புதுடில்லி: கடந்த ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 62 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மது குடித்ததால் புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாதிப்பு
உலகளவில் புற்றுநோய் குறித்த ஆய்வறிக்கையை, 'லான்செட் ஆன்காலஜி' இதழ் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டில் உலகளவில் புதிய புற்றுநோயாளிகளில், 4 சதவீதம் பேருக்கு, மதுப் பழக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மது குடிப்பதால் வாய், உணவுக் குழல், இரைப்பை, கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றன. மதுவில் கலக்கும் ரசாயனங்கள் மரபணுவை சேதப்படுத்தி, ஹார்மோன் உற்பத்தியை தடுக்கின்றன.
இதனால் புற்றுநோய் உண்டாவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மது குடிப்பதால் புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாவோர் எண்ணிக்கையில் மங்கோலியா முதலிடத்தில் உள்ளது. இங்கு புதிய புற்றுநோயாளிகளில் 10 சதவீதம் பேருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. குவைத்தில் மதுவால் புற்றுநோய் தாக்கியோர் ஒருவரும் இல்லை.

விழிப்புணர்வு
இந்தியாவில் புதிய புற்றுநோயாளிகளில் 5 சதவீதம், அதாவது 62 ஆயிரத்து 100 பேர், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள். இந்த எண்ணிக்கை சீனாவில் 2.82 லட்சமாகவும், ஜெர்மனியில் 21 ஆயிரத்து 500 ஆகவும் உள்ளது. அமெரிக்காவில் 52 ஆயிரத்து 700 பேர், மதுவால் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர். கொரோனா பிரச்னையும் மக்களிடம் மதுப் பழக்கம் அதிகரிக்க துணை புரிந்துள்ளது. உலக நாடுகள், உடனடியாக மதுவுக்கும், புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் வருங்காலத்தில் பாதிப்பு குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.