பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டதால் கலவரம் வெடித்துள்ளது. இதில், இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா ஊழல் வழக்கில் கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு போட்டியாக ஆளும் கட்சியினரும் வன்முறையில் இறங்கியுள்ளனர். ஜேக்கப் ஜூமா அதிபராக பதவி வகித்தபோது, 'இந்தியர்களுக்கு நாட்டை தாரை வார்த்து விட்டனர்' என, அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கலவரத்தில் இந்தியர்கள் நடத்தும் கடைகள், வணிக வளாகங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்திய வம்சாவளியினருக்கு இதுவரை ரூ.512 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர 25 ஆயிரம் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 'தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியினர் 4 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சருடன் பேச்சு நடத்தினேன். சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சஞ்சய் பட்டாச்சார்யா, டில்லியில் உள்ள தென்னாப்பிரிக்க தூதர் ஜோயலை நேற்று சந்தித்து, கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE