புதுடில்லி : 'உலகளவில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால், இந்தியாவுக்கு அடுத்த, 100 நாட்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும் 'நிடி ஆயோக்' அமைப்பின் சுகாதார பிரிவு உறுப்பினர், டாக்டர் வி.கே.பால் கூறியதாவது:கொரோனா மூன்றாவது அலையை அலட்சியமாக கருத வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பல பிராந்தியங்களில் மூன்றாவது அலை மோசமான நிலையில் இருந்து படு மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.
மக்கள் முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை சரிவர கடைபிடித்தால், மூன்றாவது அலை இந்தியாவை தாக்குவதை தவிர்க்கலாம்.
ஆனால் நாட்டின் பல பகுதிகளில் கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்கின்றன. மக்களின் பொறுப்பற்ற செயல்களால் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. 73 மாவட்டங்களில், தினமும் கொரோனா பாதிப்பு, 100 பேருக்கும் குறைவாக உள்ளது. ஆனால், 47 மாவட்டங்களில் பாதிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
அதனால், அம்மாவட்டங்களில் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மூன்றாவது அலையை தவிர்க்க, அடுத்த 100 நாட்கள் மிக கவனமுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.