கொங்கு நாடு கனவை தகர்க்க வேண்டுமானால், ஈரோடு, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் அம்பேத்கர் சிலை அமைத்து, ஜனநாயகப்படுத்த வேண்டும்.
-விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலர் வன்னிஅரசு
'இத்தனை காலமும் இதை, தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் உங்களைப் போன்ற தலித் கட்சிகளும் வலியுறுத்தவில்லையே...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலர் வன்னிஅரசு அறிக்கை
தமிழகத்தில் ஜாதி, மத மோதல்களை உருவாக்குவோர் யாராக இருந்தாலும், அவர்கள் தொழிலாளர் வர்க்கத்திற்கும், விவசாயிகளுக்கும், நாட்டிற்கும் துரோகம் செய்யும் கும்பல் என்பதை அடையாளம் கண்டு, அவர்களின் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.
-மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன்
'யாரை கூறுகிறீர்கள்... வழக்கமாக, பா.ஜ.,வைத் தான் இப்படி சாடுவீர்கள். பா.ஜ., அப்படி எதையும் செய்யவில்லையே...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன் அறிக்கை
உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருகிறது. நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்த தி.மு.க.,வினர் முயற்சிப்பர். அதற்கு யாரும் இடம்கொடுக்காமல் ஒற்றுமையுடன் தேர்தலை சந்தித்தால் வெற்றி நமக்கு தான்.
-அ.தி.மு.க., இலக்கிய அணி செயலர் வளர்மதி
'அப்போ, வெற்றி கஷ்டம் தான். ஏற்கனவே தலைமையே இரண்டாக உரசிக் கொண்டிருக்கிறது...' என, கூறத் துாண்டும் வகையில், அ.தி.மு.க., இலக்கிய அணி செயலர் வளர்மதி பேச்சு
பத்திரப்பதிவு துறையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள், இரண்டு மணி நேரத்தில் சரி செய்யப்படுகின்றன. மேலும், புகார் பெட்டியும் வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
- தமிழக வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி
'பத்திரப்பதிவு துறையில் அனைத்து செயல்பாடுகளையும் 'ஆன்லைனில்' செய்து விட்டால், லஞ்சம், ஊழலுக்கு வழி இருக்காதே...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், தமிழக வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி பேச்சு
மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சிக்கிறது. அதற்கு சொல்லும் பல காரணங்களில், மின் உற்பத்தியும் ஒன்று. கர்நாடகாவுக்கு மின்சாரம் தேவை என்றால் தமிழகம் வழங்கும்; அணை கட்டக் கூடாது.
-தமிழக காங்., தலைவர் அழகிரி
'நீங்கள் சொல்லி விட்டீர்கள்... ஏற்கனவே இங்கு மின் பற்றாக்குறை உள்ளது; இதில், கர்நாடகாவுக்கு எப்படி மின்சாரத்தை கொடுக்க முடியும்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி பேச்சு
தமிழகத்திற்கு தேவையான அனைத்து விவகாரங்களையும், தமிழக காங்., எழுப்பி தான் வருகிறது. எனினும், ஊடகங்கள் அவற்றிற்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுவதில்லை. அதுபோல, பா.ஜ., அமைச்சர்களையும் கேள்வி கேட்பதில்லை.
-தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்
'ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றால், 'தி.மு.க., கூட்டணிக்கு காங்., முழுக்கு' என்பது போல பரபரப்பாக ஏதாவதை காங்., சொல்ல வேண்டும்; எத்தனை காலத்திற்கு தான், 'ஜால்ரா' செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கும்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் அறிக்கை
அ.தி.மு.க.,வினர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாலும், தேர்தலில், கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்படாததாலும், ஜோலார்பேட்டை தொகுதியில் நான் தோற்றேன்.
-அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி
'அப்போ, பணம் கொடுத்தனர்; சிறுபான்மையின ஓட்டுகளை பெற்றனர் என, தி.மு.க., வெற்றி குறித்து முன் கூறியதெல்லாம் தவறா...' என, கேட்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி பேச்சு
இன்னும் ஆறே மாதங்களில், ஊடகங்கள் அனைத்தும் நம் வசம்' என, பா.ஜ., புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதன் மூலம், பா.ஜ., மதவாத, பாசிச கட்சி என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
-மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்
'அரசுக்கு எதிராக செயல்படும், கட்சி சார்பான ஊடகங்களை அவர் அப்படி சொன்னார்; எல்லா ஊடகங்களையும் சொன்னது போல திரித்து விட்டீர்களே...' என, காட்டமாக கூறத் துாண்டும் வகையில், மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை '
இந்த ஆண்டு தமிழக மாணவர்களுக்கு, 'நீட்' தேர்விலிருந்து விலக்கு கிடைக்கவில்லை என்றால், தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுக்கான இலவச பயிற்சியை அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
-மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்
'தேர்வு கிடையாது, அனுமதிக்க மாட்டோம் என பிரசாரம் செய்து வெற்றி பெற்றவர்கள் தான், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை
காங்கிரஸ் ஒரு என்.பி.ஏ., அதாவது, செயல்படாத சொத்து. அதை ஏலம் எடுப்பவர்கள் வரவேற்கப்படுகின்றனர். குறிப்பாக, பாகிஸ்தானில் இருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
-தமிழக பா.ஜ., பொறுப்பாளர் ரவி
ஏலம் விட, பா.ஜ., தயார் என்பது தெரிகிறது. ஏலத்தில் செல்ல, காங்., தயாராக வேண்டுமே; அதனிடம் கேட்டீர்களா...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் ரவி அறிக்கை
உலக வர்த்தக கூட்டமைப்பில் மீனவர்களுக்கு வழங்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற வளர்ந்த நாடுகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. எளியோரை காப்பதே மோடி அரசின் கொள்கை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
-தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர்
'இதெல்லாம், நீங்கள் சொல்லி தான் தெரிய வருகிறது. மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர்கள் சரியாக சொல்வதில்லையே...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர் அறிக்கை
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE