தமிழக நிகழ்வுகள்
1. வேலை வாங்கித்தருவதாக மோசடி; எஸ்.பி.,யிடம் மனு
கோவை : வேலை வாங்கித்தருவதாக பலரிடம், லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, எஸ்.பி., யிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி, நொச்சிக்குட்டையை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவர் நேற்று மாவட்ட எஸ்.பி., செல்வ நாகரத்தினத்திடம் அளித்த புகார் மனு:கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஆத்மா சிவக்குமார். அவர் தனக்கு அ.தி.மு.க., அமைச்சர்கள் பலரையும் தெரியும் எனவும், அரசு வேலை வாங்கித்தருவதாகவும் கூறினார். அதற்காக, ரூ.10 லட்சம் செலவாகும் என தெரிவித்தார்.பல கட்டங்களாக, எட்டு லட்சம் ரூபாய் வரை வழங்கினேன். ஆனால், அவர் கூறியது போல், வேலை வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மாரிச்சாமி உட்பட, 15 பேர் மாவட்ட எஸ்.பி., யிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஆத்மா சிவக்குமாரிடம் கேட்க அவரது மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது, உபயோகத்தில் இல்லை எனவும், மற்றொரு எண்ணை தொடர்பு கொண்ட போது, தவறான எண் எனவும் தெரிவிக்கப்பட்டது.

2. பெண்ணிடம் அத்துமீற முயன்றவர் மரணம் ; திருவள்ளூர் போலீசார் தொடர் விசாரணை
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபர், உயிரிழந்த சம்பவம் குறித்து, மாவட்ட காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, ஜானகிபுரத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம். இவர், தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன், மீஞ்சூர் அடுத்த வழுதிகைமேடில், மீன் பண்ணையில் தங்கி வேலை செய்து வருகிறார்.கடந்த, 11ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த பூங்காவனத்தின் மனைவியிடம், வட மாநிலத்தைச் சேர்ந்த, 30 வயது வாலிபர், தவறாக நடக்க முயன்றார்.
மனைவியின் கூச்சலை கேட்டு, பூங்காவனம் ஓடிவந்தார். இருவரும் சேர்ந்து விரட்டும்போது, அந்த வாலிபர் தவறி விழுந்ததில் இறந்து விட்டார். இறந்தவரின் உடலை, மீஞ்சூர் போலீசார் கைப்பற்றி, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்படி, பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கற்பழிப்பு முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண், இருளர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், வன்கொடுமை தடுப்பு சட்டமும் சேர்க்கப் பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அரசு வழக்கறிஞரின் அறிவுரை மற்றும் கருத்துரு பெற்று, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3. தூத்துக்குடியில் ரூ.5 கோடி போதை பொருள் பறிமுதல்
துாத்துக்குடி--தூத்துக்குடி வண்ணார்தெருவில் டி.ஆர்.ஐ.,எனப்படும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் ஒரு டூவீலரை மறித்து சோதனையிட்டனர். அதில் இருந்த 5 கிலோ கஞ்சா எண்ணெய் ஹசீஷ் போதைபொருளை பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ.5 கோடியாகும். கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து கொண்டு வந்து, கடல் வழியே வெளிநாட்டிற்கு கடத்த திட்டமிட்டிருந்தனர். கடத்தல்காரர்கள் யாரையும் கைது செய்ததாக தகவல் இல்லை.
4. எட்டு மாற்றுத் திறனாளிகளிடம் ரூ. 15.34 லட்சம் மோசடி: 2 பேர் கைது
கடலுார் : மாற்றுத் திறனாளிகளிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 15 லட்சத்து 34 ஆயிரம் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம் புவனகிரி, அழிச்சிகுடியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ராதாகிருஷ்ணன். இவரது மனைவி மணிமொழி, 32; இவர், கடந்த 14ம் தேதி கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:கணவர் ராதாகிருஷ்ணனுக்கு, சிதம்பரம், மதுராந்தகநல்லுார் மாற்றுத் திறனாளி சரவணன், 33; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது நண்பர் கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளி அலுவலகத்தில் தற்காலிக டிரைவராக பணிபுரிந்த கடலுார், வரக்கால்பட்டு பரந்தாமன், 35; என்பவரின்அறிமுகம் கிடைத்தது. எனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக எனது கணவரிடம் கூறினர். இதனை நம்பி கடந்தாண்டு ரூ. 2 .50 லட்சம் வழங்கினோம். ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டிருந்தது.

இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து சரவணன், பரந்தாமனை தேடி வந்தனர். குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் விக்ரமன், சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் நேற்று கைது செய்து விசாரித்தனர். இதில், ராதாகிருஷ்ணன் மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 2.50 லட்சம் மோசடி செய்ததை ஒப்புக் கொண்டனர்.இதேப் போல் கடந்த 2017ல் அரசு வேலை வாங்கித் தருவதாக மாற்றுத் திறனாளிகள் சிதம்பரத்தைச் சேர்ந்த கொளஞ்சிப்பனிடம் ரூ. 3.50 லட்சம், விருத்தாசலம் அய்யாசாமியிடம் ரூ. 3.20 லட்சம், முருகனிடம் ரூ. 5.10 லட்சம், மூன்று சக்கர சைக்கிள் வாங்கித் தருவதாக சிதம்பரம் முத்துக்குமாரசாமி, முத்துலட்சுமியிடம் தலா ரூ. 12 ஆயிரம், பண்ருட்டி புவனேஸ்வரியிடம் ரூ. 20 ஆயிரம், ஸ்ரீமுஷ்ணம் மைதிலியிடம் ரூ. 60 ஆயிரம் என ரூ. 12 லட்சத்து 84 ஆயிரம் மோசடி செய்தது தெரிந்தது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. 8 மாற்றுத் திறனாளிகளிடம் மொத்தம் ரூ. 15 லட்சத்து 34 ஆயிரம் மோசடி செய்தது குறிப்பிடத்தக்கது.
5. வீடு புகுந்து 18 சவரன் நகை கொள்ளை
திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை அடுத்த மேலந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி, 44; இவரது மனைவி ஜெயந்தி. இருவரும் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு, கூலி வேலைக்குச் சென்றனர். மதியம் 12:00 மணிக்கு ஜெயந்தி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பிரிட்ஜில் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து திறந்து அதில் இருந்த 18 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள்கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.தகவலறிந்த டி.எஸ்.பி., கங்காதரன், இன்ஸ்பெக்டர் பாபு, மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
இந்தியாவில் குற்றங்கள்
பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகளான பிலால் அகமது சோபி, இர்பான் அகமது பாட் ஆகியோரை, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீசார் நேற்று சுற்றி வளைத்தனர். இருதரப்பினருக்குமான துப்பாக்கிச்சண்டையில், பயங்கரவாதிகள் இருவரும் கொல்லப்பட்டனர். காயமடைந்த இரு போலீசார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

உலக நிகழ்வுகள்
இந்திய புகைப்பட செய்தியாளர் ஆப்கன் போர்க்களத்தில் பலி
காபூல்:இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக், 42, ஆப்கனில் ராணுவத்துக்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்த சண்டையில் கொல்லப்பட்டார்.
'புலிட்ஸர்' விருது பெற்ற, இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக். 'ராய்டர்ஸ்' செய்தி நிறுவனத்திற்காக பணியாற்றி வந்த இவர், ஆப்கன் போர் தொடர்பான புகைப்படங்கள் எடுக்க, அந்நாட்டில் முகாமிட்டு இருந்தார். காந்தகாரில் உள்ள, ஸ்பின் போல்டக் மாவட்டத்தில் தலிபான் - ஆப்கன் படையினர் இடையே பயங்கர சண்டை நடந்தது.
இங்கு செய்தி சேகரிப்பு மற்றும் புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த டேனிஷ் சித்திக், போர் களத்தில் குண்டடிபட்டு பலியானார்.சித்திக் இறந்ததை, ஆப்கனுக்கான இந்திய துாதர் பரீத் உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில்,''நெருங்கிய நண்பரும், புகைப்பட செய்தியாளருமான டேனிஷ் சித்திக்கின் மறைவு, கடும் அதிர்ச்சி அளிக்கிறது.இரண்டு வாரங்களுக்கு முன், காபூலில் இருந்து, காந்தகார் கிளம்பியபோது கடைசியாக அவரைச் சந்தித்தேன்,'' என்றார்.
ரோஹிங்கியா அகதிகள் படும் அவலங்களை படம் பிடித்து, வெளி உலகிற்கு அவற்றை தெரியப்படுத்தியதற்காக, 2018ல், புலிட்ஸர் விருது, டேனிஷ் சித்திக்கிற்கு கிடைத்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி தேவைதெற்காசிய நாடான ஆப்கனிஸ்தானில், பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தினர் வாபஸ் பெறப்பட்டு வருகின்றனர். இதையடுத்து ஆப்கன் படைகள் - தலிபான்கள் இடையே பயங்கர போர் மூண்டுள்ளது. ஆப்கனின், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களின் மறுவாழ்வுக்கு, ஐ.நா., நிதி திரட்டி வருகிறது. இது குறித்து, ஐ.நா., மனிதாபிமான குழு தலைவர் ரமீஸ் அலக்பரோவ் கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் எட்டு கோடி பேருக்கு நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீட்டெடுக்க, 9,750 கோடி ரூபாய் நிதி அளிக்கும்படி ஐ.நா., முறையிட்டது. இதில், 3,375 கோடி நிதியை அமெரிக்கா அளித்துள்ளது. மேலும், 6,375 கோடி ரூபாய் தேவை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE