சட்டசபை பா.ம.க., தலைவராக, ஜி.கே.மணி செயல்படுவதால் அவர் வகித்து வரும் கட்சித் தலைவர் பொறுப்பு, அன்புமணிக்கு வழங்கப்பட உள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., போட்டியிட்டு, 4 சதவீத ஓட்டுகளையும், நான்கு எம்.எல்.ஏ.,க்களையும் பெற்றுள்ளது. சட்டசபை பா.ம.க., தலைவராக, ஜி.கே.மணி தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் இரு பதவிகளில் செயல்பட்டு வருகிறார்.பா.ம.க., தலைவராக நீண்ட ஆண்டுகளாக, ஜி.கே.மணி இருந்து வருகிறார். அவர், ராமதாசின் நம்பிக்கைக்குரிய தலைவராகவும் உள்ளார். மாநில நிர்வாகத்தில் இளைஞர்கள் இல்லாததால், மேலிடத்திடம் தொடர்பு இல்லாமல் இடைவெளியும், தொய்வும் ஏற்பட்டுள்ளதாக தொண்டர்கள் கருதுகின்றனர்.
எனவே, கட்சியின் மாநில நிர்வாகத்தில் மூத்த நிர்வாகிகளும், இளைய நிர்வாகிகளும் இணைந்து பணியாற்றும் வகையில், நிர்வாகிகள் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியில் எழுந்துள்ளது. பா.ம.க., 33வது ஆண்டு விழாவை ஒட்டி, அக்கட்சி தொண்டர்கள், தங்களது வீடுகளில் கொடியேற்றி கொண்டாடினர்.அப்போது, கட்சி துவக்கி 33 ஆண்டுகள் ஆகியும் ஆட்சியை பிடிக்கும் இலக்கை அடைய முடியவில்லை என, ராமதாஸ் வருத்தம் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், 'ஆட்சியை பிடிக்கும் ராமதாசின் கனவை நனவாக்க, நான் உங்களை வழி நடத்துவேன்' என, கூறியிருக்கிறார்.'நான் வழி நடத்துவேன்' என, சூசகமாக அன்புமணி கூறியிருப்பது, விரைவில், அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சியை வழி நடத்துவார் என்பது தான் பொருள் என்கின்றனர், அக்கட்சி நிர்வாகிகள்.பா.ம.க., பொதுக்குழு கூடும்போது, கட்சியில் அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்கின்றனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE