புதுடில்லி: இன்று (ஜூலை 19ல்) துவங்கும் பார்லி மழைக்கால கூட்டத்தொடரில் 17 மசோதாக்கள் வரை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கோவிட் இரண்டாம் அலை பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு கொண்டிருக்கும் வேளையில் பார்லி மழைக்கால கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. கூட்டத்தின் முதல் நாள் பல பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
கோவிட் தடுப்பூசி பற்றாக்குறை, பெட்ரோல் டீசல் விலை உயர்வை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கேள்வி கேட்க திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில் இக்கூட்டத் தொடரில் 17 மசோதாக்கள் வரை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் இன்று துவங்கி, அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடக்க உள்ளது.இந்தக் கூட்டத் தொடரில், மூன்று அவசர சட்டங்களுக்கான மசோதாக்கள் உட்பட 17 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
லோக்சபாவைச் சேர்ந்த 444 எம்.பி.,க்கள் மற்றும் ராஜ்யசபாவைச் சேர்ந்த 218 எம்.பி.,க்கள் குறைந்தபட்சம் ஒரு, 'டோஸ்' தடுப்பூசி போட்டுள்ளனர். சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மத்திய அமைச்சரவை சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த முருகன் உட்பட 36 பேர் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்று உள்ளனர்.

புதிய அமைச்சர்களை பிரதமர் மோடி, இரண்டு சபைகளிலும் அறிமுகம் செய்து வைப்பார். கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பாதிப்பு துவங்கியபோது ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், மூன்றாவது அலை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
அதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தடுப்பூசி கொள்கை தொடர்பாகவும் விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது