புதுடில்லி : 'பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச துரோக சட்டம், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுக்குப் பின்னும் தொடரவேண்டுமா' என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளதை, பலதரப்பினரும் வரவேற்றுள்ளனர். இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தேச துரோக சட்டத்தை, 1837ல் பிரிட்டிஷ் அரசியல்வாதியும், வரலாற்று ஆசிரியருமான தாமஸ் மெக்காலே உருவாக்கினார். 1860-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் இயற்றப்பட்ட போது, இந்தச் சட்டம் முதலில் அதில் சேர்க்கப்படவில்லை. பின், 1870-ம் ஆண்டு சிறப்பு மசோதா இயற்றப்பட்டு இந்திய தண்டனைச் சட்டத்தில், இது இணைக்கப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தில் 124 ஏ பிரிவுதான் தேச துரோகத்தை வரையறுக்கிறது. அரசுக்கு எதிராகப் பேசுதல், எழுதுதல், அரசை அவமதிக்கும் விதத்தில் நடத்தல் அல்லது அவ்வாறு நடப்பவர்களை ஊக்குவித்தல் போன்ற செயல்கள் தேச துரோகமாகக் கருதப்படுகின்றன.
தண்டனை என்ன
தேச துரோக வழக்கு பதியப்பட்டால் ஜாமினில் வர முடியாது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் மூன்று ஆண்டுகள் குறைந்தபட்ச தண்டனையாகவும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனையும் கிடைக்கலாம். சில நேரங்களில் அபராதமும் விதிக்கப்படும். அரசுப் பணிகளில் சேர முடியாது. பாஸ்போர்ட்டை நிரந்தரமாகவோ அல்லது தேவைப்படும் போதோ, நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
ஆங்கிலேயரின் நோக்கம்
ஆங்கிலேய அரசுக்கு எதிராக நாடு முழுதும் சுதந்திர போராட்டம் தீவிரமடைந்ததால் அதை ஒடுக்கும் நோக்கில் தான் இந்த சட்டம் இயற்றப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது தான் இந்த சட்டம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.ஆங்கிலேய அரசுக்கு எதிராக கட்டுரைகள் எழுதிய பால கங்காதர திலகர், மஹாத்மா காந்தி உட்பட பலர், இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என காந்தி, நேரு உட்பட பலரும் வலியுறுத்தினர். ஆனால் சுதந்திரத்துக்கு பின்னும் இந்த சட்டம் ரத்து செய்யப்படவில்லை.
சுதந்திரத்துக்கு பின், அரசியல் தலைவர்கள் மீது தேச துரோக வழக்குகள் பாய்வது தொடர்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என, மத்தியில் ஆட்சியில் இருந்த எந்த அரசும் நினைக்கவில்லை. மாறாக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை ஒடுக்கும் நோக்கில் இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக தேச துரோக வழக்குகள் அதிகரித்துள்ளன. பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், படைப்பாளர்கள், சினிமா இயக்குனர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என, பலர் மீது இந்த சட்டம்பாய்ந்துள்ளது.
'எடிட்டர்ஸ் கில்டு'
இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் இந்த சட்டத்தை ஆதரித்தும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 'வன்முறை மற்றும் சட்டவிரோதமாக அரசை அகற்றுவதற்கான முயற்சிகள் நடந்தால், அவற்றிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது' என, ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.'இந்திய அரசியல் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள பேச்சு, கருத்து சுதந்திரத்தை இந்தச் சட்டம் பறிக்கிறது' என, எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
தேச துரோக சட்டத்தை கொண்டு வந்த பிரிட்டன், தங்கள் நாட்டில் 2009ல் இந்த சட்டத்தை ரத்து செய்துவிட்டது.நியூசிலாந்து, இந்தோனேசியா, தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் தேச துரோக சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த சட்டம் இருந்தாலும், பேச்சு சுதந்திரத்துக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், 'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான எஸ்.ஜி. வோம்பாத்கரே ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என, கூறியிருந்தனர். இந்த மனுவை சமீபத்தில் உச்ச நீதிமன்றம், 'பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச துரோக சட்டம், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுக்குப் பின்னும் தொடர வேண்டுமா' என கேள்வி எழுப்பியது. இதை பலரும் வரவேற்றுள்ளனர்.முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி உட்பட பலரும், பல தொண்டு நிறுவனங்களும் இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சட்டக் கமிஷன் கருத்து
தேசத்துரோக சட்டம் பற்றி சட்டக் கமிஷன் கூறுகையில், 'ஜனநாயகத்தில் அரசின் கொள்கைகள் பற்றி விவாதிக்கப்பட வேண்டும்.'விமர்சிப்பவர்கள் மீது தேச துரோக சட்டம் பாயக் கூடாது. விமர்சனத்தை ஏற்காவிட்டால் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும்' என
தெரிவித்துள்ளது.
சமீபத்திய வழக்குகள்
* சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவருக்கு ஜாமின் அளித்து டில்லி உயர் நீதிமன்றம் கூறுகையில், 'அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்களை தேச துரோக சட்டத்தின் கீழ் கைது செய்வதை நிறுத்த வேண்டும்' என்றது.
* ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சமீபத்தில் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்களுக்கு 50 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது.