நாமக்கல் : மதுபானங்கள் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக, குடோன்களில் தேங்கியுள்ள சரக்குகளை மட்டும் விற்று தீர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வு காரணமாக, நாமக்கல் உள்ளிட்ட, 11 மாவட்டங்களில் கடந்த வாரம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மது விற்பனை, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஊரடங்கிற்கு முன் கிடங்குகளில் விற்காமல் இருந்த, 90 நாட்களுக்கும் மேலான மதுபானங்களை மட்டுமே, சில்லரை விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
கடந்த, 50 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததால் பிரீமியம் எனப்படும் பழைய மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த, 10 நாட்களாக, 100 முதல், 150 ரூபாய் வரை உள்ள மதுபானங்கள் விற்பனை முடிந்து விட்டது. ஆனால், 200 ரூபாய்க்கு மேலுள்ள புதிய ரக மதுபானங்கள் விற்பனையாகாமல் உள்ளன. அந்த மதுபானங்களை குடிமகன்களுக்கு கட்டாயமாக விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விரைவில் மதுபானங்கள் விலையை அரசு உயர்த்த உள்ளதால், பழைய விலை மதுபானங்களை விற்பனை செய்து முடிக்க, அனைத்து கடை மேற்பார்வையாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து, டாஸ்மாக் கடை ஊழியர்கள் கூறியதாவது: ஊரடங்கு தளர்வில் கடைகள் திறக்கப்பட்ட நாளில் இருந்து அதிகளவில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் சில்லரை விற்பனைக்கு வரவில்லை. ஊரடங்கிற்கு முன் கடையில் விற்காமல் உள்ள மதுபானங்கள் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன.
இதே போல், விற்பனை செய்யப்படாமல் டாஸ்மாக், குடோனில், 90 நாட்களுக்கு மேலாக இருப்பு வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் தான் தற்போது கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். இதனால் விற்பனையும் மிகவும் குறைவாக உள்ளது. தாங்கள் விரும்பிய மதுபானங்கள் கிடைக்காததால், குடிமகன்கள் தகராறில் ஈடுபடுகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரெங்கநாதன் கூறியதாவது: கொரோனா தொற்று பரவல் காரணமாக மது தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளது. தற்போது வாரத்திற்கு, குறிப்பிட்ட அளவு சரக்கு மட்டுமே அனுப்புகின்றனர். இதனால் அதிகமாக விற்பனை செய்யப்படும் மதுவகைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, இருப்பிலுள்ள மதுபானங்களை விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாடு, ஒரு வாரத்தில் குறைந்து விடும். விலை உயர்வு குறித்து அறிவிப்பு வந்தால் தான் தெரியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE