புதுடில்லி-பார்லிமென்ட் நிலைக்குழு உறுப்பினர்கள், பா.ஜ., மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பயணித்த விமானத்தை, பீஹாரை சேர்ந்த பா.ஜ., - எம்.பி.,யும், பைலட்டுமான ராஜிவ் பிரதாப் ரூடி இயக்கிய, 'வீடியோ' சமூகவலைதளங்களில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

பீஹாரின் சரண் லோக்சபா தொகுதியின் பா.ஜ., - எம்.பி., ராஜிவ் பிரதாப் ரூடி, 59. பா.ஜ., செய்தி தொடர்பாளராகவும் பதவி வகித்து வரும் இவர், பயணியர் விமானங்களை இயக்கும் பைலட்டாகவும் பணியாற்றி வருகிறார்.தி.மு.க., - எம்.பி., தயாநிதி கடந்த சில தினங்களுக்கு முன், டில்லியில் இருந்து சென்னைக்கு பயணித்த 'இண்டிகோ' விமானத்தை இவர் இயக்கினார். அப்போது அவரை விமானத்தில் சந்தித்து பேசியது குறித்து, தயாநிதி தன், 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில் மத்திய சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து துறைக்கான பார்லி., நிலைக்குழு உறுப்பினர்கள், பா.ஜ., மூத்த தலைவர்கள் சிலர் பயணித்த விமானத்தை, எம்.பி., ராஜிவ் பிரதாப் ரூடி சமீபத்தில் இயக்கினார்.

அப்போது பயணியரை வரவேற்று பேசிய ராஜிவ் பிரதாப் கூறியதாவது:இது வரலாற்றில் மிக அழகான நாள். பார்லி., நிலைக்குழுவின் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.,யுமான டி.ஜி.வெங்கடேஷ், பீஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, பா.ஜ., - எம்.பி.,யும், உத்தரகண்ட் முன்னாள் முதல்வருமான தீரத் சிங் ராவத் உள்ளிட்ட தலைவர்களை வரவேற்கிறேன்.நம்முடன் பயணிக்கும் மிக இளைய பயணியான, மனோஜ் திவாரியின் ஆறு மாத மகள் சன்விகாவையும் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.இதை கேட்ட பயணியர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த 'வீடியோ' சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE