உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
எஸ்.ராமகிருஷ்ணன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
இந்திய விடுதலை போரில், திராவிட கட்சிகள் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. மாறாக, சுதந்திரம் பெற்ற பின், திராவிட நாடு கோரி தேச பிரிவினையை துாண்டி நாட்டை துண்டாட முயன்றனர்.அவர்களிடம் நாட்டுப்பற்று என்பது எள்ளளவும் கிடையாது. அவர்களின் மனதில் பிரிவினை சித்தாந்தம் உள்ளது. அதன் வெளிப்பாடு தான், 'ஒன்றிய அரசு, ஜெய்ஹிந்த் எதிர்ப்பு' போன்றவை.
தமிழகம் 1.30 லட்சம் ச.கி.மீ., பரப்புடையது; இந்தியாவின் 10வது பெரிய மாநிலம். நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 3.96 சதவீதம் தன்வசம் வைத்துள்ளது. இதன் மொத்த மக்கள் தொகை, 7 கோடியே 64 லட்சத்து 81 ஆயிரத்து 54 என்கிறது, ஆதார் புள்ளி விபரம்.இவ்வளவு பெரிய மாநிலத்தை, ஒரே அரசு நிர்வகிப்பது என்பது கடினமான செயல். எனவே கொங்கு நாடு உருவாவது, காலத்தின் கட்டாயம்.ஒரு காலத்தில் கோவை என்பது நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. இதே போல சேலம் என்பது தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் சேர்ந்து ஒரே மாவட்டமாக இருந்தது.
இதை போலவே தமிழகத்தில் பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன. இவை எல்லாம் நிர்வாக மேம்பாட்டின் அடிப்படையில் செய்யப்பட்டவை. இது, திராவிட நாடு கோரிக்கையை போல நாட்டை துண்டாடுவது அல்ல.கொங்கு நாடு உதயமானால் மக்களின் பொருளாதார நிலை மேம்படும்; தொழிற்சாலைகள் எண்ணிக்கை உயரும்; வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.ஆக்கப்பூர்வமான பணிகள் முடிக்க ஏற்படும் கால விரயமும், பொருட்செலவும் பெருமளவு குறையும்; ஊழல் குறைவதற்கும் வாய்ப்புண்டு.

சென்னையில் நெருக்கடி குறையும்.எப்படி பார்த்தாலும் கொங்கு நாடு உருவாக்குவது மிக இன்றியமையாதது. இதற்கு சட்டத்தில் வழிவகை உள்ளதால், மாநில அரசின் ஒப்புதல் கூட தேவையில்லை. திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்த திராவிட கட்சிகள், தற்போது நிர்வாகம் சீரடைய மாநிலத்தை இரண்டாக பிரிப்பதில் எதிர்ப்பை வெளிப்படுத்த எவ்வித முகாந்திரமும் இல்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE