சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, அக்கட்சியினர் கொடுத்த வரவேற்பும், அவரை வாழ்த்தி ஒட்டப்பட்ட பிரம்மாண்ட போஸ்டர்களும், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட திராவிட கட்சிகளை திகைக்க வைத்துள்ளன.
தமிழக பா.ஜ., தலைவராக, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான அண்ணாமலையை, அக்கட்சியின் தேசிய தலைமை நியமித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், பா.ஜ.,வினர், இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களில், அண்ணாமலையே மிகவும் இளையவர். தலைவர் பொறுப்பேற்க, அண்ணாமாலை, கோவையில் இருந்து, 14ம் தேதி காலை கிளம்பினார். வழிநெடுக ஒவ்வொரு நகரின் எல்லையிலும், திரளாக கூடிய கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பூக்களை துாவி, 'கட் அவுட்' வைத்து, உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றபடி, நேற்று முன்தினம், சென்னை வந்த அண்ணாமலை, தி.நகரில் உள்ள கட்சி அலுவலகமான கமலாலயத்தில், தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்றார். அவரை வரவேற்று, சென்னையில், அண்ணா சாலை, காமராஜர் சாலை என, அனைத்து முக்கிய சாலைகளின் இருபுறங்களிலும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அண்ணாமலை படங்கள் அச்சிடப்பட்ட பிரம்மாண்ட போஸ்டர்களை, பா.ஜ.,வினர் ஒட்டினர். கமலாலயம் அமைந்துள்ள சாலையில் வாழை மரம், தோரணம் கட்டி, மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

தி.மு.க., - அ.தி.மு.க., பொதுக்குழு, செயற்குழு போன்ற முக்கிய நிகழ்ச்சிகளின்போது, ஆளுமைமிக்க தலைவர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளிப்பது போன்று, பா.ஜ.,வினர், அண்ணாமலைக்கு வரவேற்பு அளித்தனர். அண்ணாமலைக்கு கொடுத்த பிரம்மாண்ட வரவேற்பு மற்றும் போஸ்டர்கள், திராவிட கட்சியினரை திகைக்க வைத்துள்ளது.