மேகதாது அணை கட்ட வாக்குறுதி தரவில்லை திட்டவட்டம்!| Dinamalar

மேகதாது அணை கட்ட வாக்குறுதி தரவில்லை திட்டவட்டம்!

Updated : ஜூலை 17, 2021 | Added : ஜூலை 16, 2021 | கருத்துகள் (15) | |
'தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல், மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு அனுமதி தர மாட்டோம்' என, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம், மத்திய அரசு திட்டவட்டமாகவும், வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு
மேகதாது அணை ,வாக்குறுதி, திட்டவட்டம்!

'தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல், மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு அனுமதி தர மாட்டோம்' என, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம், மத்திய அரசு திட்டவட்டமாகவும், வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளது.காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணை கட்டுவதற்கு அனுமதி தரக் கூடாது என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்தும் நோக்கிலும், தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் 13 பேர், நேற்று முன்தினம் இரவு டில்லி வந்திருந்தனர்.
துணை போகக் கூடாதுநேற்று காலையில் தமிழ்நாடு இல்லத்தில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இவர்கள் ஆலோசனை நடத்தினர். இதன்பின், ஜல்சக்தி அமைச்சகம் அமைந்துள்ள ஷ்ரம் ஷக்தி பவனுக்கு அனைவரும் விரைந்தனர்.அங்கு, மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை அனைவரும் சந்தித்தினர். 45 நிமிடங்களுக்கும் மேலாக நடந்த இந்த சந்திப்புக்கு பின், அனைத்துக் கட்சி குழுவினர் தமிழ்நாடு இல்லம் திரும்பினர்.
அங்கு, நிருபர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:மேகதாது அணை கட்டும் விஷயத்தில் கர்நாடகாவுக்கு மத்திய அரசு துணை போகக் கூடாது என்ற எங்கள் நோக்கத்தை, மத்திய அமைச்சரிடம் தெளிவாக கூறி விட்டோம்.


பூர்த்தி செய்யவில்லைவிரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு அம்மாநிலத்திற்கு அனுமதி வழங்கியது ஏன் என்ற கேள்வியையும், அவரிடம் எழுப்பினோம். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் கூறியதாவது:எந்த வகையிலும் கர்நாடகா அணையை கட்டிவிட முடியாது. அதற்கு காரணமும் உள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு அவர்களுக்கு என்னென்ன நிபந்தனைகளை விதித்து இருந்தோமோ, அவற்றில் ஒன்றைக் கூட கர்நாடகா பூர்த்தி செய்யவில்லை.திட்ட அறிக்கை தயாரிக்க விரும்பினால் காவிரியின் கடைமடை மாநிலங்களான தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகியவற்றின் முழு ஒத்துழைப்பையும் பெற வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு ஒப்புதலையும் பெற்று வர வேண்டும்.மத்திய நீர்வள கமிஷனுடன் பேசி, அவர்களது சம்மதத்தையும் பெற்று வந்தால் மட்டுமே அனுமதி வழங்குவோம் என கூறிவிட்டோம்.ஆனால், அவர்களே ஏதோ ஒரு அறிக்கையை தயாரித்து அனுப்பி வைத்துள்ளனர். அதை மத்திய அரசு ஏற்காது. கடைமடை மாநிலங்கள், காவிரி மேலாண்மை ஆணையம், நீர்வளக் கமிஷன் ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே அறிக்கைக்கு அனுமதி தரப்படும். கர்நாடகா தந்துள்ள அறிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. எனவே மேகதாது அணை கட்டப்படும் என்ற கேள்வியே எழவில்லை.இவ்வாறு அவர் தௌிவாகக் கூறி விட்டார்.


இதனால் எங்களின் டில்லி பயணம் முழுமையாக வெற்றி அடைந்துள்ளது. இருப்பினும் அவரிடம், 'மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி தருவோம் என நீங்கள் கூறியதாக செய்திகள் வந்துள்ளதே...' என கேட்டோம். அதற்கு அவர், 'அதுபோன்ற வாக்குறுதியை எப்போதும் தரவில்லை. திட்டவட்டமாக கூறுகிறேன். நாங்கள் விதித்த நிபந்தனைகளை கர்நாடகா பூர்த்தி செய்யவில்லை.
'எனவே அறிக்கை என்ற பேச்சுக்கே இடமும் இல்லை. மேகதாது அணை கட்டப்படும் என்ற நிலையே எழவில்லை' என பதிலளித்தார்.

மத்திய அமைச்சர் கூறுவதுபோல, அணை கட்ட வேண்டுமென கர்நாடகா அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டால், அதற்கு தமிழகம் எந்தவித ஒப்புதலையும் வழங்காது. எனவே அணையை கட்டவும் அவர்களால் முடியாது.காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு நேரத் தலைவரை நியமிக்கும்படி கேட்டோம். அதற்கு மத்திய அமைச்சர், 'ஏற்கனவே இரண்டு முறை விளம்பரம் தந்தோம். சரியான ஆட்கள் வரவில்லை.'கர்நாடகா அல்லது தமிழகத்திலிருந்து ஆட்களை போடுவது சரியாக இருக்காது. மூன்றாவது மாநிலத்திலிருந்துதான் அந்த தலைவர் நியமிக்கப்பட வேண்டும். விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி தந்தார்.
நான்கு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களையும், மேகதாது குறித்த ஆலோசனைக்கு மத்திய அரசு அழைத்தால் செல்வீர்களா என்ற கேட்டால், நிச்சயம் போக மாட்டோம் என்பதே எங்களின் பதில்.இவ்வாறு துரைமுருகன் கூறினார்.


தலைவர்கள் கருத்து*ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கூறுகையில், ''மேகதாது விஷயத்தில் மத்திய அரசும், கர்நாடக மாநில அரசும் சேர்ந்து சதி செய்கின்றன; அதை ஏற்க முடியாதென மத்திய அமைச்சரிடம் கூறினோம். 'அது தவறான கருத்து; அப்படி எதுவும் நடக்கவில்லை' என, அவர் எங்களிடம் உறுதி அளித்தார்,'' என்றார்.


*விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்,
''விரிவான திட்ட அறிக்கை, நிபந்தனைகளின் அடிப்படையில் தரப்பட்டதே தவிர, அதையே அணை கட்டுவதற்கான அனுமதி என கருத வேண்டாம் என மத்திய அமைச்சர் தெரிவித்தார். இந்த சந்திப்பு, மத்திய அரசின் நிலையை தெளிவுபடுத்தியுள்ளது,'' என்றார்.


*மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் கூறுகையில்
, ''மத்திய அரசு தங்களுக்கு சாதகமாக இருக்குமென்ற நம்பிக்கையாலும், இதை வைத்து அரசியல் ஆதாயம் தேடலாம் என கர்நாடகா நம்புவதாலும், மேகதாது விஷயத்தில் பாரபட்சம் காட்ட வேண்டாமென்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம்,'' என்றார்.


ஸ்டாலின் நாளை டில்லி பயணம்சென்னை:முதல்வர் ஸ்டாலின், ஜனாதிபதியை சந்திப்பதற்காக நாளை டில்லி செல்கிறார்.தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின், கடந்த மாதம் 17ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்; கோரிக்கை மனு அளித்தார். அதன்பின் இரண்டாவது முறையாக, நாளை மாலை, 5:00 மணிக்கு டில்லி செல்ல உள்ளார்.நாளை மறுதினம் டில்லியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.- நமது டில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X