சென்னை : காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரில், 14.75 டி.எம்.சி., குறைக்கப்பட்டு உள்ளது. அந்த நீரை பெறுவதற்கு, தமிழக அரசு மீண்டும் சட்டப் போராட்டத்தை துவங்குமா என்ற கேள்வி, டெல்டா விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.தமிழகம் - கர்நாடகா இடையே, காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் நீண்ட காலமாகவே பிரச்னை இருந்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், 2007 பிப்ரவரியில் இறுதி தீர்ப்பை அளித்தது.
உத்தரவு
அதில், தமிழகத்திற்கு 192 டி.எம்.சி., நீர் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கர்நாடகாவிற்கு 280.75 டி.எம்.சி., நீர் ஒதுக்கப்பட்டது. தமிழக அரசின் நீண்ட சட்டப் போராட்டம் காரணமாக, 2014 மே மாதம், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து, 2017ல் கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. தமிழகத்திற்கு 132 டி.எம்.சி., நீரை மட்டுமே வழங்க முடியும் என்று, அதில் வலியுறுத்தப்பட்டது. தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகள் தரப்பிலும், தீர்ப்பில் விளக்கம் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கில், 2018 பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழகத்திற்கு 192 டி.எம்.சி.,க்கு பதிலாக, 177.25 டி.எம்.சி., காவிரி நீரை மட்டுமே வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்திற்கான நீரின் அளவு 14.75 டி.எம்.சி., குறைக்கப்பட்டது. கர்நாடகாவிற்கான நீரின் அளவு 284.75 டி.எம்.சி.,யாக அதிகரிக்கப்பட்டது. தமிழகம் கூடுதலாக 70 டி.எம்.சி., கேட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.தமிழகத்திற்கு குறைக்கப்பட்ட நீரில் 4.75 டி.எம்.சி.,யை, பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கும், 10 டி.எம்.சி.,யை, தொழிற்சாலைகளின் தேவைக்கும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. தமிழகத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தை விரைந்து அமைக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டில், இந்த ஆணையம் இயங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
அதிருப்தி
ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, தனியாக தலைவரை மத்திய அரசு இன்னும் நியமிக்கவில்லை. மத்திய நீர்வள ஆணையர் தலைமையில் ஆணைய கூட்டம் நடந்து வருகிறது. இதில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை, கர்நாடக அரசு மதிப்பதில்லை. தமிழகத்திற்கு 14.75 டி.எம்.சி., நீர் குறைக்கப்பட்ட போது, தி.மு.க., - காங்., - பா.ம.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவும் அதிருப்தி தெரிவித்தன. இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும் என, அப்போதைய அ.தி.மு.க., அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட திருப்தியோடு, சட்டப் போராட்டத்தை அ.தி.மு.க., அரசு மறந்து போனது. காவிரியில், மேகதாது அணை கட்டுமானத்தை எதிர்ப்பது தொடர்பான வழக்கில் மட்டுமே கவனம் செலுத்தியது. தமிழகத்திற்கு 14.75 டி.எம்.சி., நீர் கிடைக்காததால், டெல்டா மாவட்டங்களில் பாசன பரப்பை அதிகரிக்க முடியவில்லை.
மழையளவு குறையும் காலங்களில், பாசன தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவே, காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ளது போன்று, தமிழகத்திற்கு 192 டி.எம்.சி., நீரை பெறுவது அவசியம். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும். இதற்காக மீண்டும் சட்டப் போராட்டத்தை, தமிழக அரசு கையில் எடுக்க வேண்டும்.இவ்விஷயத்தில், மறைந்த ஜெயலலிதா பாணியில், முதல்வர் ஸ்டாலின் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகள், பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE