், காதர்பேட்டை கடைகளை திறந்தபோது, எங்கள் மனப்போராட்டங்களை, வார்த்தைகளால், 'தினமலர்' மட்டுமே வெளிப்படுத்தியது. ஆடை உற்பத்தி துறை பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டபோது, அதிலிருந்து மீள்வதற்கு கைகொடுத்து இருக்கிறது. திருப்பூரில், மக்கள் மற்றும் தொழில் துறையினரின் பிரச்னைகளுக்கு, 'தினமலர்' தான் அருமருந்து.
'அப்டேட்' ஆகும் ஆசிரியர்கள்
''தினமலரின், 'பட்டம்' சிறுவர்களின் அறிவாற்றலை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு தகவல்களை தாங்கி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக அதில் உள்ளவற்றை படித்து, மாணவர்களுக்கு கற்பித்து வருகிறேன்.

பல்வேறு அறிவு சார்ந்த பகுதிகள் இடம் பெற்றுள்ளன. தினமும் பள்ளியில், 'பட்டம்' இதழுக்காகவே நேரம் ஒதுக்கியுள்ளோம். இதன்மூலம் மாணவர்களின் பொது அறிவு திறன் அதிகரிக்கிறது ஆசிரியர்களும், தங்களை 'அப்டேட்' செய்துகொள்கின்றனர்'' என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார், திருப்பூர் பூலுவப்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ஜாஸ்மின் மாலா.
'' கல்வித்துறை சார்ந்த செய்திகளை முன்கூட்டியே வழங்குதல், பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் செய்தி வெளியிடுதல், அரசு பள்ளி சார்ந்த பெருமைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, ஊக்கு விப்பது என, என்றும், 'தினமலர்' கல்வி வளர்ச்சியில் உறுதுணையோடு செயலாற்றுகிறது. எங்கள் பணியிலும், வாழ்விலும் ஓர் அங்கமாகவே இருக்கிறது,
தினமலர்'' என்று சொல்கிறார், அவர்.
இயற்கை வளம் பாதுகாக்க அக்கறை

''திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மேம்படுத்தும் எண்ணம் துவங்கிய போதே, இதை அரசு துறைகளுக்கும் மக்கள் மத்தியிலும் கொண்டு சேர்க்கும் வகையிலும், இந்த சேவையில் எங்களுட ன் பங்கேற்று வழி நடத்தவும் 'தினமலர்' முக்கியமான தேர்வாக அமைந்தது'' என்று, துவங்குகிறார், திருப்பூர் மேற்கு ரோட்டரி நொய்யல் நீர் மேலாண்மை அறக்கட்டளை செயலாளர் ரகுபதி.

''நாட்டுப் பற்று; மக்கள் பணி என்ற தாரக மந்திரத்துடன் மக்களுக்கான பத்திரிகையாக உள்ள 'தின மலர்' இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வகையில் ஆற்றி வரும் சேவைகளும், வெளியிட்டு வரும் கட்டுரைகளும் அதன் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பல்வேறு அமைப்புகளுடன் கைக்கோர்த்து பணியாற்றும் அதன் தனித்தன்மை பாராட்டுக்குரியது.எங்கள் அறக்கட்டளையின் நீர் நிலைகள் மேம்படுத்தும் திட்டப் பணிகளுக்கு, எங்கள் உடன் பயணிக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது'' என்கிறார் ரகுபதி.
பாத்திர வியாபாரிக்குள் ஒளிந்திருந்த படைப்பாளி
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பம். மிதிவண்டியில் எவர் சில்வர் பாத்திரங்களை கட்டிக்கொண்டு, வீதி தோறும் விற்பதுதான் தொழில். உயர்கல்வி படிக்காவிட்டாலும் உலக வாழ்க்கை கல்வியை கற்றறிந்தவர், திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த ஜோதி.

''அன்றாட வாழ்க்கை பயணம், தினசரி நிகழ்வுகள், சூழ்நிலை பாடங்களை கவிதைகளாக, கதைகளாக கிறுக்குவது வழக்கம். கடந்த, 2018 செப்டம்பரில், 'ஒரு சாமானியனின் கவிதை தொகுப்பு' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டேன். அடுத்தநாள் படத்துடன், அலைபேசி எண்ணுடன் கட்டுரை வெளியானது. பாத்திரங்களுக்கு இடையில் ஒளிந்திருக்கும் என் புத்தகங்களையும் விரும்பி கேட்டு, வாசகர்கள் வாங்கி படிக்கத் துவங்கினர். பள்ளி, கல்லுாரி, பொது நிகழ்ச்சிகளில் இருந்து தன்னம்பிக்கை உரையாற்ற அழைப்புகள் ஒருபக்கம் குவிகிறது.தமிழக அரசின், 'அகவை முதிர்ந்த தமிழறிஞர்'கள் பட்டியலில் என் பெயரும் இடம்பெற்றது. உதவித்திட்டத்தின்கீழ், ஜன., மாதம் முதல் மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறேன். இவ்வாறு, சொல்லும் போதே ஜோதியிடம் ஆனந்தக் கண்ணீர்.
சிறுவனுக்குள்துாரிகை ஆர்வம்

''ஓவியம் வரையறதுனா ரொம்பப் பிடிக்கும்; ஊடரங்கு காலத்தில், 'தினமலர்' நடத்திய 'நீங்களும் ஓவியர்தான்' ஓவியப்போட்டியில் தொடர்ந்து நாலாவது வாரமாக பங்கேற்றேன்; பரிசு பெற்றோர் பட்டியலில் இடம்பெற்றேன்; இதையறிந்ததும் ஆச்சர்யம் தாளவில்லை.எங்க வீட்டுல எப்பவுமே 'தினமலர்' தான் வாங்குறோம், பட்டம், சிறுவர் மலர், விளையாட்டு செய்தினு தினமலர்ல எல்லாமே எனக்கு பிடிக்கும்; குவிஸ், குறுக்கெழுத்து போட்டிகள்லயும் பங்கேற்கிறேன்'' என்கிறான், திருப்பூர், எஸ்.ஆர்.நகரை சேர்ந்த தணீஷ், 9.
வர்த்தக பெண்மணியாக மாற உதவியது
திருப்பூர் 'நிப்ட் டீ' கல்லுாரியில், அப்பேரல் பேஷன் டிசைன் 2ம் ஆண்டு படிப்பவர் ஸ்வேதா, 19. தேங்காய் சிரட்டையில் கலை பொருட்கள் தயாரித்து அசத்துவதை, 2020 செப்., 6ல் 'தினமலர்' வெளிப்படுத்தியது.

'எங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக, 'தினமலர்' தான் வாங்குகிறோம். பொழுதுபோக்காகவே, கைவினை பொருட்களை உருவாக்கி வீட்டில் வைத்துக்கொண்டிருந்தேன். தினமலரில் எனது படைப்புகள் குறித்து செய்தி வெளியானதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்.ஏராளமானோர் என்னை தொடர்புகொண்டு, பரிசு பொருளாக வழங்குவதற்காக, சிரட்டையில் கலை பொருட்கள் தயாரிக்குமாறு கேட்கின்றனர்.

தந்தை, சிரட்டை வெட்டுவதற்கான மெஷினையே வாங்கிக்கொடுத்துவிட்டார். கேட்பவர்களுக்கு, சிரட்டையில் கலை பொருட்கள் வடிவமைத்து கொடுத்து வருகிறேன். இதன் மூலம், வருவாய் ஈட்டமுடிகிறது; எதிர்காலம் குறித்த தன்னம்பிக்கையும் பிறந்துள்ளது.இப்போதே ஒரு வர்த்தகப் பெண்மணி ஆகிவிட்டதாக பெருமைப்பட்டுக்கொள்கிறேன்; இதற்கு துாண்டுகோலாக இருந்த தினமலரை என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்' என்று கூறுகிறார் ஸ்வேதா.
என்னைப்போன்ற எளியவர்களின்குரல்களையும் ஒலிக்கிறது
பல்லடம், இச்சிப்பட்டி, தேவராயம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னம்மாள், 74; கணவர் இறந்த பின், குடிசையில் தனியாக வசிக்கிறார்; இவரது ரேஷன் கார்டு திடீரென ரத்து செய்யப்பட்டது; அதிர்ந்தார்; முதியோர் உதவித்தொகையும் கிடைக்கவில்லை.கடந்த மே 29 'தினமலர்' நாளிதழ் வெளியானதுமே, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர்; சின்னம்மாளுக்கு மறுநாளே ரேஷன் கார்டு வழங்கப்பட்டு, உதவித்தொகை கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

''தினமலர்' நாளிதழை என் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது; என்னைப் போன்ற எளியவர்களின் குரலையும் பதிவு செய்து, தீர்வும் காண்கிறது'' என்று, இதயப்பூர்வமாக சொல்கிறார், சின்னம்மாள்.