சண்டிகர் : ''காங்கிரஸ் தலைவர் எடுக்கும் எந்த முடிவையும் அனைவரும் ஏற்போம்,'' என, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறினார்.
பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது.முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், முன்னாள் அமைச்சரும், கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் நிலவுகிறது.
இருவரையும் டில்லிக்கு வரவழைத்து காங்கிரஸ் தலைமை பேசியது.இதற்கிடையில், டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் சித்து நேற்று முன்தினம் சந்தித்தார். சித்துவை காங்., தலைமை அடிக்கடி சந்தித்து பேசுவது, முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு அதிருப்தியை ஏறபடுத்தியது. இதையடுத்து, காங்., தலைவர் சோனியாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், 'பஞ்சாப் மாநில விவகாரங்களில் தலையிட வேண்டாம்' என, அவர் கூறியிருந்ததாக தெரிகிறது.இதனால், பஞ்சாபில் காங்கிரஸ் பிளவுப்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் நேற்று காலை சண்டிகருக்கு சென்று, முதல்வர் அமரீந்தர் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
அமரீந்தர் சிங்கை ராவத் சமாதானப்படுத்தியதாக தெரிகிறது. சந்திப்புக்கு பின், அமரீந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் கூறியதாவது:ராவத் - அமரீந்தர் சந்திப்பு சுமுகமாக நடந்தது. காங்., தலைவர் எடுக்கும் எந்த முடிவையும் அனைவரும் ஏற்போம் என அமரீந்தர் தெரிவித்துள்ளார். அமரீந்தர் தெரிவித்த சில பிரச்னைகள் பற்றி கட்சி தலைமையிடம் பேசுவதாக ராவத் உறுதியளித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
ஜாக்கருடன் சித்து சந்திப்பு
இதற்கிடையில், பஞ்சாப் மாநில காங்., தலைவர் சுனில் ஜாக்கரை, நவ்ஜோத் சிங் சித்து நேற்று சந்தித்தார்.