தமிழக பா.ஜ.,வின் புது கோஷம் சனாதனம்!:அதிரடி குண்டு போடுகிறார் சி.டி.ரவி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக பா.ஜ.,வின் புது கோஷம் 'சனாதனம்!':அதிரடி குண்டு போடுகிறார் சி.டி.ரவி

Updated : ஜூலை 17, 2021 | Added : ஜூலை 17, 2021 | கருத்துகள் (137)
Share
'சனாதன தர்மத்தையும், தமிழகத்தையும் பிரிக்க முடியாது; இனி எங்கள் கோஷம், அதை வலியுறுத்தியே இருக்கும்,'' என, அதிரடியாக அறிவித்துள்ளார், பா.ஜ., தமிழக பொறுப்பாளரும், கட்சியின் தேசிய செயலருமான சி.டி.ரவி.நமது நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:* தமிழக பா.ஜ., புதிய தலைவர் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ள பணி என்ன?பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான திட்டங்களை தமிழக
 தமிழக பா.ஜ.,வின் புது கோஷம் 'சனாதனம்!'

'சனாதன தர்மத்தையும், தமிழகத்தையும் பிரிக்க முடியாது; இனி எங்கள் கோஷம், அதை வலியுறுத்தியே இருக்கும்,'' என, அதிரடியாக அறிவித்துள்ளார், பா.ஜ., தமிழக பொறுப்பாளரும், கட்சியின் தேசிய செயலருமான சி.டி.ரவி.
நமது நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:


* தமிழக பா.ஜ., புதிய தலைவர் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ள பணி என்ன?பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான திட்டங்களை தமிழக மக்களிடம், அண்ணாமலை எடுத்துச் செல்வார். 2024 லோக்சபா தேர்தலை நோக்கி மட்டுமல்ல, தமிழக மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும்படி அவரும், அவரது குழுவினரும் செயல்படுவர்.


*முருகனை மத்திய இணை அமைச்சராக்கிஉள்ளனரே?பிரதமர் மோடி, அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த முருகனுக்கு, மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்து பெருமைப்படுத்தி உள்ளார். அத்துடன், தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கிஉள்ளார். தமிழகத்தை மோடி எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கு இவை உதாரணம்.


*அ.தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள், சட்டசபை தேர்தல் தோல்விக்கு, பா.ஜ.,தான் காரணம் என பேசுகின்றனரே?சட்டசபை தேர்தலில், தமிழக பா.ஜ.,வினரும், அ.தி.மு.க.,வினரும் ஒருங்கிணைந்து முழு மனதோடு தான் பணியாற்றினர். அ.தி.மு.க., தோல்வி அடைந்ததற்கு வேறு பல காரணங்கள் உண்டு.


* உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,வோடு கூட்டணி உண்டா அல்லது தனித்து நிற்பீர்களா?எது எங்கள் வலிமை; எது எங்கள் பலவீனம் என, எங்களுக்குத் தெரியும். பலவீனங்களை களைய முயற்சிக்கிறோம். உள்ளாட்சி தேர்தல் வரும்போது, அது பற்றி முடிவெடுக்கப்படும்.


*சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் 20 தொகுதிகளை பெற்று, நான்கு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளீர்களே?நாங்கள் தேர்தலுக்கு முன்பிருந்தே பணியாற்றிய தொகுதிகளான கோவை தெற்கு, நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய இடங்களில் வெற்றி பெற்றோம். தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில், பெரும் முன்னேற்றம் இல்லை.அரவக்குறிச்சி, தாராபுரம், ஊட்டி, திட்டக்குடி உள்ளிட்ட பல தொகுதிகளில் இந்தச் சிக்கல் இருந்தது. முன்னரே பணியாற்றி இருந்தால் கூடுதலான இடங்களை பெற்றிருக்கலாம். கடைசி நேரத்தில் தொகுதி பெற்ற நிலையிலும் கடுமையாக உழைத்து, வெற்றிபெற்ற இடம் தான், மொடக்குறிச்சி.


*தமிழகத்தில், 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்பிருந்தே மோடி எதிர்ப்பு பிரசாரம் துவங்கி விட்டது. அதே நிலை தான், தற்போதும் நீடிக்கிறதா?பொய்யர்கள் வெற்றிபெற்று விடுகின்றனர். அப்போது நாங்கள், இந்தப் பொய் பிரசாரத்தை சரியாக எதிர்கொள்ளவில்லை. இனி, அப்படி நடைபெறாது.


* தமிழகத்தில், தமிழர் விரோத கட்சியாக பா.ஜ., சித்திரிக்கப்படுகிறதே?யார் தமிழர் விரோதிகள். எங்கே பேசினாலும், எப்போது பேசினாலும், கம்பரையும், திருவள்ளுவரையும் மேற்கோள் காட்டி பேசும் பிரதமர், தமிழர் விரோதியா; 6.50 லட்சம் கோடி ரூபாய்க்கு நலத் திட்டங்களை தமிழர்களுக்கு வழங்கிய பா.ஜ., ஆட்சி, தமிழர் விரோத ஆட்சியா? சீன அதிபரை, மாமல்லபுரம் கூட்டி வந்து, தமிழர்களின் தொன்மையான பண்பாட்டை விளக்கி உலகறிய வைத்த மோடி, தமிழர் விரோதியா; நிச்சயம் இல்லை. மோடி தமிழர்களின் நண்பர்.


latest tamil newsஇந்த உண்மையை, நீங்கள் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டாமா?செல்லத்தான் வேண்டும். ஆனால், ஒருசில ஊடகங்கள், ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றன. தி.மு.க.,வும், அவர்களுடைய கூட்டணி கட்சியினரும் தான் தமிழர் விரோதிகள். அவர்கள் தான், தமிழர் நலன்கள் அனைத்தையும் காவு கொடுத்தவர்கள்.


* அப்படியானால், 'நீட்' தேர்வில் இருந்து, தமிழக மாணவர்களுக்கு விலக்குக் கொடுக்கலாமே?'நீட்' தேர்வுக்கு முன்னால் எத்தனை மாணவர்கள் மருத்துவ கல்வி வாய்ப்பை பெற்றனர்; 'நீட்'டுக்குப் பின், எவ்வளவு மாணவர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்தத் தகவலை, நாங்கள் விரைவில் பொதுவெளியில் வைப்போம். அப்போது, உங்களுக்கு உண்மை தெரியும்.


மேகதாது அணை கட்ட, கர்நாடக அரசு முயற்சி செய்கிறது; தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. பா.ஜ., எப்படி இதைக் கையாளப் போகிறது?நாங்கள் ஒரு தேசியக் கட்சி. எல்லா மாநிலங்களையும் சமமாகவே பாவிக்கிறோம். பிரதமர் மோடி, தேசிய பார்வையோடு இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணுவார்.மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்திலும் உள்ளது. நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை, இரு மாநிலங்களும் ஏற்றுச்செயல்பட வேண்டும்.


* பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்தத் தவறி விட்டதாக, கொந்தளிப்பு இருக்கிறதே?இதில் மூன்று அம்சங்கள் உள்ளன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இரண்டாவது, மத்திய அரசின் கலால் வரி; மூன்றாவது, மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி.இதில், கலால் வரி வாயிலாக கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதி மாநில அரசுகளோடு பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அப்படி பார்த்தால், மாநில அரசுகளுக்கு தான் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. அவர்கள் தாராளமாக வரியை மாற்றியமைத்து, பெட்ரோல், டீசல் விலையை குறைத்து, மக்களுக்கு சகாயம் செய்யலாம்.

மேலும், முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில், செயற்கையாக பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், எண்ணெய் கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. அவற்றை, தற்போது வட்டியோடு இன்றைய அரசு திரும்பச் செலுத்தி வருகிறது. இதுபோன்ற கடன் பத்திரத்தை வெளியிடும் அவலம், தற்போதைய அரசால் செயல்படுத்தப்படவில்லை என்பதை, கவனத்தில் கொள்ள வேண்டும்.மேலும், மத்திய அரசை குறை சொல்லும் மாநிலங்கள், ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர ஒப்புக்கொள்ளுமா?


* ஜி.எஸ்.டி., வரி வருவாயில் உரிய பங்கை, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?துவக்கத்தில், சில மாதங்கள் தாமதமானது உண்மை தான். ஆனால், தற்போது, மாநிலங்களுக்கு தர வேண்டிய பங்கை, மத்திய அரசு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எந்த நிலுவைத் தொகையும் இல்லை. எல்லாவற்றையும் பிரித்துக் கொடுத்து விட்டோம்.


* திடீரென, 'கொங்கு நாடு' பிரச்னை தலைதுாக்கியுள்ளதே?ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி அடையாளம் உண்டு. தனி மனிதராக, குடும்பமாக, சமூகமாக, மொழி ரீதியாக, ஜாதி ரீதியாக, இன ரீதியாக, பகுதி ரீதியாக, மாநில ரீதியாக கூட, தனித்தனி அடையாளங்கள் உள்ளன.இந்நிலையில், கொங்கு பகுதிக்கு என்று உள்ள, தனித்த அடையாளத்தை, நாங்கள் எடுத்துப் பேசினோம்.
அந்த மக்களின் விருப்பத்தை நாங்கள் முன்மொழிந்தோம். ஆனால், அதற்கு அர்த்தம் மாநிலத்தைப் பிரிப்பதல்ல. கர்நாடக மாநிலத்திலும், இதேபோன்று பல்வேறு பகுதிகள், தனித்தனி அடையாளத்தோடு இருக்கின்றன. அங்கேயும் அந்த அடையாளங்களுக்கு மரியாதை செலுத்துகிறோம். நாங்கள் தமிழகம் உள்ளிட்ட, மாநிலங்கள் அனைத்தும் அடங்கிய, ஒருமித்த ஒரே தேசத்தையே விரும்புகிறோம். இங்கே தமிழ்நாட்டில், பிரிவினை பேசுவது போல், நாங்கள் பேசுவதில்லை. எங்களுடையது தேசிய ஒற்றுமையும், அணுகுமுறையுமே.


* 'ஒன்றியம்' என்ற சொல்லால், தமிழகத்தில் சர்ச்சை எழுந்துள்ளதே. அதற்கு பதிலடியாகத் தான், 'கொங்கு நாடு' கோஷம் எழுப்பப்படுகிறதா?தி.மு.க.,வும், கூட்டணி கட்சியினரும் தான் ஒன்றிய விஷயத்தை, பிரிவினைவாத எண்ணத்தோடு பேசுகின்றனர்.இந்த விவகாரத்தை, கொங்கு நாடு கோஷத்தோடு முடிச்சுப் போடக்கூடாது. கவர்னர் கூட, 'ஜெய்ஹிந்த்' சொல்லவில்லை என்று, பெருமை பேசுவது ஏற்கத்தக்கதல்ல.


இனி, தமிழகத்தில் பா.ஜ., பிரசாரம் எப்படி இருக்கும்?தமிழர்களின் தொன்மையையும், பண்பாட்டையும் எடுத்துச் சொல்வதாக இருக்கும். உதாரணமாக, தமிழர்கள் காசி நகருக்குச் செல்கின்றனர். வட நாட்டினர், ராமேஸ்வரம் நோக்கி வருகின்றனர். கர்நாடகத்தில் உள்ளவர்கள், திருவண்ணாமலை வருகின்றனர்.

தமிழர்கள், சபரி மலை யாத்திரை செல்கின்றனர்.இதெல்லாம் சொல்வது ஒன்று தான். தமிழகம் என்பது ஆன்மிக பூமி. சனாதன தர்மம் இல்லையெனில், தமிழகம் இல்லை. சனாதன தர்மத்தையும், தமிழகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழக அரசின் சின்னம் என்ன; ஸ்ரீவில்லிபுத்துார் கோபுரம். தமிழத்தின் வேரைத் தேடகூடியவர்கள், அதன் சனாதன தர்மத்தை விலக்கி விட்டுப் பார்க்க முடியாது.இவர்களுக்கு, வேர் ஒன்றும் ஜெருசலேமிலோ, மெக்காவிலோ இல்லை. அது இங்கே, இந்த மண்ணில் தான் இருக்கிறது. இதை வலியுறுத்தித் தான், இனி எங்கள் பிரசாரம் இருக்கும். ----இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் --

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X