டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய இந்தத் தொடர், கோவிட் வைரஸ் பெருந்தொற்றால் தற்போது நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதை 'டோக்கியோ 2020' தலைமை நிர்வாக அதிகாரி தோஷிரோ முட்டோ உறுதிப்படுத்தி உள்ளார்.

ஆனால் தொற்று பாதித்த நபர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. 'பாதிக்கப்பட்டவர் எந்த நாட்டு குடிமகன் என்பதை தெரிவிக்க வேண்டாம்' என, முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஒலிம்பிக் ஏற்பாட்டுக்கு குழு முடிவு செய்துள்ளது. தொற்றுக்கு உள்ளானவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும்; விளையாட்டு வீரர் அல்ல என்றும்; ஆனால் விளையாட்டு ஏற்பாட்டுக்காக வந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 115க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது, ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் மிகப் பெரிய இந்திய குழு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 18 விளையாட்டுகளை உள்ளடக்கிய மொத்தம் 69 போட்டிகளில் இந்தியா பங்கேற்பதும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE